சாமானிய மனிதர்களைப் பற்றிய எளிய கதையை எடுத்துக்கொண்டு திரையில் தப்பாட்டம் ஆடியிருக்கிறார் இயக்குநர் முஜிபூர் ரஹ்மான். படத்தின் கதை திரைக்கதை வசனமும் இவர்தான்.
ஓடுக்கப்பட்ட மக்களின் தோல் இசைக்கருவியான பறையை தப்பு என்று தப்பான பெயரில் திட்டமிட்டே அழைக்க ஆரம்பித்தனர் ஆதிக்க சக்திகள். எனவே அந்தக் கருவியை இசைத்தபடி ஆடும் ஆட்டத்துக்கு தப்பாட்டம் என்று பெயர் வைத்தனர். ஆனால் உண்மையில் இது சரியான ஆட்டம்தானே தவிர, தப்பாட்டம் அல்ல.
சவஊர்வலத்தில் பறை அடித்து ஆடுவதுதான் நாயகன் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரின் வேலை. அவரது அக்கா மகளான கதாநாயகி டோனா மிகுந்த அப்பாவிப் பெண்ணாக இருந்தாலும் தன் மாமனே உலகம் என்று அவரையே சுற்றி வருகிறார்.
பெண்களைக் கெடுப்பதையே தன் முழு நேர வேலையாகக் கொண்ட பண்ணையாரின் மகன், தன் வில்லத்தனத்தை நாயகி டோனாவிடம் காட்ட முற்பட, பளீரென அவர் கன்னத்தில் அறைந்து அவமானப்படுத்துகிறார் நாயகி.
நாயகன் நாயகியை மணந்து சந்தோஷமாக வாழ்ந்து வரும்போது, நாயகியை தான் கெடுத்து விட்டதாகப் புரளியை கிளப்பி விடுகிறார் பண்ணையார் மகன். இதனால் அந்தப் புதுமணத் தம்பதிகள் வாழ்வில் புயல் வீசுகிறது.
யாரோ சொன்ன பொய்யான செய்தியை வைத்து கட்டிய மனைவியை கணவனே சந்தேகப்படக்கூடாது என்ற செய்தியைதான் இந்தப் படம் சொல்கிறத
படத்தின் முடிவு யாருமே எதிர்பாராதது.
ஒரு படத்துக்கு பலமாக இருக்க வேண்டிய நகைச்சுவைக் காட்சிகள் எரிச்சலூட்டும் விதத்தில் அமைந்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.
ராஜனின் ஒளிப்பதிவும், பழனி பாலுவின் இசையும் ஆறுதலான அம்சங்கள்
திரைக்கதையிலும் காட்சியமைப்பிலும் இன்னும் சிரத்தை எடுத்து கவனம் செலுத்தியிருந்தால் ஒரு நல்ல படமாக வந்திருக்கும்.