Sunday, September 27

7G _ விமர்சனம்

Loading

7G விமர்சனம்

ஐடி நிறுவனத்தில் வேலைப்பார்க்கும் ரோஷன் – ஸ்ம்ருதி வெங்கட் தம்பதி, தங்கள் மகனுடன், புதிதாக வாங்கியிருக்கும் அபார்ட்மெண்ட வீட்டில் குடியேறுகிறார்கள். அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட, நண்பர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்கள்.

ரோஷனை ஒரு தலை காதலிக்கும் ஸ்னேகா குப்தா தன் காதல் நிறைவேறாத ஆத்திரத்தில், விருந்துக்கு வருகிறார். வந்தவர், மாந்த்ரீக சூனிய பொம்மை ஒன்றை புது வீட்டில் யாருக்கும் தெரியாமல் வைத்துவிட்டுச் சென்று விடுகிறார்.

புதுவீட்டுக்கு குடி வந்த சில நாட்களிலேயே ரோஷனுக்கு பதவி உயர்வு கிடைக்கிறது. பயிற்சிக்காக வெளியூர் சென்றுவிடுகிறார்.
ஸ்ம்ருதி வெங்கட்டும் தனது பணியை விட்டுவிட்டு, மகனுடன் அந்த வீட்டில் வசிக்கிறார்.
அப்போது அந்த வீட்டில் அமானுஷ்ய திகில் சம்பவங்கள் பலநடக்கின்றன. ஸ்மிருதி வெங்கட் பயத்தில் தவிக்கிறார்.

இதற்கிடையே பக்கத்து வீட்டுக்காரர்களான சுப்ரமணிய சிவாவும், அவரது மனைவியும் சில அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவிக்கிறார்கள்.
அந்த அதிர்ச்சி என்ன… ஏன் அப்படி நடந்தது.. அமானுஷ்ய சம்பவங்கள் நின்றனவா என்பதே மீதிக்கதை.
கணவன் மற்றும் மகன் மீது காட்டும் பாசம், புது வீடு வாங்கிய மகிழ்ச்சி, பேய் பயத்தில் தவிப்பு என சிறப்பாக நடித்து உள்ளார் ஸ்மிருதி வெங்கட்.

ஆவியாக வரும் சோனியா அகர்வால், பயம் காட்டுவதற்கு பதிலாக பரிதாபத்தையே வரவழைக்கிறார். சொந்த தம்பியால் கொலையுண்டு, அலையும் ஆத்மாவாக வருகிறார்.

ஸ்னேகா குப்தா, தன் வில்லத்தனத்தை ஸாரி, வில்லித்தனத்தை செவ்வனே செய்கிறார்.

சுப்ரமணிய சிவா உள்ளிட்ட மற்றவர்களுக்கு அவ்வளவாக நடிக்க வாய்ப்பு இல்லை.

சித்தார்த் விபினின் பின்னணி இசை சிறப்பாக உள்ளது. படக் காட்சிகள் தரும் அதிர்வலைகளைவிட, இசை தரும் அதிர்ச்சி அதிகம். அமானுஷ்ய படத்துக்கு ஏற்ற அதிரடி பின்னணி இசை.

அதே போல கண்ணாவின் ஒளிப்பதிவும் அருமை. ஒரு அபார்ட்மெண்ட் வீடுதான் பெரும்பாலும் லொகேஷன்.

ஆனாலும் இவற்றை வெவ்வேறு கோணங்களில் காட்டி பயமுறுத்துகிறது கேமரா. பாராட்டுகள்.

பலமுறை பார்த்த பேய் கதைதான். ஆனால் சொன்ன விதத்திலும், கதை அம்சத்திலும் வேறுபடுத்திக் காட்டி ரசிக்க வைத்து இருக்கிறார் இயக்குநர் ஹாரூன்.