Wednesday, February 12

இந்தியன் 2 _  விமர்சனம்

Loading

இந்தியன் 2 _  விமர்சனம்

1996ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல் நாயகனாக நடித்த இந்தியன் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
ஊழல் வாதிகளை களையெடுக்கும் இந்தியன் (தாத்தா), இதே குற்றச்சாட்டில் சிக்கும் தனது மகனையும் களையெடுப்பார். காவல்துறையினர் இவரை தேட வெளி நாட்டுக்குத் தப்பிவிடுவார்.
அவர் மீண்டும் இந்தியா வந்து, மறுபடி களையெடுக்கத் துவங்குவதுதான் இந்தியன் 2.
‘பார்க்கிங் டாக்ஸ்’ என்கிற பெயரில் யூடியூப் சேனலை சித்தார்த், பிரியா பவானி சங்கர், ஜகன் ஆகியோர் நடத்துகின்றனர். நாட்டில் நடக்கும் லஞ்ச, ஊழல், அரசு தரப்பினரின் அலட்சியம் உள்ளிட்டவற்றை மக்களுக்கு அம்பலப்படுத்துகின்றனர்.
ஒரு கட்டத்தில், யூடியூப் வீடியோக்களால் பயனில்லை.. இந்தியன் தாத்தா திரும்பவந்து களையெடுக்க ஆரம்பித்தால்தான் நல்லது நடக்கும் என நினைக்கின்றனர்.
உடனே #ComebackIndian ஹாஷ்டேக்கை உருவாக்கி, நாட்டில் நடக்கும் அநீதிகளை பதிவிடுகின்றனர். இதை பார்க்கும் இந்தியன் தாத்தா, கிளம்பி இந்தியா வருகிறார். மீண்டும் லஞ்ச ஊழல் பேர்வழிகளைத் தேடிப்பிடித்து கொல்கிறார்.
அடுத்து என்ன நடந்தது என்பதுதான் கதை.
வயது முதிர்ந்த இந்தியன் தாத்தா வேடத்துக்கு மிகவும் பொருந்தி சிறப்பான நடிப்பை (எப்போதும்போல்) அளித்திருக்கிறார் கமல் ஹாசன். ஒவ்வொரு லஞ்ச ஊழல் பேர்வழிகளை கொல்லும்போதும் அவர்களிடம் கிண்டலாக பேசுவது, தாக்கிவிட்டு, அது என்ன வர்வம் என்பதை எடுத்துச் சொல்வது, “நீங்களும் போராடணும்” என்று ஆவேசத்துடன் மக்களுக்கு அறிவுரை வழங்குவது என அசத்தி இருக்கிறார் கமல்.
கமலுக்கு அடுத்து முக்கிய கதாபாத்திரம் என்றால் பாபி சிம்ஹா. காவல் அதிகாரியாக மிரட்டி இருக்கிறார். இந்தியன் தாத்தாவை பிடிக்க துடிப்புடன் செயல்படும் காட்சிகளில் சிறப்பாக நடித்து உள்ளார்.
சித்தார்த், ப்ரியாபவானி சங்கர், சமுத்திரகனி உள்ளிட்டோரும் சிறப்பாக நடித்து உள்ளனர்.
எஸ்.ஜே. சூர்யா சில காட்சிகளிலேயே வருகிறார். அடுத்த பாகத்தில் அவருக்கு முக்கியத்துவம் இருக்கும் என்பது புரிகிறது.
விவேக்கின் காமெடிகள் வொர்க்கவுட் ஆகின்றன.
அனிருத்தின் இசையில் பாடல்கள், பின்னணி இசை சிறப்பாக உள்ளது.
ரவி வர்மாவின் ஒளிப்பதிவும் அருமை. அதிலும் வெளிநாட்டு காட்சிகள், சண்டை காட்சிகளில் மிக அருமையான ஒளிப்பதிவு.

முதல் பாகத்தில் ஊழலை எதிர்த்து தன்னந்தனியாக இந்தியன் தாத்தா போராடுவார். இரண்டாம் பாகத்தில், தான் மட்டுமே இந்த நாட்டை திருத்த முடியாது இளைஞர்கள் தங்கள் வீட்டில் உள்ள களைகளை பிடுங்கி எறிய வேண்டும் என்கிற செய்தியைச் சொல்லி இருக்கிறார் இயக்குநர் ஷங்கர். மிக சரியான விசயம்.

பிரம்மாண்ட மேக்கிங், கமல் மேக் அப், வர்மக்கலை தாக்குதல், மெட்ரோ ரயில் சண்டைக் காட்சி, தங்க மாளிகை (டாய்லெட்கூட தங்கத்தில்..!).. இப்படி படம் முழுதுமே பிரமிக்க வைக்கிறது.
நீரவ்மோடி, விஜய் மல்லையா என நிஜ (மோசடி) தொழிலபதிர்கள் போன்றவர்களின் தோற்றத்தில் கதாபாத்திரங்களை உருவாக்கி இருக்கிறார். சிறப்பாக உள்ளது.

இரண்டாம் பாதியில் சித்தார்த் உள்ளிட்ட அவரது யூடியூப் நண்பர்களின் வீடுகளில் உள்ளவர்கள் செய்யும் ஊழல்கள் வெளிச்சத்துக்கு வருவதும் அதனால் அவர்களுக்கு நேரும் பிரச்சனைகளும் உணர்ச்சிகரமாக உள்ளன.

மொத்தத்தில் ரசித்துப் பார்க்கலாம்..!