![]()
போட்டோகிராபர் — விமர்சனம்
கொடைக்கானல் மலைப்பகுதியில் அமைந்திருக்கும் மதிகெட்டான் சோலை என்ற பகுதியைப் பற்றி பல உண்மை கதைகளும் கட்டுக்கதைகளும் வழங்கப்படுவது இன்று வரை தொடர்கிறது அதே போல் அங்கு விளையும் ஒருவகை காளான் போதையை தரும் என்பதும் அதைத் தேடி பலர் வெளிநாட்டினர் வருவதும் பத்திரிகைகளில் அடிக்கடி வரும் செய்தி.
மதி கெட்டான் சோலையை மையக்கருவாக கொண்டும் போதை காளானை வைத்து சில காட்சிகளை அமைத்தும் உருவாக்கப்பட்ட திரில்லர் வகை படம் தான் போட்டோகிராபர்.
அறிவியலுக்குச் சவால் விடும் மர்மம், நெஞ்சை அதிரவைக்கும் அமானுஷ்யம், எகிற வைக்கும் திகில் திருப்பங்கள் போன்றவை வழக்கமான ஃபார்முலாதான், என்றாலும் சின்னச் சின்ன வித்தியாசங்களால் கவனம் ஈர்க்க முயன்றிருக்கிறது இந்த ‘போட்டோகிராபர்’.
கேமரா மீது அளவில்லா காதல் கொண்ட வீரா என்ற இளைஞன்; காலடி எடுத்து வைத்தால் உயிரோடு மீள்வது குதிரைக்கொம்பு என்று சொல்லப்படும் ஒரு அடர்ந்த காட்டுக்குள், சில அபூர்வக் காட்சிகளைத் தன் லென்ஸுக்குள் சிறைபிடிக்கப் பயணமாகிறான்.
ஆனால், காட்டின் நடுவே காலடி வைத்ததுமே அவனைச் சுற்றி மர்மப் புதிர்கள் வரிசைகட்டுகின்றன.
வந்த வழி எது, போகும் பாதை எது என்று திசை தெரியாமல் தவிக்கிறான். தாகத்தைத் தீர்க்கத் தண்ணீரோ, பசியைப் போக்க உணவோ கிடைக்காமல் உடலாலும் மனதாலும் நிலைகுலைந்து போகிறான்.
இந்த மரணக் காட்டின் பிடியில் இருந்து அவன் உயிர்தப்பி வந்தானா, இல்லையா என்பதுதான் மீதிக்கதை!
அறிமுக நாயகன் அஷ்ரப், இயக்குநராகவும் அவதாரம் எடுத்து காட்டிற்குள் வலம் வருகிறார்.
வனத்தின் பேரமைதி தரும் பயம், மர்மச் சம்பவங்கள் கிளப்பும் பீதி, தாய் பாசம் எனப் பலவிதமான உணர்ச்சிகளை ஓரளவுக்கு நேர்த்தியாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஹீரோவின் ஜோடியாக வந்து சில காட்சிகளில் தலைகாட்டிச் செல்கிறார் ஜனனி சமாதானம். அப்பாவாக ஆடுகளம் நரேன், நண்பனாக கருணாகரன், இதர முக்கியக் கதாபாத்திரங்களில் வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி எனப் பலரும் கதையின் ஓட்டத்திற்குத் துணை நின்றிருக்கிறார்கள். அதேநேரம், அம்மாவாக வரும் தேவி மகேஷ் தன் உருக்கமான நடிப்பால் மனதைத் தொட்டு விடுகிறார்.
மிஸ்ட்ரி திரில்லர் கதைக்களத்திற்கு வலுவூட்டும் வகையில், ரயீஸ் அஹ்மத்தின் ஒளிப்பதிவும், ராஜ்குமார் சந்திரசேகரனின் பின்னணி இசையும் படத்திற்குப் பெரிய பலமாக அமைந்திருக்கின்றன. காட்சிப் பதிவுகளைக் கச்சிதமாகத் தொகுத்தளித்திருக்கிறது RC பிரணவ்வின் படத்தொகுப்பு.
படத்தின் முன்பாதி ரசிகர்களின் பொறுமையைச் சோதித்தாலும், காட்டுக்குள் செல்பவர்கள் மாயமாவதன் பின்னணி என்ன, பலரையும் சுருட்டிய காடு ஹீரோவை மட்டும் விட்டுவைப்பது ஏன் போன்ற கேள்விகளுக்கான விடைகளோடு பிற்பாதியில் திரைக்கதை சுறுசுறுப்பாகச் சூடுபிடிக்கிறது.
புதுமையான முயற்சிகள் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் எப்போதும் திருப்திப்படுத்திவிடுவதில்லை. அந்த வகையில், தெளிவான திட்டமிடல் இல்லாத மனம்போன போக்கிலான திரைக்கதையால் இந்த ‘போட்டோகிராபர்’ அந்த வரிசையிலேயே போய்ச் சேர்கிறான்!


