எழுமின் – திரைப்பட விமர்சனம்

0

 253 total views,  2 views today

 

குழந்தைகள் திரைப்படம் என்ற பெயரில் வரும் படங்கள் பலவும் குழந்தைகளுக்கான படங்களாகவே இருப்பதில்லை. குழந்தைகளை, அவர்களது வயதுக்கு மீறிய காரியங்களை செய்ய வைத்தும், பேச வைத்தும் அபத்தக் களஞ்சியமாக உருவாக்கப்பட்ட படங்களும் உண்டு.

ஆனால் குழந்தைகளை பிரதான வேடங்களில் நடிக்க வைத்து, அவர்களுக்குத் தேவையான நல்ல கரு்த்துக்களை சொல்லும் படங்கள் மிகவும் அரிதான ஒன்று. ஸ்வாமி விவேகானந்தரின் எழுமின் என்ற புகழ் பெற்ற வார்த்தையை படத்தலைப்பாகக் கொண்ட இந்தப் படம், கண்டிப்பாக குழந்தைகள் பார்க்க வேண்டிய நல்ல படமாக மலர்ந்திருக்கிறது.

பதின்பருவத்தில் (டீன்ஏஜ்)  இருக்கும் அஜய், கவின், வினித், அர்ஜுன், சாரா, ஆதிரா ஆகிய ஆறு பேரும் நண்பர்கள். படிப்புக்கான நேரம் போக குங்ஃபூ, சிலம்பம், கராத்தே, குத்துச் சண்டை என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விளையாட்டுக் கலையில் திறமைசாலிகள். இதில் அர்ஜுன் தொழில் அதிபரான விவேக்-தேவயானியின் மகன். மற்றவர்கள் அனைவரும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு கோச்சிங் கொடுக்கும் அகாடமி நடத்திவரும் அழகம்பெருமாள், பயிற்சிக் கட்டணம் செலுத்தவில்லை என அர்ஜுனை தவிர மற்றவர்களை வெளியே அனுப்புவதுடன், அவர்களை தேசிய அளவிலான போட்டியில் கலந்துக்கொள்ள முடியாதபடி செய்கிறார்.
ஆனால் இந்த குழந்தைகளின் காட்பாதர் போல விளங்கும் விவேக், அதே அழகம் பெருமாள் மாஸ்டருக்குத் தேவையான பணத்தைக் கொடுத்து தனிப்பயிற்சி கொடுக்க வைக்கிறார். இதனிடையே இரு பெரிய அளவிலான போட்டியில் அர்ஜுன் வெற்றி பெற்ற சந்தோஷத்தில் மாரடைப்பு வந்து இற்ந்து விடுகிறான். இப்படி மகனின் இழப்பால் துவண்டு போகும் விவேக்கிற்கு, தேசிய போட்டிக்குத் தேர்வான மற்ற ஏழை குழந்தைகளைகளுக்கு பதிலாக வேறு சில குழந்தைகளை அழகம் பெருமாள் தேர்வு செய்திருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது. இதில் கோபமான விவேக், தனது மகனின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டும், இந்தக் குழந்தைகளுக்கு விசேட பயிற்சி கொடுப்பதற்காகவும் தானே ஓர் அகாடமி ஆரம்பித்து, அதில் முறையான பயிற்சி வ்ழங்கி ஐவரையும் இறுதிப் போட்டிக்காக அனுப்பி வைக்கிறார். இதை பல சதித்திட்டங்கள் மூலம் அழகம் பெருமாள் தடுக்கத் திட்டமிட, அந்தத் திட்டங்களை முறியடித்து விவேக் தனது மாணவர்களை எப்படி ஜெயிக்க வைக்கிறார் என்பதே படத்தின் கதை..

தற்காப்பு கலை என்பது பதக்கம் வாங்குவதற்கும், பாராட்டு பெறுவதற்கும் மட்டும் அல்ல, நமக்கு பிரச்னை ஏற்படும் போது நம்மை காத்துக்கொள்வதற்காகவும்தான், என்பதை அழுத்தமாக சொல்லும் விதத்தில் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. தற்காப்பு கலைகளில் இருக்கும் பல வகைகளில் சிலவற்றை எடுத்துக் கொண்டு அதில் சிறந்த பயிற்சியும், அனுபவம் பெற்ற சிறுவர்களையே நடிக்க வைத்திருப்பது இப்படத்திற்கு பெரிய ப்ளஸ் பாயிண்டாக அமைந்துள்ளது.
கணேஷின் இசையும், ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசையும் படத்துக்கு வலு சேர்க்கும் விதத்தில் அமைந்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன் சிறப்பான முறையில் காட்சிகளை படமாக்கியிருக்கிறார். குறிப்பாக தற்காப்புக் கலை போட்டிகளை படமாக்கியிருப்பதில் அவரது திறமை நன்கு வெளிப்பட்டிருக்கிறது. ஆக்ஷன் காட்சிகளை சிறப்பாக வடிவமைத்திருக்ககும் ஸ்டண்ட் மாஸ்டர் மிராக்கிள் மைக்கேல் ஒளிப்பதிவாளருக்கு நன்கு துணை நின்றிருக்கிறரா்.
துவக்கத்திலிருந்து இறுதிவரை தொய்வின்றி படத்தைக் கொண்டு செல்கிறா் இயக்குநர் ஆர்.பி.விஜி..
விளையாட்டு என்றாலே வீடியோ கேம்தான் என்று நினைத்துக் கொண்டிருக்கும் இன்றைய சிறுவர் சிறுமியரை பெற்றோர் அழைத்துச் சென்று கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் எழுமின்.
கணித மேதை ராமானுஜன் பற்றிய திரைப்படத்தைக்காண ஆசிரியர்களே மாணவ மாணவிகளை திரையரங்குக்கு அழைத்து வந்தார்கள். அதுபோல் இந்தப் படத்தைக் காண்பதற்கும் தயாரிப்பாளர்/விநியோகஸ்தர் பள்ளி நிர்வாகிகளுடன் பேசி ஏற்பாடு செய்யலாம்.

மத்திய அரசின் நிதியுதவியில் இயங்கும் குழந்தைகள் திரைப்படக் கழகம் (childrens filmm society) எழுமின் படத்துக்கு சப் டைட்டில் போட்டு பல மாநிலங்களிலும் தாங்கள் நடத்தும் குழந்தைகள் திரைப்பட விழாவில் திரையிட ஏற்பாடு செய்ய வேண்டும்.

Share.

Comments are closed.

CLOSE
CLOSE