Monday, September 28

போர் _ திரைப்பட விமர்சனம்

Loading

போர் _ திரைப்பட விமர்சனம்

பாடங்களை நடத்தாத பல்கலைக்கழகம் அதில் வகுப்பறைகளுக்கு செல்லாத மாணவர்கள் இதுதான் போர் திரைப்படம்.

கல்லூரியில் சீனியர் பிரபு, ஜூனியர் யுவா. இருவருக்கும் சிறு வயதில் இருந்தே முட்டல் மோதல். இந்த மோதல் கல்லூரியில் சேர்ந்த பிறகு பெரிய அளவில் வெடிக்கிறது.

கல்லூரியில் நடக்கும் தேர்தலில் அரசியல்வாதியின் மகளை எதிர்த்து போராடும் புரட்சிப் பெண் காயத்ரி, சக மாணவர்களுக்கு போதைப் பொருட்களை சப்ளை செய்தாலும் தனக்குள்ளே சோகத்தை சுமந்து திரியும் ரிஷிகா என மற்ற சில மாணவர்களும் இருக்கிறார்கள்.

இவர்களுக்கிடையிலான யுத்தம்தான் போர் திரைப்படம்.
பிரபு என்கிற மாணவனாக அர்ஜுன் தாஸ். வழக்கம்போல பாத்திரம் அறிந்து தனது நடிப்பை கொட்டி இருக்கிறார். கோபம், காதல் என அனைத்துவித உணர்வுகளையும் அளவாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
யுவா என்கிற மாணவனாக காளிதாஸ் ஜெயராம். துள்ளலான மாணவனாக முத்திரை பதித்து இருக்கிறார். குறிப்பாக காதல் காட்சிகளில் கூடுதலாக ரசிக்கவைக்கிறார். மோதல் காட்சிகளும் ஓகேதான்.

டி.ஜே.பானு, சஞ்சனா நடராஜன் ஆகியோரும் சிறப்பாக நடித்து உள்ளனர்.
படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது ஒளிப்பதிவு. கல்லூரி வளாகத்தை காண்பிக்கும்போதும் சண்டை காட்சிகளிலும் ரசிக்க வைக்கிறது கேமரா.
ஜிம்ஷித் காலித் மற்றும் பிரிஸ்லி ஆஸ்கர் டிசோஸா இருவரும் உழைப்பும் ஒளிப்பதிவில் தெரிகிறது. ஆயினும் இந்த அருமையான ஒளிப்பதிவு விழலுக்கு இறைத்த நீர் என்று தான் சொல்ல வேண்டும்.

பின்னணி இசை, பாடல்கள் ஓகே ரகம்.

ஆனால் கதைதான் பிரச்சினையாக இருக்கிறது. கல்லூரி தேர்தல், சாதி பிரச்சினை, காதல், பெண் சுதந்திரம், தன்பாலின ஈர்ப்பு என என்னென்னவோ காட்சிகள் இருந்தும் எதுவும் மனதில் பதியும்படி சொல்லவில்லை இயக்குநர் பிஜோய் நம்பியார்.

ஏதாவது ஒரு பிரச்சினையை அடிப்படையாக வைத்து கதையை உருவாக்கி இருக்கலாம்.

‘போர்’ மகா Bore.