Wednesday, June 17

29 விமர்சனம்

Loading

29 விமர்சனம்

‘மேயாத மான்’, ‘ஆடை’ ஆகிய வித்தியாசமான படங்களை கொடுத்த இயக்குனர் ரத்தினகுமார், மாறுபட்ட கோணத்தில் காதலை சொல்லி இருக்கும் படம் தான் 29.

ஒரு மனிதனின் வாழ்வில் 29 வயது என்பது மிகவும் முக்கியமானது. தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவும், தான் யார் என்பதை நிரூபிக்கவும் இந்த வயதில் ஓர் உத்வேகம் ஏற்படும். இந்த விஷயத்தை கதைக்களமாக கொண்டு இயக்குனர் ரத்தினகுமார் வழங்கி இருக்கும் புதுமை படைப்பு 29.

சேலத்தில் இருந்து சென்னை வந்து ஒரு மேன்ஷனில் தங்கி வேலை செய்து கொண்டிருக்கும் இளைஞன் சத்யாவின் வாழ்க்கையில் நுழைந்த விஜி என்ற இளம் பெண், அவனது வாழ்க்கையில் எந்த வகையான பாதிப்புகளை எல்லாம் ஏற்படுத்துகிறாள்? அதன் விளைவுகள் என்னென்ன என்பதுதான் 29 திரைப்படத்தின் கதை.

அனேகமாக எல்லா படங்களிலும்தான் காதல் வருகிறது. ஆனால் காதலை புதிய கோணத்தில் சொல்லும் படங்கள் மிகச் சில மட்டுமே.

இந்த மிகச்சில படங்களின் வரிசையில் இடம் பெற்று இருப்பதுதான் 29 திரைப்படம்.

திருமண வயதைக் கடந்து விட்டால் பெண் மட்டுமல்ல ஆணும் கேலிக்குள்ளாகத்தான் செய்கிறான்.

தனக்கென்று ஒரு லட்சியம் எதுவுமின்றி பார்க்கும் வேலையிலேயே கவனமாக இருந்து வருகிறான் சத்யா.  அலுவலகத்தில் உடன் வேலை பார்க்கும் விஜியுடன் பழகும் சத்யா, அந்த பழக்கம் வெறும் நட்புதானா இல்லை காதலா என்று தெரியாமல் தடுமாறுகிறான்.

விஜி தான் சத்யா மீது கொண்ட காதலை மறைமுகமாக அவனிடம் வெளிப்படுத்த, இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர்.
ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற லட்சிய கனவுடன் அதற்காக கடுமையான பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறாள் விஜி.

“பெரியவன் ஆன பிறகு என்னவாக ஆசைப்படுகிறாய்..?” என்ற கேள்விக்கு “பெரியவனாகத்தான் ஆசைப்பட்டேன்…” என்று பதில் சொல்லும் சத்யா, விஜி தன்னை காதலித்த ஆரம்பித்த பிறகு அழகும் அறிவும் மிக்க விஜிதான் என் காதலி என்ற அடையாளத்துடன் தன்னை முடக்கிக் கொள்ள முயல்கிறான்.

ஆனால் விஜியோ, “காதல் என்பது மட்டுமே வாழ்க்கை அல்ல… காதல் வாழ்க்கையின் ஒரு பகுதி தான் உனக்கான அடையாளத்தை நீ உருவாக்கிக் கொள்ள வேண்டும்” என்று சத்யாவுக்கு புரியவைக்க முயற்சிகளை மேற்கொள்கிறாள்.

ஆனால் அவை எதுவும் பிடிபடாத சத்யா தனது இயல்பிலேயே இருப்பதை கண்ட விஜி, வேறு வழியின்றி அவனை விட்டு பிரிவது என்ற முடிவை எடுக்கிறாள்.

டெல்லிக்கு சென்று வேலை பார்த்துக் கொண்டே ஐஏஎஸ் பயிற்சி பெற போவதாக சொல்லிவிட்டு சத்யாவிடம் இருந்து விஜி பிரிந்த செல்கிறாள்.

இதனால் நிலைகுலைந்து போகும் சத்யா தனக்கான அடையாளத்தை எவ்வாறு ஏற்படுத்திக் கொண்டான் என்பது படத்தின் பிற்பகுதி.

கதாநாயகன் சத்யா வேடத்தில் தோன்றும் விது மிக இயல்பாக நடித்து நெஞ்சைக் கவர்கிறார்.
அவரது உயரமும் முதிர்ச்சியான தோற்றமும் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

விஜி வேடத்தில் கதாநாயகியாக வரும் ப்ரீத்தி அஸ்ராணி யதார்த்தமான நடிப்பால் நம் நெஞ்சை நெகிழ வைக்கிறார். கடற்கரையில் தன் காதலை வெளிப்படுத்தும் காட்சியில் ரசிக்க வைக்கிறார்.

ஷான் ரோல்டன் இசையமைப்பில் உருவான பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்கு உயிரோட்டமாக அமைந்திருக்கிறது.

வண்ணங்களை வாரி இறைத்து ஒரு fantasy தன்மையை தராமல் யதார்த்தமாக ஒளிப்பதிவு செய்து படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம்.

காதல் ஒரு மனிதனின் வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதை சொல்லி இருக்கும் தரமான படம்தான் 29.

மதிப்பெண் 4/5