Friday, October 23

ட்ரிப் – விமர்சனம்

Loading

ஆதிவாசிகள் வசித்து வந்த தீவு ஒன்றில் ஒரு காலகட்டத்தில் உணவின்றி மனிதர்களே மனிதர்களை சாப்பிடும் நிலை உருவானதாகவும், இதன் காரணமாக ஆதிவாசிகள் கூட்டமே அழிந்து, மீதமிருந்த ஒரே ஒரு கடைசி மனிதனையும் பூச்சிகளை சாப்பிடும் செடி ஒன்று சாப்பிட்டுவிடவே அந்த கடைசி மனிதனும் அழிந்து விட்டான் என்ற குரல் முன்னுரையுடன் படம் துவங்குகிறது.

சில இளைஞர்களும் யுவதிகளும் அடர்ந்த வனப்பகுதிக்கு ஒரு ட்ரிப் போகிறார்கள். செல்லும் வழியிலேயே ஒரு போன் கால் மூலம் எச்சரிக்கை மணி ஒலிக்கிறது. அந்த காட்டுப்பகுதிக்குள் சென்ற இரண்டு பேரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை என்று அந்த தொலைபேசி செய்யும் எச்சரிக்கையே மீறி பயணத்தைத் தொடர்கிறார்கள்.

செல்லும் வழியில் யோகி பாபுவும் கருணாகரனும் எதிர்படுகிறார்கள். அவர்கள் உடையில் சிகப்பு நிறத்தில் இருக்கும் வர்ணத்தை ரத்தம் என நினைத்து பயப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் இருவரும் அந்த காட்டுக்குள் இருக்கும் ஒரு வீட்டுக்கு ரிப்பேர் வேலைகள் மற்றும் பெயிண்ட் அடிக்க வந்தவர்கள். இந்தத் தவறான புரிதல் கிட்டத்தட்ட படம் முழுக்க தொடருகிறது.

மயங்கி விழுந்த சுனைனாவை யோகிபாபுவும் கருணாகரனும் காப்பாற்றும் நோக்கத்தில் தூக்கிச் செல்ல, அவரகள் கடத்திச் சென்று விட்டதாக நினைத்து நண்பர்கள் காப்பாற்ற முயல்கின்றனர்.
இந்த களேபரத்துக்கிடையில் நண்பர்கள் ஒவ்வொருவராக கொலை செய்யப்படுகின்றனர். யார் இந்த கொலையை செய்கிறார்கள் எதற்காக செய்கிறார்கள் என்பது படத்தின் பின்பகுதியில் தெரிய வருகிறது.

சுனைனா, யோகி பாபு, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன் ஆகிய நால்வர் மட்டுமே தெரிந்த முகங்கள். மற்ற அனைவருமே புதுமுகங்கள். ஆயினும் பதுமுகங்கள் என்று சொல்ல முடியாத அளவுக்கு நன்கு நடித்திருக்கின்றனர். குறிப்பாக பயப்படும் காட்சிகளில் சிறப்பாகச் செய்திருக்கின்றனர்.

யோகி பாபுவையும் கருணாகரனையும் பயன்படுத்திய அளவுக்கு மொட்டை ராஜேந்திரனை பயன்படுத்தவில்லை.

நரமாமிசத்துக்காகதான் கொலையே நடக்கிறது என கதையில் சொல்லிவிட்டு, கொலை செய்த பிறகு அந்த பிரேததத்தேக்கூட எடுத்துச் செல்லாமல் அப்படியே போட்டுவிட்டுப் போய்விடுவதுபோல் காட்சியை அமைத்திருப்பது லாஜிக் இடிக்கிறதே.

துவக்கத்தில் வரும் அறிமுக உரையில் ஆதிவாசிகள் வசித்த தீவு என்று சொல்கிறார்கள். கதை நடக்கும் அந்தத் தீவுக்கு எல்லோரும் காரிலும், ஜீப்பிலும் போகிறார்கள். கப்பலோ படகோ கண்ணில்கூட காட்டவில்லை.

படத்தின் மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட் உதய சங்கரின் அருமையான ஒளிப்பதிவுதான். நாமே அந்த அடர்ந்த காட்டுக்குள் இரண்டரை மணி நேரம் இருந்து விட்டு வந்ததுபோல் இருக்கிறது.

திகில் படத்தின் உயிர்நாடியே ரீரெக்கார்டிங்தான். ட்ரிப் படத்தின் இசையமைப்பாளர் சிந்து குமார் இதே புரிந்து கொண்டு தன் உழைப்பைக் கொட்டியிருக்கிறார்.

படம் ஆரம்பமாகும்போது அந்தத் தீவு பற்றிய அறிமுகத்தில் நரமாமிசம் சாப்பிடுபவர்கள் இருந்தார்கள் என சொல்லியிருப்பதையும், விஞ்ஞானி ஒருவர் அந்தத் தீவில் இருக்கும் தாவரத்தின் டி.என்.ஏவில் மனிதனின் டி.என்.ஏ.கூறுகள் இருப்பதை கண்டுபிடிப்பதாக தொடர்பு படுத்தியிருப்பதும் நன்றாக இருக்கிறது.

நகைச்சுவை கலந்த இந்த திகில் படத்துக்கு ஒரு ட்ரிப் அடித்துவிட்டு வரலாம்.