Wednesday, August 19

அன்பே டயானா _ விமர்சனம்

Loading

அன்பே டயானா _ விமர்சனம்

ஜமா திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்து தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் நடிகராகவும் அறிமுகமான  பாரி இளவழகன், இந்த முறை வடசென்னையின் பின்னணியில் ஒரு கலகலப்பான காதல் படத்தைத் தந்துள்ளார்.

வழக்கமாக ரவுடிசமும் வன்முறையுமே வடசென்னையின் அடையாளமாகக் காட்டப்படும் சூழலில், பெரம்பூர் பகுதியை அத்தனை அழகாகவும் தூய்மையாகவும் காட்டி புதிய கோணத்தில் கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

நாயகனாக நடித்திருக்கும் பாரி, மிக எதார்த்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார். நட்பு என்ற நிலையிலேயே பழகிக் கொண்டிருக்கும் பெண்ணை தீவிரமாக காதலிக்கும் போதும், அதன் பிறகு , காதலியின் சம்மதம் கிடைத்த பிறகு இரு தரப்பு கலாச்சார முரண்பாடுகளை நினைத்து தவிக்கும் போதும் ஆழமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் பாரி இளவழகன்.

இரண்டு பெண்களுக்கு இடையே சிக்கித் தவிக்கும் எளிய இளைஞனாக நம்மோடு எளிதில் ஒட்டிக்கொள்கிறார் நாயகன்.

அவருக்கு இணையாக ஆங்கிலோ இந்தியப் பெண்ணாக வரும் ரம்யா, தனது அசத்தலான அழகால் நம் நெஞ்சை கொள்ளை கொள்வது மட்டுமின்றி, கோபப்படும் காட்சிகளிலும், நாயகனின் தந்தையிடம் எகிறும் இடங்களிலும் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்துள்ள ரோஜா, தொடக்கத்தில் அன்பான அம்மாவாகத் தோன்றி, பின்னர் அனல் பறக்கும் நடிப்பால் அதிர வைக்கிறார்.

சேத்தன் மற்றும்  என அனைவரும் தங்களுக்குரிய கதாபாத்திரங்களை நேர்த்தியாகச் செய்துள்ளனர். ஆனால், பெரும் எதிர்பார்ப்போடு வரும் பரிதாபங்கள் கோபி, படம் முழுக்க நம்மைச் சிரிக்க வைக்க முயன்றாலும், அதில் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை என்பது சற்று ஏமாற்றம்.

பெரம்பூரின் இயல்பான வாழ்க்கையை அப்படியே திரைக்குக் கொண்டு வந்ததில் ஒளிப்பதிவாளரின் பங்கு அளப்பரியது.

ஷாலிமார் உணவகம், தேவாலயங்கள், உள்ளூர் தின்பண்டக் கடைகள், தெலுங்கு மொழி பேசும் தாயின் பாசம், பெங்களூரு நண்பன் என ஒவ்வொரு விஷயத்தையும் திரைக்கதையில் மிக நேர்த்தியாக இணைத்திருக்கிறார் பாரி.

படத்தின் இறுதி முப்பது நிமிடங்கள் திரையரங்கையே சிரிப்பு மழையில் நனைய வைக்கிறது. காதல் காட்சிகளுக்கும், நகைச்சுவைக் காட்சிகளுக்கும் பின்னணி இசை மிகச் கச்சிதமாகப் பொருந்திப் படத்திற்கு உயிர் கொடுத்துள்ளது. மாவு கடை ஆரம்பிக்க வேண்டுமானால் உங்கள் ஜாதிக்காரர்கள் பணம் கொடுத்திருக்கலாம் உங்களிடம் மாவு வாங்கியவர்கள் எல்லோரும் வெவ்வேறு ஜாதிக்காரர்கள் தானே என்ற வசனம் கைத்தட்டல் பெறுகிறது. இதுபோல் ரசிக்கத்தக்க வசனங்கள் நிறையவே படத்தில் இருக்கின்றன.

மெல்லத் தொடங்கும் காதல், பின்னர் வேகமெடுத்து, உறவுகளின் அழகைப் பேசும் ஒரு நல்ல பொழுதுபோக்குத் திரைப்படமாக முடிகிறது. குடும்பத்தோடு திரையரங்கிற்குச் சென்று தாராளமாக ரசிக்கலாம்.