464 total views, 1 views today
பனாஜி. நவம்பா் 27
கோவா தலைநகர் பனாஜியில் நடைபெற்றுவரும் சர்வதேச திரைப்பட விழா இறுதிகட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
வழக்கமாக இந்தியன் பனோரமா பிரிவில் வங்க மற்றும் மலையாள மொழிப்படங்கள் ஐந்து அல்லது ஆறு இடம் பெற்று விடும். காரணம் இந்த மொழிகளில்தான் தரமான படங்கள் அதிக எண்ணிக்கையில் வருகின்றன.
தரமற்ற படங்கள் அதிக எண்ணிக்கையில் வரும் தமிழில் ஒரிரு படங்கள் இடம் பெற்றாலே பெரிய விஷயம்.
ராம் இயக்கிய பேரன்பு, ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கிய டூ லெட், அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் ஆகிய படங்கள் இந்த ஆண்டு இடம் பெற்றது பெருமைக்குரிய செய்தி மட்டுமின்றி பெருமகிழ்ச்சிக்குரியதுமாகும்.
கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி ஆகிய படங்களை இயக்கிய ராமின் நான்காவது படைப்பு பேரன்பு.
தமிழ்ப்படவுலகின் நம்பிக்கைக்குரிய இயக்குநர்களில் ஒருவரான ராம் இயக்கிய தங்க மீன்கள் படம் மூன்று தேசிய விருதுகளை (சிறந்த படம், சிறந்த குழந்தை நட்சத்திரம், சிறந்த பாடல்) வென்ற படமாகும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தங்க மீன்கள் படத்துக்காக கோவா வந்த ராம், இந்த ஆண்டு பேரன்பு படத்துக்காக வந்திருந்தார்.
தந்தைக்கும் மகளுக்குமான பாசப்பிணைப்பை கதைக்களமாக கொண்ட பேரன்பு படத்தில், தங்கமீன்கள் படத்தில் சிறுமியாக நடித்த சாதனாவும், மெகா ஸ்டார் மம்முட்டியும் பிரதான வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
உலக அளவில் முதல் முறையாக ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட பேரன்பு, ஆசிய நாடுகளின் பிரீமியராக ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இந்தியன் பிரீமியராக கோவா சர்வதேச திரைப்படவிழாவைக் குறிப்பிடலாம்.
ஐநாக்ஸ் அரங்கில் திரையிடப்பட்ட பேரன்பு படத்துக்கு சர்வதேச சினிமா ரசிகர்களின் வரவேற்பு பலமாகவே இருந்தது. தொடர்ந்து மீடியா சென்டரில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இயக்குநர் ராம் தன் படவிழா அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும்போது, இந்திய ரசிகர்கள் சினிமாவை கோலாகலமாகக் கொண்டாடுபவர்கள் என்று குறிப்பிட்டார் ராம்.
மத்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த திரைப்படத்தொழில் நுட்பக்கலைஞர்களு்கான விருதுப் பட்டியலில், அறிமுக இயக்குநருக்கான விருது
பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜுக்கு கிடைக்கும் வாய்ப்பு அதிகம் என்று ஐ நாக்ஸ் வளாகத்தில் ஒரு பேச்சு அடிபட்டது.
ராஜா.செந்தில்நாதன்