Thursday, April 30

ராயல் சல்யூட்  சினிமா விமர்சனம்

Loading

ராயல் சல்யூட்  சினிமா விமர்சனம்

இந்திய ராணுவ வீரன் சக்திவேல் (பிரதீப்) இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போரில் குண்டடிபட்டு உயிருக்குப் போராடும் தனது உயரதிகாரியை காப்பாற்றுவதற்கான முயற்சியில் இருக்கிறான். அந்த நேரத்தில் அவனது உயிருக்கு ஆபத்து உருவாக, அப்போதைய போரில் ஈடுபட்டிருக்கும் பாகிஸ்தான் வீரன் ஒருவன் சக்திவேலின் உயிரைக் காப்பாற்றுகிறான். அடுத்த சில மணி நேரத்திலேயே சக்திவேலுக்கு தன்னைக் காப்பாற்றியவனை கொல்ல வேண்டிய கட்டாயம் உருவாகிறது. அந்த நிலைமையில் அவன் என்ன முடிவெடுக்கிறான் என்பது படத்தின் உணர்வுபூர்வமான நிறைவுக் காட்சி.

தனது உயரதிகாரியை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அவரை முதுகில் தூக்கிச் சுமந்து பல கிலோ மீட்டர் துரம் நடப்பது, உயிருக்கு ஆபத்தான நிலைமையில் சிக்கித் தவிப்பது,  ஆபத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிய பாகிஸ்தான் நாட்டு இந்திய ராணுவ வீரனை சுட்டுக் கொல்லச் சொல்கிற தனது உயரதிகாரியின் உத்தரவை மதிப்பதா? மதிக்காமல் தேச துரோகியாகி நிற்பதா? என்ற குழப்பம் ஏதுமின்றி கடினமான முடிவெடுப்பது என இயல்பான நடிப்பால் கவர்கிறார் கதைநாயகன் பிரதீப்.

போரில்லா உலகை விரும்புகிற மனநிலையிலிருந்து தன் எதிரி நாட்டு ராணுவ வீரனின் உயிரைக் காப்பாற்றுகிற பாகிஸ்தான் ராணுவ வீரனாக சுபாஷ் சிம்பு தந்திருக்கும் மனிதாபிமானம் பொங்கும் உணர்வை பிரதிபலிக்கும் நடிப்பு மனதில் பதிகிறது.

தனது பதவி உயர்வுக்காக, தனக்கு கீழ் பணியாற்றும் ராணுவ வீரன் சக்திவேலை கொல்ல நினைத்து திட்டமிட்டு செயல்படுத்துவராக அமரன் எம் ஜி ஆர் தந்திருக்கும் நடிப்பில் வில்லத்தனம் போதுமான அளவில் இருக்கிறது.

கதைநாயகன் சக்திவேலின் மனைவியாக அர்ச்சனா சிங், நண்பனாக இன்பா, இந்திய ராணுவ மேஜராக யுவா யுவராஜ், ராணுவ அதிகாரிகளில் ஒருவராக ஜனனி என மற்ற நடிகர் நடிகைகள் தங்களின் கதாபாத்திரங்கள் கவனம் பெறுகிற அளவில் நடித்திருக்கிறார்கள்.

பின்னணி இசையை காட்சிகளின் பரபரப்புக்கு விறுவிறுப்பு கூட்டும் விதமாக வழங்கியிருக்கும் ஜெய் கிஷான், கதைக்குப் பொருத்தமான பாடல்களுக்கு சுறுசுறுப்பூட்டும் விதமாக இசையமைத்திருக்கிறார்.

பிரமாண்டமாக எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் எளிமையாக அமைக்கப்பட்டிருக்க அதற்கேற்ப ஒளிப்பதிவில் நேர்த்தியைக் கொண்டு வந்திருக்கிறார் கணேஷ் முத்தையா.

நாட்டுப் பற்று சார்ந்த கதையில் போரில்லா உலகை விரும்புகிற உலகின் பெரும்பாலான மக்களின் உணர்வைப் பிரதிபலித்து, நட்பின் ஆழத்தைப் புகுத்தி கருத்துள்ள படைப்பாக படத்தை இயக்கி பாராட்டுக்குரியவராகிறார் ஜெய் சிவ சேகர்.