படத்தின் தலைப்பே சொல்லிவிடும் கதைக்களம் எதுவென்பதை…
சென்னையிலிருந்து மதுரைக்குச் செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் வகுப்புப் பெட்டியில் ஒரு பெண் காெலை செய்யப்படுகிறார். அடுத்த கூப்பேயில் பயணித்த பெண் தற்கொலை செய்து கொள்கிறார். மூன்றாவதாக ஒரு பெண்மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட, அந்தப் பெண் உயிர் தப்பினாலும் கிட்டத்தட்ட கோமா நிலைக்குச் சென்று விடுகிறார்.
இதே ரயிலில் தீவிரவாதி ஒருவனும் பயணம் செய்கிறான். நடந்த கொலைகளுக்கு இவன்தான் காரணமாக இருப்பானோ என்று ஆரம்பத்தில் தோன்றும் ஐயப்பாடு சில நிமிடங்களிலேயே மறைந்து விடுகிறது.
கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்க ரயில்வே துறையின் சிறப்புப் பிரிவு அதிகார் ஆர்.கே. களம் இறங்கியதும் கதை சூடு பிடிக்கிறது. சும்மா சொல்லக்கூடாது…வைகை எக்ஸ்பிரஸ் ரயில்தான் என்றாலும் விறுவிறு வேகத்தில் ஜெட் அளவுக்ககு இருக்கிறது.
எண்பதுகளில் தொடர்சியாக வெளிவந்த ஒரு சி.பி.ஐ.டைரிக்குறிப்பு, நியு டெல்லி போன்ற மலையாளப் படங்களைப்போல் இருக்கையிலேயே கட்டிப்போட்டுவிடுகிறது இந்த வைகை எக்ஸ்பிரஸ். படத்தை இயக்கியிருப்பவர் பிரபல மலையாளப்பட இயக்குநரான ஷாஜி கைலாஷ் ஆயிற்றே.
கம்பீரமான விசாரணை அதிகாரி வேடத்துக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் நாயகன் வேடத்தை ஏற்றிருக்கும் ஆர்.கே.
நீது சந்திரா இரட்டை வேடங்களில் அசத்தியிருக்கிறரா். ரயிலின் முதல் வகுப்பை கவனித்துக் கொள்ளும் டி.டி.ஆர். வேடத்தில் எம்.எஸ்.பாஸ்கர் சிற்ப்பாக நடித்திருக்கிறார் என்றாலும், இப்படி ஒரு பொறுப்பான பதவியில் இருப்பவர் பணி நேரத்திலேயே சீட்டு ஆடுவதற்கு அலைவாரா என்ற கேள்வி எழாமல் இல்லை.
கன்ல் கண்ணனின் சண்டைக் காட்சிகளில் அனல் தெறிக்கிறது. ஒளிப்பதிவாளர் சஞ்சீவ் சங்கரின் கேமரா நெஞ்சில் நிறைகிறது.
விறுவிறுப்பான இந்தப் படத்தில் டூயட் பாடல் வைக்காததற்காக இயக்குநருக்கு தனியாக ஒரு ஸ்பெஷல் பாரட்டை சொல்லலாம்.
அட்டகாசமான இந்த ஆக்ஷன் திரில்லர் அனைவரையும் கவரும் என்பதில் ஐயமில்லை.