Wednesday, August 19

ஜனநாயகன் _ விமர்சனம்

Loading

  • ஜனநாயகன்: விமர்சனம்

திரையில் முதலமைச்சர் டைட்டில் கார்டுடன் தோன்றி, ரசிகர்களின் கரவொலியால் திரையரங்குகளை அதிரவைத்திருக்கும் ‘ஜனநாயகன்’ – விஜய்யின் திரைப்பயணத்தின் கம்பீரமான விடைபெறலா, இல்லை கமர்ஷியல் அரசியலின் உச்சக்கட்ட கொண்டாட்டமா? இதோ சுடச்சுட ஒரு முழுமையான திரை விமர்சனம்!

தெலுங்குப் படமான ‘பகவந்த் கேசரி’யின் மையப்புள்ளியை எடுத்துக்கொண்டு, அதைத் தளபதி விஜய்யின் மாஸ் பிம்பத்திற்கும் தமிழ்நாட்டின் அரசியல் களத்திற்கும் ஏற்றவாறு செதுக்கியுள்ளார் இயக்குநர் எச்.வினோத்.

கதைக்களம்: சிறையிலிருந்து விடுதலையாகும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி தளபதி வெற்றிக் கொண்டான் (விஜய்), நண்பனும் அதிகாரியுமான கௌதம் மேனனின் திடீர் மறைவுக்குப் பின், அவரது மகள் மமிதா பைஜூவை வளர்க்கும் பொறுப்பை ஏற்கிறார். அம்மாவின் கொடூர கொலையைப் பார்த்ததால் பயந்த சுபாவம் கொண்ட மமிதாவை, சமுதாயத்தில் மிக தைரியமான பெண்ணாகவும், ராணுவ அதிகாரியாகவும் மாற்றத் துடிக்கிறார் விஜய்.

இந்நிலையில், பொம்மை மூலம் 50 லட்சத்திற்கும் அதிகமான துப்பாக்கிகளைக் கடத்தி நாட்டில் மதக்கலவரத்தைத் தூண்டத் துடிக்கும் சர்வதேசக் குற்றவாளி பாபி தியோலின் சதி ஃபைல் ததேச்சையாக மமிதாவிடம் வந்து சேர்கிறது.

அதைத் தொடர்ந்து மமிதாவைக் குறிவைக்கும் வில்லன் கும்பலிடமிருந்து அவரை மீட்டு, நாட்டையும் சதிகார்களிடமிருந்து காப்பாற்ற  தளபதி நடத்தும் ஆக்‌ஷன் அதகளமே படத்தின் கதைக் கரு!

தளபதி விஜய்: 52 வயதிலும் அதே அசாத்திய எனர்ஜி! எம்ஜிஆர் ரெஃபரன்ஸ் உடன் வரும் அதிரடி ஓபனிங், ‘ராவணன் மவன் டா’ பின்னணியில் தெறிக்கும் இடைவேளை ஃபேக்டரி சண்டை, அசத்தலான ரோபோட் ஆக்‌ஷன் சீக்வென்ஸ் எனத் தூள் கிளப்புகிறார். ரசிகர்களுக்காக அவர் ஆடும் அந்த ‘ஒன் மினிட்’ நடனம் மற்றும் ‘தளபதி கச்சேரி’ பாடல் தியேட்டரையே ஆட்டம் போட வைக்கிறது.

மமிதா பைஜூ: விஜய்க்கு அடுத்தபடியாக படத்தைத் தாங்கிப் பிடிக்கும் முதன்மைப் பாத்திரம்!

பயந்த சுபாவத்தில் தொடங்கி, சித்தப்பா விஜய்யுடன் ஜாலியாகக் சேட்டைகள் செய்து, கிளைமேக்ஸில் தைரியமான சிங்கப் பெண்ணாக உருவெடுத்துச் செய்யும் சர்ப்ரைஸ் மாஸ் டிரான்ஸ்ஃபர்மேஷன் வரை தன் பங்கைக் கச்சிதமாகச் செய்துள்ளார்.

