![]()
இந்திரா_ விமர்சனம்
சென்னை நகரிலே தொடர்ச்சியாக சில கொலைகள் நடைபெறுகின்றன.
சைக்கோ கொலையாளி ஒருவன் இந்த கொலைகளை செய்வதாக காவல்துறை சந்தேகிக்கிறது.
கொலையுண்டவரின் கையை கொலையாளி வெட்டி எடுத்துச் சென்று விடுகிறான்.
மதுபோதையில் காவல்துறை வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்தியதற்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்த் ரவி தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுகிறார்.
அத்துடன் அவருக்கு திடீரென கண் பார்வை பறிபோகிறது.
இந்த சூழ்நிலையில் வசந்த் ரவியின் மனைவி மெஹ்ரின் பிர்சோடாவும் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்.
சைக்கோ கொலையாளி என போலீஸ் சந்தேகப்பட்டு, விசாரணை செய்யும் சுனில், தான் 28 கொலைகளை செய்ததாகவும் ஆனால் வசந்த் ரவியின் மனைவியை தான் கொல்லவில்லை என்றும் கூறுகிறார்.
கொலைகளை விசாரணை செய்யும் இன்ஸ்பெக்டர் கல்யாண், வசந்த் ரவிதான் தன் மனைவியை கொன்று இருப்பார் என சந்தேகம் ஏற்படுகிறது.
உண்மையில் நிஜமான கொலையாளி யார்?
எதற்காக அவர் வசந்த் ரவியின் மனைவியை கொலை செய்கிறார்? என்பது படத்தின் பிற்பகுதி.
துவக்கத்திலிருந்து இறுதிவரை மிகவும் விறுவிறுப்பான ஒரு திரில்லர் படத்தை கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் சபரீஷ் நந்தா.
படத்தின் விறுவிறுப்புக்கு வெகுவாக துணை நிற்பது பிரபு ராகுவின் ஒளிப்பதிவு மற்றும் எடிட்டர் பிரவீன் கத்திரியும்தான். அஜ்மல் தஹ்ஸீன் பின்னணி இசை, திரில்லர் படத்துக்குரிய விறுவிறுப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறது.
திரில்லர் படங்களில் பொதுவாக நாயகன் நாயகனுக்கு நடிக்கும் வாய்ப்பு குறைவாகவே இருக்கும்.
ஆனால் இந்திரா படத்தை பொறுத்தவரை, நாயகன் வசந்த் ரவிக்கு ஆழமான நடிப்பை வெளிப்படுத்தும் காட்சிகள் நிறையவே உண்டு.
அவற்றை சிறப்பாக பயன்படுத்தி நடிப்பில் முத்திரை பதிக்கிறார் வசந்த் ரவி.
28 கொலைகள் செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் தரும் சுனில் செய்த கொலைகளை அப்படியே விட்டு விட்டு அது குறித்து விசாரிக்காமல் வசந்த் ரவியின் மனைவி கொலை குறித்து மட்டுமே போலீஸ் விசாரணை செல்வது ஏன்?
இதுபோன்ற ஓரிரு லாஜிக் குறைகள் இருப்பதை தவிர்த்து இருக்கலாம்.
இறுதிவரை சஸ்பென்ஸ் நீடித்து, இருக்கையில் பார்வையாளர்களை கட்டி போடுவது படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்.
சஸ்பென்ஸ் திரில்லர் வகை படங்களை ரசிக்கும் ரசிகர்கள் மட்டுமல்ல, அனைத்து ரசிகர்களும் தாராளமாக இந்தப் படத்தை கண்டு மகிழலாம்.






