Success of Meesaya Murukku Album Felicitation by Think Music

0

Loading

 

அவ்னி சினிமேக்ஸ் சுந்தர் சி தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா ஆதி எழுதி, இசையமைத்து நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் ‘மீசைய முறுக்கு’. அந்த படத்தின்  பாடல்கள்  வெளியான நாள் முதலே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. பல்வேறு ஆன்லைன் தளங்களில் பல சாதனைகளை செய்து வந்தது. தற்போது அவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல 150 மில்லியன் பார்வைகளை கடந்திருக்கிறது. அந்த வெற்றிக்கு முக்கிய காரணமான இசைக்கலைஞர்களை கவுரவிக்க சென்னை சத்யம் சினிமாஸில் விழா நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர் குஷ்பூ, சத்யம் சினிமாஸ் தலைவர் ஸ்வரூப் ரெட்டி, திங்க் மியூசிக் துணை தலைவர் சந்தோஷ் குமார், பிரீத்தா ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். 

ஒரு தயாரிப்பாளராக இங்கு வந்திருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். சுந்தர் சி கலகலப்பு 2 சென்சார் பணிகளில் பிஸியாக இருப்பதால் வர முடியவில்லை. ஓய்வில்லாமல் இரவு பகலாக உழைப்பை மட்டுமே நம்பி கடுமையாக உழைத்த ஆதியையே இந்த பெருமை , சேரும். அடுத்த தலைமுறை இளைஞர்கள் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக ஆதி இருக்கிறார் என்றார் நடிகையும், தயாரிப்பாளருமான குஷ்பூ.

“சத்யம்னாலே எல்லோருக்கும் சினிமா தான் ஞாபகம் வரும். ஆனால் எனக்கு பல முக்கியமான நினைவுகள் உண்டு. என் முதல் ஆல்பமான ஹிப் ஹாப் தமிழன் ஆல்பத்தை இதே சத்யம் சினிமாஸில் தான் திங்க் மியூசிக் ரிலீஸ் செய்தது. சினிமாவில் என் முதல் படமான ஆம்பள படத்தின் இசை வெளியீடும் சத்யமில் இதே இடத்தில் தான் நடந்தது. ஹீரோவாக, இயக்குனராக என் முதல் படமான மீசைய முறுக்கு படத்தின் ஆரம்பம் இங்கு இல்லயென்றாலும் முடிவு இந்த சத்யம் சினிமாஸில் தான். மீசைய முறுக்கு ஆல்பம் 150 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைக்க காரணம் ரசிகர்களாகிய நீங்கள் தான். வெறும் 2 பேரில் ஆரம்பித்து இன்று 70 பேர் கொண்ட ஒரு குடும்பமாக இருக்கிறோம். ஒரு படத்தின் வெற்றியில் இசையமைப்பாளரின் முகம் மட்டுமே வெளியில் தெரிந்தாலும் பின்னால் இருக்கும் 100க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்களை பற்றி யாருக்கும் தெரிவதில்லை. அவர்களை கொண்டாட, கவுரவிக்க முன் வந்த சத்யம் சினிமாவுக்கு நன்றி. சமூக வலைத்தள நண்பர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு படத்தை எடுத்தோம். இந்த அளவுக்கு பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. நன்றி மட்டும் சொல்லாமல் நட்பை கொண்டாடும் ஒரு விழா இது. 

படம் ரிலீஸுக்கு முன்பு தான் இசை உரிமையை பெரும்பாலும் வாங்குவார்கள். இந்த படம் ரிலீஸுக்கு முன்பு வெறொரு நிறுவனம் உரிமையை வாங்கியிருந்தது. படம் ரிலீஸான 2,3 நாட்களுக்கு பிறகு இந்த படத்தின் இசையை திங்க் மியூசிக் வாங்கியதால் அந்த தொகையை இசைக் கலைஞர்களிடமே கொடுத்து விடுங்கள் என சொன்னார்கள் எங்கள் தயாரிப்பாளர்கள் சுந்தர் சி மற்றும் குஷ்பூ. வெளிநாட்டு கலைஞர்கள் பலபேர் எங்களுக்கு உழைத்திருக்கிறார்கள். ஜெர்மனியில் ஃபாரீன் இசை ஆல்பங்களிலும் பணியாற்ற ஒரு ஸ்டுடியோ அமைத்திருக்கிறோம். 2020ல் இருந்து முழுவீச்சாக இயங்க இருக்கிறோம்” என்றார் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி.

இசைக்கலைஞர்கள் இருதயராஜ் பாபு, பாலேஷ், சாரங்கி, கிருஷ்ணா கிஷோர், ஜோசப் விஜய், டேனியால் விஜய், சபீர், ஜான் ராஜன், சரத், ராகவ் சிம்மன், பாலசுப்ரமணி, பாடகர்கள் கரிஷ்மா, ராஜன் செல்லையா, வீரம் மகாலிங்கம், கௌஷிக் கிரிஷ், ஷ்னிக்தா, ஜனனி, பூஷிதா, சுதர்ஷன், பவதாரணி, ஸ்ரீஜா, அபிஷேக், ஸ்ரீவிஷ்ணு, ஜஸ்விந்த், தொழில்நுட்ப கலைஞர்கள் அருண்ராஜ், டேவிட் லிங், கணேசன் சேகர், அனூப் ஆர் நாயர், நவனீத் சுந்தர், பாலாஜி ஆகியோருக்கு குஷ்பூ மற்றும் ஸ்வரூப் ரெட்டி நினைவுப் பரிசு மற்றும் காசோலைகளை வழங்கினர். தொடர்ந்து ஆதியும், அவரது குழுவினரும் மீசைய முறுக்கு பாடல்களை ரசிகர்கள் முன்னிலையில் மேடையில் பாடி மகிழ்வித்தனர்.

Share.

Comments are closed.