பாபி தியோல் & பிரகாஷ் ராஜ்: சர்வதேச ஆயுதக் கடத்தல்காரனாக வரும் பாபி தியோலின் ஃபிளாஷ்பேக் மற்றும் தீரன் பாணி ஆப்பிரிக்கக் காட்சிகள் மிரட்டல். பிரகாஷ் ராஜ் வழக்கம்போல தன் அரசியல் சாணக்கியத்தனத்தால் ஆட்டத்தைக் களைகட்ட வைக்கிறார்.

பிற நட்சத்திரங்கள்: கௌதம் மேனன், நரேன், நிரூபராக வரும் பூஜா ஹெக்டே ஆகியோர் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்த்துள்ளனர்.

அனிருத்தின் இசையில் ‘தளபதி கச்சேரி’ ஆட்டம் போட வைப்பதோடு, ‘செல்ல மகளே’ பாடல் நெஞ்சைத் தாலாட்டுகிறது. பின்னணி இசை ஆக்‌ஷன் காட்சிகளுக்குச் சூடேற்றினாலும், வழக்கமான விஜய் – அனிருத் காம்போவின் அந்த அசுரத்தனமான ‘கிக்’ சில இடங்களில் சற்றே குறைகிறது.

ஆப்பிரிக்க நாட்டின் காட்சிகள் மற்றும் ஆக்‌ஷன் சீக்வென்ஸ்களில் ஒளிப்பதிவு படு மிரட்டலாகவும், வண்ணமயமாகவும் அமைந்துள்ளது. 

பாலகிருஷ்ணாவின் மாஸ் ஜோனிலிருந்த கதையைத் தளபதி விஜய்யின் ஜோனுக்கு லாவகமாக மாற்றியதே வினோத்தின் முதல் வெற்றி!

தீரன் பாணி வில்லன் பேக்-ஸ்டோரி, பூஜா ஹெக்டேவை வைத்து நெட்வொர்க் ஆராய்ச்சி செய்யும் காட்சிகள் மற்றும் பெண்களுக்கான சுய தைரியத்தை வலியுறுத்தும் இடங்கள் எனத் தன் தனித்துவமான முத்திரையைப் பதித்துள்ளார்.

ஆனால், மதக்கலவரம் மற்றும் சர்வதேசத் துப்பாக்கிக் கடத்தல் போன்ற கிளைக்கதைகளைத் திணித்தது இரண்டாம் பாதியில் திரைக்கதையின் வேகத்தைச் சற்றுத் தேங்கச் செய்கிறது.

மேலும் ‘A’ சான்றிதழ் பெற்றதால், குழந்தைகள் பார்க்க வேண்டிய நல்ல கருத்து அவர்களைச் சென்றடைவதில் சிரமம் இருப்பது வருத்தமே.

க்ளாப்ஸ்:

விஜய்யின் அசாத்திய ஆக்‌ஷன், நடனம்.

மமிதா – விஜய் இடையேயான பாசப் பிணைப்பு மற்றும் எமோஷனல் காட்சிகள்.

பிரம்மாண்டமான இடைவேளைக் காட்சி  மற்றும் கிளைமேக்ஸ் சண்டைக் காட்சிகள்.

பல்ப்ஸ்:

இரண்டாம் பாதியில் அளவுக்கு அதிகமான விஷயங்களைத் திணித்ததால் ஏற்படும் தொய்வு.

லேசாகத் திகட்டும் சர்வதேசத் துப்பாக்கிக் கடத்தல் பின்னணி.

மொத்தத்தில்…

சில திரைக்கதை மைனஸ்கள் மற்றும் திகட்டும் கிளைக்கதைகளைத் தாண்டி, ‘ஜனநாயகன்’ என்பது திரையரங்கில் தளபதி விஜய்யைக் கொண்டாடித் தீர்ப்பதற்கான ஒரு பக்காவான ஃபேர்வெல் திருவிழா!

ரசிகர்களுக்கு இது சந்தேகமில்லாமல் ஒரு தரமான ட்ரீட்!