மெர்க்குரி – விமர்சனம்

0

Loading

மொழியற்ற படம் என்று விளம்பரப்படுத்தப்பட்ட மெர்க்குரி திரைப்படத்தில் துவக்க காட்சிகளில் வசனத்துக்கு பதில் சப்டைட்டில் வருவதைப் பார்க்கும்போதே ஏமாற்றம் ஆரம்பமாகிவிடுகிறது.

பாதரசக் கழிவுகளால் பாதிக்கப்பட்டதால் காது கோளாத வாய் பேச முடியாத நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் மலைப்பாங்கான சுற்றுலா விடுதி ஒன்றில் தங்குகின்றனர். இந்த ஐவரில் ஒரு இளைஞனுக்கு அந்தப் பெண்ணின் மீது காதல். அந்தப் பெண்ணின் பிறந்த நாளை நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடிய பிறகு, தன் காதலை அவளிடம் சொல்ல காரில் வெளியே அழைத்துச் செல்கிறான் காதலன். நண்பர்களும் காரில் ஏறிக்கொண்டுவிடுகின்றனர்.

வேகமாகச் செல்லும் காரின் குறுக்கே ஒரு நாய் வர அதன்மீது மோதாமல் இருக்க திடீர் பிரேக் போட்டு காரைத் திருப்பும்போது ஒரு விபத்து நேர்கிறது. காரைவிட்டு இறங்கிப் பார்த்தால் பிரபுதேவா காரில் அடிபட்டு இறந்து கிடக்கிறார்.

அவரது கையில் உள்ள சங்கிலி காரில் சிக்கிக் கொண்டிருக்கிறது.
நண்பன் ஒருவன் போலீசுக்கு தகவல் தெரிவிக்க முயற்சிக்க, மற்றவர்கள் அதைத் தடுக்கின்றனர். வீண் பிரச்னையிலிருந்து தப்பிக்க பிணத்தை எங்காவது எறிந்து விடலாம் என்று எண்ணி காரில் ஏற்றிக்கொண்டு செல்கின்றனர்.

வழியில் பிணத்தை எறிந்துவிட்டு தங்கும் விடுதிக்குத் திரும்பியவர்கள் அதை காலிசெய்ய முயலும்போது நண்பர்களில் ஒருவனது ஐபோன் மிஸ்ஸிங். போலீசில் அது தங்களைக் காட்டிக் கொடுத்துவிடும் என்பதால் ஐபோனைத் தேடி எ்ல்லோரும் செல்கின்றனர்.

பிணத்தை வீசிய இடத்தில் பார்த்தால் அதைக் காணவில்லை. பயந்து நடுங்கும் தோழியை காரில் அமரச்சொல்லிவிட்டு ஒரு வழியாக ஐபோனை தேடி எடுத்துக் கொண்டுவந்தால் இப்போது காரில் இருந்த தோழியைக் காணவில்லை. இதன் பிறகு திக் திக் காட்சிகளுடன் வேகமெடுக்கிறது படம்.

நடனத்திலும் நடிப்பிலும் முத்திரை பதித்த பிரபுதேவா இதுவரை ஏற்றிராத புதுமையான வேடத்தில் பிரமாதமாக நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட இந்திய மொழிகள் பலவற்றிலும் அறிமுகமானவர் என்பதால் அவரை இந்த வேடத்தில் இயக்குநர் நடிக்க வைத்திருக்கிறாரோ… காரணம் எதுவாக இருந்தாலும் கொடுத்த வேடத்தை சிறப்பாகச் செய்து சபாஷ் வாங்குகிறார் பிரபுதேவா.

ஆனால் படத்தின் உண்மையான நாயகன் என்றால் அது ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசுதான். ஒளியமைப்பிலேயே காட்சிகளில் திகிலைக் கூட்டியிருப்பது அபாரம். சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும் படத்துக்கு வலு சேர்க்கிறது.

ஸ்டெர்லைட் பிரச்னை கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் மெர்க்குரியை பேசும் படமாகவே உருவாக்கியிருந்தால் சுற்றுச் சூழல் குறித்து சரியான விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதுடன், ரசிகர்களிடமும் மகத்தான வரவேற்பைப் பெற்றிருக்கும்.

Share.

Comments are closed.