Wednesday, October 1

குட் நைட் – திரைப்பட விமர்சனம்

Loading

மனம் விட்டு இப்படி சிரித்து மகிழ்ந்து ஒரு படத்தைப் பார்த்து எவ்வளவு நாட்களாகி விட்டன.

ஐடி நிறுவனமொன்றில் பணியாற்றும் மணிகண்டன் தன் தாய், தங்கை அக்கா ஆகியோருடன் வசித்து வருகிறார். அக்காவுக்கு மணமாகிவிட்டாலும், தன் கணவர் ரமேஷ் திலக்குடன் அம்மா வீட்டிலேயே வசிக்கிறார்.

மணிகண்டனின் மிகப்பெரிய பிரச்சனையே தூங்கும்போது அவர் விடும் குறட்டை சத்தம்தான். அவர் விடும் குறட்டையின் டெசிபல் சத்தம் பக்கத்து வீடு எதிர்வீடு வரை கேட்கும்.

மோகன் என்ற பெயர் கொண்ட அவரைஅலுவலக நண்பர்கள் மோட்டார் மோகன் என்று அழைக்கும் அளவுக்கு அவரது குறட்டை பிரபலமாக இருக்கிறது.

அலுவலக்த்தில் உடன் பணியாற்றும் தோழியிடம் ப்ரபோஸ் பண்ண நினைக்கும்போது, ஒரு பஸ் பயணத்தில் தூங்கும் மணிகண்டன் விடும் குறட்டையைப் பார்த்து  “ஒரு சின்ன பஸ் பயணத்திலேயே உங்கள் குறட்டையை என்னால் சகிக்க முடியவில்லை, வாழ்க்கை முழுக்க உங்களுடன் சேர்ந்து எப்படி பயணிப்பது?”  என்று சொல்லி விலகி விடுகிறார்.

இளகிய மனம் கொண்ட மீத்தா ரகுநாத்துடன் மோகனுக்கு ஏற்படும் அறிமுகம் காதலாக மலர்ந்து திருமணம் நடக்கிறது.

மணிகண்டனின் குறட்டை சத்தம் மனைவி மீத்தாவின் தூக்கத்தை வெகுவாக பாதித்து மருத்துவரிடம் செல்லும்வரை போகிறது.

மீத்தா குறட்டை சத்தத்தை குறையாக நினைக்காமல், கணவனின் பக்கத்திலேயே படுக்க வேண்டும் என்று நினைக்க, குற்ற உணர்ச்சி காரணமாக மணி கண்டன் தனி அறையில் படுக்கிறார்.

நாளுக்கு நாள் சிக்கல் அதிகமாகி பிரச்சனை பெரிதாகிறது. இறுதியில் குறட்டை பிரச்சனை தீர்ந்ததா இல்லையா என்பதை சுவைபட திரையில் வடித்திருக்கிறார் குட்நைட் படத்தை எழுதி இயக்கியிருக்கும் விநாயக் சந்திரசேகரன்.

கதை சாதாரணமானது என்றாலும், சரியான திரைக்கதை மூலம் நகைச்சுவை கலந்து கொடுத்திருப்பதால் எந்தக் காட்சியிலும் தொய்வு இல்லாமல் ரசிக்க முடிகிறது.

மணிகண்டன், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், பக்ஸ் ஆகிய நான்கு பேரைத் தவிர மற்ற அனைவரும் அறிமுகமில்லாத முகங்களாக இருப்பதால் அந்தந்த பாத்திரங்களாகவே அவர்கள் நம் மனதில் பதிகிறார்கள்.

தாத்தா பாட்டி என்று ஒரு முதிய தம்பதியை மீத்தா ரகுநாத் அழைப்பதைப் பார்த்து  “உங்கள் தாத்தா பாட்டியா?”  என்று மணிகண்டன் கேட்க,  “இல்லை ஹவுஸ் ஒனர்ஸ்…” என்று மீத்தா பதில் சொல்லும் காட்சி,  “அக்கா தலைக்கு எண்ணை தேய்ச்சு விடுக்கா…”  என்று மணிகண்டன் அக்காவின் பக்கத்தில் வந்த அமர்வது என்று ரசமானகாட்சிகள் படத்தில் நிறையவே இருக்கின்றன.

பக்கத்து வீட்டுப் பெண் போல் இருக்கும் மீத்தாவின் எளிமையான அழகும் அவரது வசன உச்சரிப்பும் அவரது பாத்திரத்தை மெருகேறுகின்றன.

வலுவான பாத்திரத்தில் வரும் ரமேஷ் திலக் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சிக்ஸராக அடித்து விளாசுகிறார்.

பெரும்பாலான காட்சிகள் உட்புற படப்பிடிப்பு என்றாலும், அவற்றை அலுப்பு தட்டாத வண்ணம் அழகாக படம் பிடித்திருக்கிறார் ஓளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவன்.

ஷான் ரோல்டனின் பின்னணி இசை படத்துக்கு உயிரோட்டமாக அமைந்திருக்கிறது.

குடும்பத்தில் உள்ள அனைவரும் திரையரங்குக்குச் சென்று பார்க்கத் தக்க தரமான படம் குட்நைட்.
மதிப்பெண் 4 5