![]()
கீனோ_ விமர்சனம்
நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த தம்பதியரான மகாதாரா பகவத் மற்றும் ரேணுகா சதீஷின் மகன் கந்தர்வா.
பதின் பருவத்தில் நிற்கும் கந்தர்வாவுக்கு அடிக்கடி கருப்பு உடை அணிந்த ஓர் உருவம் தோன்றி “நான்தான் கீனோ… என்னுடன் வந்துவிடு… “என்று அழைத்து பயமுறுத்துகிறது.
வீட்டில்தான் இந்தத் தொந்தரவு என்று பார்த்தால் சாலையில் தனியாக இருக்கும் காலி இடத்தை கண்டாலே அந்த உருவம் தோன்றி கந்தர்வாவை பயமுறுத்துவதும், தன்னிடம் வா என்று அழைப்பதுமாக இருக்கிறது.
ஏதேனும் துஷ்ட சக்தியாக இருக்கலாம் என்று நினைத்து சாமியார்கள் சிலரை அழைத்து வந்து இந்த அமானுஷ்யத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார் அப்பா பகவத்.
இதற்குக் காரணம் தீய சக்திகள் எதுவும் இல்லை என்று தெரிய வந்தாலும் கீனோ என்பது யார் அல்லது என்ன என்ற கேள்விக்கு விடை தெரியாமலே இருக்கிறது.
யார் இந்த கீனோ? இதன் நோக்கம் என்ன? கந்தர்வாவின் கதி என்ன ஆகிறது என்பது படத்தின் பிற்பகுதியில் தெரிய வருகிறது.
தந்தை, தாய் மற்றும் மகன் வேடத்தில் முறையே மகாதாரா பகவத், ரேணுகா சதீஷ் மற்றும் கந்தர்வா ஆகியோர் மிக இயல்பாக நடித்துள்ளனர்.
கீனாவின் உருவமும் குரலும் படம் பார்ப்பவர்களை நன்றாகவே பயமுறுத்துகிறது.
படத்தை எழுதி இயக்கியிருப்பதுடன் இசை அமைப்பையும் செய்திருக்கும் ஆர் கே திவாகர் கீனோ வேடத்தில் கலக்கி இருப்பதை தாராளமாக பாராட்டலாம்.
தமிழ் திரையுலகில் இதுவரை சொல்லாத கதை களத்தை வைத்து படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ஆச்சரியப்படுத்துகிறது.
ஆலிவர் டேனியின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது.
வித்தியாசமான கதையை படமாக்குவதற்காக தேர்ந்தெடுத்தவர்கள் அதை இன்னும் விறுவிறுப்பாக சொல்லி இருக்கலாம்.
திகில் பட ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து ரசிகர்களையும் கவரும் படம் கீனோ.
