Thursday, October 8

சர்வம் தாள மயம் விமர்சனம்

Loading


மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராஜீவ் மேனன் இயக்கத்தில் வந்திருக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்புகளும் அதிகம். அந்த எதிர்பார்ப்புகளை ஏமாற்றமாக்காமல் ஒரு தரமான படத்தைக் கொடுத்திருக்கிறார் ராஜீவ் மேனன்.
மிருதங்கத்தை தயாரித்துக் கொடுப்பவர் குமரவேல். அவரது மகன் ஜி.வி.பிரகாஷ் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு ரசிகர் மன்றத்தில் தீவிரமாக ஈடுபட்டு படிப்பில்கூட சிரத்தை இல்லாமல் இருப்பதுடன், செவிலியராகப் பணியாற்றும் அபர்ணா பாலமுரளியை காதலிக்கிறார்
ஓருமுறை மிருதங்கம் ஒன்றை மகாவித்துவான் நெடுமுடி வேணுவிடம் கொடுக்கும்படி மகனை அனுப்புகிறார் குமரவேல்.
சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக நெடுமுடி வேணுவின் மிருதங்க ஆளுமையை அருகில் அமர்ந்து கேட்டும் ஜி.வி.பிரகாஷுக்கு தானும் அந்த வாத்தியத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுகிறது.
ஆரம்பத்தில் நெடுமுடி வேணு மறுத்தாலும், ஜீ.வி.பிரகாஷ் தீவிரமாக இருப்பதைக் கண்டு அவருக்கு மிருதங்கம் கற்றுத் தர ஒத்துக் கொள்கிறார். வேணுவின் பிரதான சீடரும் மற்ற மாணவர்களுக்கு மிருதங்கம் கற்றுக்கொடுப்பவருமான வினீத், துவக்கத்திலிருந்தே ஜி.வி.பிராகாஷ் மீது வெறுப்புடன் நடந்து கொள்கிறார். மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும்போது எல்லை மீறி கடுமை காட்டும் வினீித்தை கண்டிப்பதுடன் அவரை வீட்டை விட்டே அனுப்பி விடுகிறார் நெடுமுடி வேணு.
தொலைக்காட்சி ஒன்றில் தன் சகோதரி நடத்தும் இசை தொடர்பான ரியாலிட்டி ஷோ ஒன்றுக்கு நடுவராகிறார் வினீத். தன்னுடன் மிருதங்கம் பயிலும் நண்பன் அந்த ரியாலிட்டி இசை நிகழ்ச்சிக்கு பங்கேற்க செல்லும்போது உடன் செல்கிறார் ஜி.வி.பிரகாஷ். அங்கு வினீத் திட்டமிட்டே ஜி.வி.பிரகாஷுக்கு பிரச்னை ஏற்படுத்த, அப்போது ஏற்படும் அடிதடி சண்டையில் ஜி,வி.பிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
நண்பர்கள் உதவியுடன் இந்தியா முழுவதும் பயணித்து பலவகைப்பட்ட இசைக்கருவிகளிலும் பயிற்சி பெற்று நல்லதொரு இசைக்கலைஞனாக உருவெடுத்து குரு மெச்சும் சிஷ்யனாகிறார் ஜி.வி.பிரகாஷ்
படத்தின் மற்றொரு கதாநாயகன் என்று நெடுமுடி வேணுவை தாராளமாகச் சொல்லலாம். அந்த அளவுக்கு அழுத்தமான வேடம் அவருக்கு. வசன உச்சரிப்பிலும் உடல் மொழியிலும் அசத்தியிருக்கிறார் மனிதர்.
ஏற்கும் வேடம் எதுவானாலும் முத்திரை பதிக்கும் வகையில் நடிப்பவர் குமரவேல். நாயகன் பிரகாஷ் குமாரின் அப்பா வேடத்தில் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார். ஆனால் நாயகி அபர்ணா பாலமுரளிக்குதான் அதிக வேலை இல்லை.
படத்துக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்திருப்பது ஏ.ஆர்.ரஹாமானின் பாடல்களும் பின்னணி இசையும்.
ரவி யாதவின் ஒளிப்பதிவு அநாவசியமான ஜாலக்காட்சிகளில் ஈடுபடாமல் நேர்த்தியாக அமைந்திருக்கிறது.
இரண்டாம் பகுதியில் திரும்பத் திரும்ப வரும் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ காட்சிகள் படத்தின் வேகத்தை குறைப்பதுடன் அலுப்பையும் தருகிறது. இந்தப் பகுதிகளில் படத்தொகுப்பாளர் ஆன்டனி தன் கத்திரிக்கோலுக்கு இன்னும் கொஞ்சம் அதிகம் வேலை கொடுத்திருக்கலாம்.
இசைப்பிரியர்கள் மட்டுமின்றி எல்லோரையும் கவரும் தரமான படம் சர்வம் தாள மயம்.