Wednesday, October 28

எம்ஜிஎம் திரைப்பட விமர்சனம்

Loading

நடிப்பு: ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, ஆர்ஜே விஜய், வெங்கட் பிரபு, விடிவி கணேஷ், ஸ்ரீநாத், வினோதினி வைத்தியநாதன், தீபா சங்கர், விக்கல்ஸ் விக்ரம், ஹரி முனியப்பன், சாண்டி மற்றும் பலர்

இயக்கம்: ரமேஷ் தமிழ்மணி

ஒளிப்பதிவு: விஸ்வஜித் ஒடுக்கத்தில்

படத்தொகுப்பு: பிரதீப் இ ராகவ்

இசை: ரமேஷ் தமிழ்மணி

பேனர்: தோனி எண்டர்டெய்ன்மெண்ட், டெல்டா ஸ்டூடியோஸ்

தயாரிப்பு: சாக்‌ஷி சிங் தோனி, விகாஸ் ஹசிஜா

தமிழக வெளியீடு: சக்தி ஃபிலிம் ஃபேக்டரி

பத்திரிகை தொடர்பு: யுவராஜ் (யுவி கம்யூனிகேசன்ஸ்)

நம்ம தல தோனி முதல் முறையாக திரைப்படத்  தயாரிப்பில் இறங்கி, அதுவும் தமிழ் படத்தை தயாரித்திருப்பதற்காக முதலில் அவருக்கு நாம் வாழ்த்துகளை தெரிவித்து விடுவோம்.

‘லெட்ஸ் கெட் மேரிட்’ என்பதன் முதல் எழுத்துக்களே எல்ஜிஎம் என்று படத்தலைப்பாகியிருக்கிறது.

மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஹரிஷ் கல்யாணும் இவானாவும் நண்பர்களாக பழகுகிறார்கள்.

இரண்டு வருட பழக்கத்தில் அவர்களது எண்ண அலைவரிசை ஒத்துப் போவதால் ஹரிஷ் கல்யாண் தனது காதலை வெளிப்படுத்த, இவானாவும் அதை ஏற்றுக் கொள்கிறார்.

திருமணம் குறித்து பேச, தன் தாய் நதியாவுடன் இவானா வீட்டுக்கு செல்கிறார் ஹரிஷ் கல்யாண்.

அப்போது  “உன்னை என் மகள் போல் பார்த்துக் கொள்வேன்…” என்று நதியா தன் வருங்கால மருமகளிடம் சொல்ல, அதிர்ச்சி அடையும் இவானா தனியாகப் பேச வேண்டும் என்று ஹரிஷ் கல்யாணை அழைக்கிறார்.

திருமணத்திற்கு பின் அம்மாவுடன் சேர்ந்து நாம் ஒரே வீட்டில் வசிக்க முடியாது என்று இவனா தெரிவிக்க ஹரிஷ் கல்யாண் அதிர்ச்சி அடைகிறார்.

 தந்தை இல்லாத தனக்கு தாயும் தந்தையுமாக இருந்து வளர்த்த அம்மாவை பிரிந்து தனியாக தன்னால் வர முடியாது என்று சொல்கிறார் ஹரிஷ் கல்யாண்.

இதனால் திருமணம் தடை படுகிறது.

திருமணம் தடைபட்டு நின்ற காரணத்தை கூட தன் தாயாரிடம் தெரிவிக்காமல் மறைக்கிறார் ஹரீஷ் கல்யாண்.

 “நாம் இருவரும் இரண்டு வருடங்கள் பழகிப் பார்த்து ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட பிறகுதானே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தோம். அதேபோல் என் மாமியாரையும் நான் புரிந்து கொள்ள விரும்புகிறேன்” என்று சொல்கிறார் இவானா.

இரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் ஒரு சுற்றுலா செல்வது என்றும், அப்போது ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ளலாம் என இவானா சொல்வதற்கு ஹரிஷ் கல்யாணம் ஒத்துக்கொண்டு சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்கிறார்.

