மன்னர் வகையறா – விமர்சனம்

0

Loading

குடும்பத்தில் ஏற்படும் உறவுச் சிக்கல்களையும், உரசல்களையும் நகைச்சுவை கலந்து தனக்கே உரிய பாணியில் மன்னர் வகையறா படத்தில் படைத்திருக்கிறார் இயக்குநர் பூபதி பாண்டியன்.
சட்டக்கல்லூரியில் பயின்று தேர்வு எழுதிவிட்டு வரும் விமல், கண்டிப்பாக தேறிவிடுவார் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் அவரது மாமாவான ரோபோ சங்கர்.
ஆனால் தேர்வில் தோல்வியடையும் விமல் மாமா உதவியுடன் நாயகி கயல் ஆனந்தியின் பின்னே சுற்றித் திரிகிறார்.
ஆனந்தியும் விமலைக் காதலிக்க ஆரம்பிக்கும்போது ஒரு சிக்கல் வருகிறது. விமலின் அண்ணன் கார்த்திக் திடீரென விஷம் அருந்த அவரைக் காப்பாற்றும்போதுதான் விமலுக்கு விஷயம் தெரிய வருகிறது. தான் காதலித்த் பெண்ணுக்கு திருமணம் நடக்கவிருப்பதால், காதல் தோல்வியால் தான் விஷமருந்தியதாகத் தெரிவிக்கிறார் கார்த்திக்.
அண்ணனை அவரது காதலியுடன் சேர்த்து வைப்பதற்காக, திருமண மண்டபத்துக்கே சென்று வருங்கால அண்ணியைத் தூக்கி வந்து விடுகிறார் விமல். விமல் தூக்கி வரும் பெண் யார் தெரியுமா… அவர் காதலிக்கும் ஆனந்தியின் அக்காதான்.
இதற்குப் பிறகு ஜெட் வேகத்தில் பரபர காட்சிகளுடன் பயணிக்கிறது படம்.
விமல் கார்த்திக்கின் தந்தை பிரபு ஊரில் மதிப்பும் மரியாதையுடனும் வாழும் பெரிய மனிதர். விவசாயத்தை பாழ்படுத்தும் எறால் பண்ணைகளை காலி செய்ய வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுப்பதால் எறால் பண்ணை உரிமையாளரும் பிரபு குடும்பத்தின்மீிது மிகுந்த கோபத்துடன் அவர்களைப் பழி வாங்க நேரம் பார்த்துக் காத்திருக்கின்றார்.
தன் தங்கையை திருமணத்தின் போது தூக்கி போய்விட்ட கோபத்தில் விமலைக் கொலை செய்ய காத்திருக்கிறார் ஆனந்தியின் அண்ணனான வம்சி கிருஷ்ணா.
போதாக்குறைக்கு இந்தி இரண்டுவகை வில்லன் வகையறாக்களும் நெருங்கிய உறவினர்கள்வேறு. இந்த இரண்டு வகை வில்லன் வகையறாக்களிடமிருந்தும் மன்னர் வகையறா விமல் எப்படி தப்பித்து காதலியைக் கரம் பிடித்தார் என்பதை தன் பாணியில் நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர் பூபதி பாண்டியன்.
விமலின் திரைவாழ்க்கையில் இது எப்படி முக்கியமான படமோ அந்த அளவுக்கு ரோபோ சங்கருக்கும் இது மிக முக்கியமான திருப்பு முனையை ஏற்படுத்தக்கூடிய படம். அந்த அளவுக்கு ரோபோ சங்கரின் நகைச்சுவைக் காட்சிகள் அமைந்திருக்கின்றன.
குறிப்பாக தன்னை தாக்க வந்தவர்கள் தன் வீட்டு குளிர்சாதனப் பெட்டியில் பீர் வைத்துவிட்டு மனைவியிடம் ஆம்லேட் போடச் சொல்லி சாப்பிட்ட சோகக்கதையை ரோபோ சங்கர் விமலிடம் கூறும் காட்சி, மூத்திர சந்தில் உதை வாங்கிய கதையை வடிவேல் கூறும் திரைப்படத்தை நினைவு படுத்தினாலும் வாய்விட்டு சிரிக்க வைப்பதை மறுப்பதற்கில்லை.
விமல், ஆனந்தி, ரோபோ சங்கர், சாந்தினி தமிழரசன், பிரபு, சரண்யா பொன்வண்ணன், கார்த்திக் குமார், சிங்கம்புலி, யோகிபாபு, வம்சி கிருஷ்ணா, ஜெயபிரகாஷ், நீலிமா ராணி இத்தியாதி இத்தியாதி என்று நடிக நடிகையர் கூட்டத்தையை எல்லாம் ஒன்று சேர்த்து படமெடுத்ததற்காகவே இயக்குநர் பூபதி பாண்டியனுக்கு தனியாக ஒரு சபாஷ் போடலாம்.
பி.ஜி.முத்தையா, சூரஜ் நல்லுசாமி ஆகியோரின் ஒளிப்பதிவு படத்துக்கு பக்க பலமாக இருக்கிறது.
ஜாக்ஸ் பிஜாய் இசையில் உருவான பாடல்கள் இனிமையாக இருக்கின்றன.
நகைச்சுவையுடன் அமைந்த இந்த குடும்பக்கதை அனைவரும் ரசிக்கத் தக்க படமாக அமைந்திருக்கிறது.

Share.

Comments are closed.