Tuesday, October 27

ட்ரெண்டிங் _ விமர்சனம்

Loading

ட்ரெண்டிங் _ விமர்சனம்

இன்றைய இளைய தலைமுறை இணைய தலைமுறையாகவே தங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொண்டிருப்பது குறித்து உரத்த சிந்தனையை கிளரும் படம் ட்ரெண்டிங்.

கலையரசன் பிரியாலயா தம்பதி யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி வித்தியாசமான வீடியோக்களை போட்டு, அதன் மூலம் லட்சக்கணக்காண ஃபாலோயர்ஸைப் பெற்று வருமானமும் ஈட்டி, வசதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள்.

சமூக ஊடகத்தின் மூலம் புகழ் பெறும் இத்தம்பதி தங்களுக்கு கிடைக்கும் வருமானம் நிரந்தரம் என நினைத்து தங்கள் சக்திக்கு மீறிய ஆடம்பரமான வீட்டை மாத தவணை முறை மூலம் வாங்குகின்றனர்.

திடீரென அவர்களுடைய youtube சேனல் முடங்கி போய்விட செய்வதற்காக திகைத்து நிற்கின்றனர்.

இ எம் ஐ கட்ட முடியவில்லை…
கடன் காரர்களின் மிரட்டல் என்ற நிலையில் இருக்கும்போது மர்மமான ஒரு தொலைபேசி அழைப்பு கலையரசனுக்கு வருகிறது.

பிக் பாஸ் பாணியிலான ஒருவகை விளையாட்டில் ஈடுபட்டால் லட்சக்கணக்கான பணம் சுலபத்தில் சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டுகிறது அந்த மர்மக்குரல்.

ஆனால் கலையரசன் அந்த அழைப்பை நிராகரித்து விட, பிரியாலயா அந்த அழைப்பை ஏற்றுக் கொள்ள, வேறு வழியின்றி இருவரும் ஆட்டத்தை ஆரம்பிக்கின்றனர்.

சமூக ஊடக பிரபலமான இந்த தம்பதியின் நடவடிக்கைகளை ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் தொலைக்காட்சியில் அந்தரங்கமாக பார்த்து வருகின்றனர்.

கடன் பிரச்சனையை சமாளிக்க ஓரளவு விளையாடி பணம் சம்பாதித்ததும், விலகி விடலாம் என்று நினைத்த தம்பதி பொறியில் அகப்பட்ட எலிபோல் இந்த விளையாட்டில் சிக்கிக் கொள்கின்றனர்.

யார் இந்த விளையாட்டை நடத்துகிறார்கள்? எதற்காக இந்த வக்கிரம் பிடித்த விளையாட்டு நடத்தப்படுகிறது? என்பதெல்லாம் படத்தின் பிற்பகுதியில் சொல்லப்படுகிறது.

மனம் ஒத்த தம்பதியாக மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்தியவர்கள் இந்த மர்ம விளையாட்டால் எப்படி ஒருவருக்கொருவர் அந்நியமாகி தங்கள் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கும் நிலைக்கு செல்கிறார்கள் என்பதுதான் ட்ரெண்டிங் படத்தில் கதை.

கலையரசன் பிரியாலயா தவிர பிற்பகுதியின் இறுதியில் வரும் பிரேம்குமார் ஆகிய மூன்று பேரும்தான் இந்தப் படத்தில் முக்கிய பாத்திரங்கள்.

இந்த மூன்று பாத்திரங்களை மட்டுமே வைத்து மிகவும் விறுவிறுப்பான முறையில் அடுத்து என்ன நடக்குமோ என்று ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் அருமையாக படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சிவராஜ்.படத்தின் கதை வசனமும் இவரே.

சமகால பிரச்சனைகளை கதைக்களமாக் கொண்டு, வித்தியாசமான கதையை எழுதி அதை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் கொடுத்த இயக்குனர் சிவராஜை தாராளமாகப் பாராட்டலாம்.

சாம் சி.எஸ். இசையமைப்பு படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது.

படத்தின் பெரும் பகுதி ஒரு வீட்டுக்குள்ளேயே நடக்கிறது என்றாலும் அதை அலுப்பு தட்டாத வகையில் படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரவீன் பாலு.

மனைவி மீது பாசம் காட்டும் காட்சிகளிலும், கோபப்படும் காட்சிகளிலும் சோபிக்கிறார் கலையரசன்.

அவருக்கு ஈடு கொடுத்து தனது பாத்திரத்தை சரியாக உள்வாங்கி சிறப்பாக நடித்திருக்கிறார் பிரியாலயா.

பரிதாபிமான தோற்றத்துடன் உதவி கேட்டு வந்து, பின்னர் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் பிரேம்குமார் நடிப்பும் கவனம் ஈர்க்கிறது.

இளைய தலைமுறை மட்டுமல்ல அனைவரும் பார்த்து மகிழத்தக்க அருமையான ப(பா)டம் ட்ரெண்டிங்.

மதிப்பெண் 3.5/5