Monday, April 13

ரைட் _ விமர்சனம்

Loading

ரைட் _ விமர்சனம்

நடிப்பு

நட்டி என்கின்ற நடராஜ், அருண் பாண்டியன், அக்ஷரா ரெட்டி, மூணாறு ரமேஷ், வினோதினி வைத்தியநாதன், ஆதித்யா சிவகுமார், யுவினா பார்த்தவி,

எழுத்து இயக்கம் :சுப்பிரமணியம் ரமேஷ்குமார்

தயாரிப்பு: ஆர்டிஎஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பாளர்கள் : திருமால் லட்சுமணன் டி சியாமளா

ஒளிப்பதிவு: எம் பத்மேஷ்

இசை: குணா பாலசுப்பிரமணியன் படத்தொகுப்பு :நாகூர் ராமச்சந்திரன்

கலை இயக்கம்: தாமு

தன் மகனை காணவில்லை என்று புகார் அளிக்க காவல் நிலையத்துக்கு வருகிறார் அருண் பாண்டியன்.

பிரதமரின் பாதுகாப்பு பணிக்காக நிலையத்தில் உள்ள பெரும்பாலான காவலர்கள் வெளியே சென்று விட்ட நிலையில் மீதமுள்ள ஓரிரு காவலர்களும் அருண்பாண்டியனை அலட்சியம் செய்கின்றனர்.

இந்த சூழலில் நிலைய எழுத்தர் மூணாறு ரமேஷ் இருக்கைக்கு அடியில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும், அவர் இருக்கையில் இருந்து எழுந்தால் அது வெடித்து சிதறும் என மர்ம தொலைபேசி ஒன்று காவல் நிலையத்துக்கு வருகிறது.

அவ்வளவுதான்… காவல் நிலையத்தில் மட்டுமல்ல படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கும் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது.

மர்ம மனிதனின் கட்டளைக்கிணங்க எல்லோரும் செயல்பட ஆரம்பிக்கின்றனர்.

அரசியல்வாதி ஒருவனின் மகனை காப்பாற்ற அநீதி இழைத்த காவல் அதிகாரியும், மூடப்பட்ட வழக்கை விசாரிக்க நீதிபதி ஒருவரும் நிலையத்துக்கு வர வேண்டும் என அந்த மர்மக்குரல் ஆணையிடுகிறது.

நிலையத்துக்கு உள்ளே மட்டுமல்ல வெளியேயும் சில இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக அந்தக்குரல் தெரிவிக்கிறது.

காவல் நிலையத்தில் இருந்து தப்ப  முயலும் ஒருவரும் வெடிகுண்டு வெடித்து பரிதாபமாக பலியாகிறார்.

காவல் நிலையத்துக்கு உள்ளேயே தற்காலிக நீதிமன்றம் அமைக்கப்பட, வினோதினி வைத்தியநாதன் வருகிறார்.

வழக்கு விசாரணை நடக்க நடக்க மர்ம முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழத் தொடங்குகின்றன.

துவக்கத்திலிருந்து இடைவேளை வரை நேர்கோட்டில் பயணிக்கும் விறுவிறுப்பான திரைக்கதை சஸ்பென்ஸ் நிரம்பியதாகவும் வெகுவாக ஆர்வத்தை தூண்டுவதாகவும் அமைந்திருக்கிறது. ஆனால் படத்தின் இரண்டாம் பகுதியிலோ ரோலர் போஸ்டர் போல் எதிர்பாரா திருப்பங்களை தரும் வகையில் ஏற்ற இறக்கத்துடன் பயணிக்கிறது திரைக்கதை.

மிடுக்கான காவல் அதிகாரியாக வரும் நட்டி நடராஜ், மகள் பாசத்தில் கரைந்து உருகும் காட்சியில் முத்திரை பதிக்கும் வகையில் நடித்திருக்கிறார்.

காணாமல் போன மகனை தேடி அலையும் அப்பா வேடத்தில் வரும் அருண் பாண்டியனுக்கு அவரது குரல் வெகுவாக உதவி இருக்கிறது.

இழுத்து இழுத்து பேசும் அந்தக் குரல் அவர் மீது பரிதாபத்தை ஏற்படுத்தி விடுகிறது .

திருமண பத்திரிகை கொடுக்க வந்து மாட்டிக்கொள்ளும் சப்-இன்ஸ்பெக்டர் வேடத்தில் அக்சரா ரெட்டி நிறைவாகச் செய்திருக்கிறார்.

பாடல்கள் பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்றாலும் பின்னணி இசையில் கவனம் ஈர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் குணா பாலசுப்பிரமணியன்.

ஒரு சில காட்சிகளைத் தவிர மொத்த படமும் ஒரு காவல் நிலையத்திலேயே படமாக்கப்பட்டு இருந்தாலும் சற்றும் சலிப்பு ஏற்படா வண்ணம் அமைந்திருப்பதற்கு ஒளிப்பதிவாளர் பத்மேஷ் மற்றும் கலை இயக்குனர் தாமுவும் தான் காரணம் என்றால் மிகையாகாது.

சுப்ரமணியம் ரமேஷ் குமார் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவான ரைட் படம் சஸ்பென்ஸ் பெரியவர்களை வெகுவாக கவரும்.

மதிப்பெண்3.25/5