![]()
சரீரம் _ விமர்சனம்
நடிப்பு: தர்ஷன், சார்மி, ஜெ மனோஜ், பாய்ஸ் ராஜன், ஷகீலா, மதுமிதா, புதுப்பேட்டை சுரேஷ், கௌரி, மிலா, ஜிவி பெருமாள்
தயாரிப்பு: ஜிவி பெருமாள்
இசை: பாரதிராஜா
ஒளிப்பதிவு: கே டோர்னளா பாஸ்கர், பரணிகுமார்
இயக்கம் :ஜிவி பெருமாள்
பி ஆர் ஓ: ஆர்.மணி மதன்
காதலுக்காக காதலர்கள் உறவுகளை இழந்து இருக்கிறார்கள்.
உடைமைகளை துறந்து இருக்கிறார்கள்.
ஏன் உயிரையே மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
காதலுக்காக நாக்கை அறுத்துக் கொண்ட நாயகனை கூட சினிமாவில் கண்டிருக்கிறோம்.
ஆனால் காதலர்கள் இருவர் உயிரோடு சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக புதுமையாகவும் புரட்சிகரமாகவும் என்ன செய்கிறார்கள் என்பதை சொல்லும் படம் தான் சரீரம்.
கல்லூரி ஒன்றில் படிக்கும் மாணவன் பிரியனும் மாணவி விஜயலட்சுமியும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர்.
பெரும் செல்வந்தர் ஒருவரின் மகளான விஜயலட்சுமியின் தாய் மாமன் சொத்துக்களை எல்லாம் அடைய வேண்டும், அத்துடன் விஜயலட்சுமியையும் மணந்து கொள்ள வேண்டும் என்று திட்டம் தீட்டி காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்.
ஒரு சந்தர்ப்பத்தில் அடியாட்களை அனுப்பி பிரியனை கொல்லும்படி ஏவி விடுகிறார்.
அவர்களுடன் சண்டையிட்டு மயங்கி விழும் பிரியன் இறந்து விட்டதாக எண்ணி அடியாட்கள் சென்று விடுகின்றனர்.
காதலன் இறந்து விட்டதாக எண்ணி விஜயலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறார். ஆனால் தக்க சமயத்தில் காப்பாற்றப்படுகிறார்.
விஜயலட்சுமியின் தாய் மாமனிடம் இருந்து தப்பித்து உயிருடன் சேர்ந்து இருக்க வேண்டும் என்பதற்காக பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள இருவரும் முடிவு செய்கின்றனர்.
முதல் கட்ட சிகிச்சை முடிந்ததும் இவர்கள் இருக்கும் இடம் தெரிந்து வந்த தாய் மாமனின் ஆட்கள் காதலர்களை கொல்லத் துடிக்கின்றனர்.
அப்போது ஓர் அதிர்ச்சிகரமான செய்தி தெரிய வருகிறது.
பாலியல் மாற்று அறுவை சிகிச்சை பூர்த்தியானதா?
காதலர்கள் இருவரும் உயிர் பிழைத்தார்களா? என்பது படத்தின் பிற்பகுதி.
புது முகங்கள் தர்ஷன் மற்றும் சார்மி இருவரும் முறையே பிரியனாகவும் விஜயலட்சுமியாகவும் திறம்பட நடித்திருக்கின்றனர்.
உயிர் தப்புவதற்காக பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் முடிவை எடுக்கும் காட்சியில் இருவரின் நடிப்பும் பார்வையாளர்களின் பரிதாபத்தை பெறும்படி அமைந்திருக்கிறது.
ஆயினும் பெண் வேடம் தர்ஷனுக்கு பொருந்தும் அளவுக்கு ஆண் வேடம் சார்மிக்கு பொருந்தவில்லை.
காதலர்களாக இருக்கும் போது இருவரது உயர வேறுபாடு அவ்வளவாக தெரியாத நிலையில், பாலின சிகிச்சைக்கு பிறகு இந்த உயர வேறுபாடு செயற்கையாக மேக்கப் போட்டது போல் பொருத்தமற்று தெரிகிறது.
பாலினமாற்று அறுவை சிகிச்சை மருத்துவராக வரும் ஷகீலா உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்படும் மாற்றங்களை முதற்கட்டம், இரண்டாவது கட்டம் என்று முழுமையாக விளக்குவது சிறப்பான காட்சி.
கதை வசனம் எழுதி படத்தை இயக்கியிருப்பவர் ஜி வி பெருமாள்.
வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்து அதை இயன்றவரை விறுவிறுப்பாக திரையில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் பெருமாள்.
பாரதிராஜாவின் இசையில் உருவான பாடல்கள் ரசிக்கும்படி அமைந்திருக்கின்றன.
டொர்நளா பாஸ்கர்_பரணி குமார் இருவரும் இணைந்து படத்தை ஒளிப்பதிவு செய்திருக்கின்றனர்.
அரைத்த மாவையே அரைக்கும் கதையம்சம் உள்ள படங்களை பார்த்து சலித்து போனவர்களுக்கு, சோதனை முயற்சியில் உருவான சரீரம் திரைப்படம் ஒரு மாறுபட்ட அனுபவத்தை தரும் என்பதில் ஐயமில்லை.