திருமணத்தை காரணம் இன்றி நிறுத்திவிட்ட காரணத்தால் சுற்றுலாவின்போது இவானாவின் குடும்பத்தாருடன் சரியாக முகம் கொடுத்து பேசாமல் தவிர்க்கிறார் நதியா.

பிரச்சனை இன்னும் பெரிதாகவே, அதை உணர்ந்த ஹரிஷ் கல்யாண் இரு குடும்பத்தாரையும் தனித்தனி பஸ்ஸில் சென்னைக்கு திருப்பி அழைத்துச் செல்ல முடிவு செய்கிறார்.

இந்த இடத்தில் ஒரு எதிர்பாராத திருப்பம்….

ஆனால் ஹரிஷ் கல்யாண் எதிர்பாராத வகையில் அவரையும் சேர்த்து பேக்கப் செய்து சென்னைக்கு அனுப்பி விட்டு மாமியாரும் வருங்கால மருமகளும் ஒன்றாக தங்கி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள திட்டமிடுகின்றனர்.

“நீங்கள் நீங்களாக இருங்கள் நான் நானாக இருக்கிறேன் யாரும் யாருக்காகவும் மாற வேண்டாம்” என்று தன் வருங்கால மாமியாரிடம் சொல்கிறார் இவானா.

இருவரும் தனியாக மேற்கொண்ட பயணம் எப்படி அமைந்தது?

நதியா இவானாவை தன் மருமகளாக்கிக் கொள்ள சம்மதித்தாரா?

இவானா மாமியாருடன் சேர்ந்து கணவருடன் ஒரே வீட்டில் வசிக்க ஒத்துக் கொண்டாரா என்பது கதையின் பிற்பகுதி.

படத்தைப் பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் முதல் பந்தையே ஹெலிகாப்டர் ஷாட் அடித்து சிக்ஸர் ஆக்கிவிட்டார் தல தோனி.

மிகைப்படுத்தப்பட்ட டிராமா எதுவுமின்றி யதார்த்தமான காட்சிகளுடன் மிகத் தரமான படமாக அமைந்திருக்கிறது எல்ஜிஎம்.

முதல் பாதியில் நகைச்சுவை காட்சிகளுக்கும் கலகலப்புக்கும் பஞ்சமே இல்லை.

ஹரிஷ் கல்யாண் நண்பனாக படம் முழுவதும் வரும் ஆர் ஜே விஜய் அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை.

“இந்த காலத்தில் புருஷன் பொண்டாட்டி சேர்ந்து ஒரே வீட்டில் வசிப்பதே பெரிய விஷயம் இதில் மாமியாரும் சேர்ந்து இருப்பது ஐயையோ நினைத்பார்க்க முடியாது…” என்று அவர் ஒரு காட்சியில் சொல்லும்போது தியேட்டரே கலகலக்கிறது.

மேலும் சுற்றுலா பயண பேருந்து ஓட்டுனராக வரும் யோகி பாபு அவருக்கே உரிய பாணியில் நகைச்சுவையில் அமர்க்களப்படுத்தி இருக்கிறார்.

தன் காதலை இலியானா ஏற்றுக் கொள்வாரோ மாட்டாரோ என்று தவிக்கும் காட்சியிலும்,  முடிவு எடுக்க முடியாமல் திணறுகிற காட்சிகளிலும் மிக நன்றாக நடித்திருக்கிறார் ஹரிஷ் கல்யாண்.

பாட்டியின் பாசமலர்களில் சிக்கித் தவிக்கும் பேத்தியாக பூவே பூச்சூடவா படத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் அறிமுகமான நதியா,  இந்தப் படத்தில் ஏற்றிருப்பது மாமியார் வேடம் என்றாலும் அழகு குறையாமலும், வயது ஏறாமலும் அப்படியேதான் இருக்கிறார்.
கோவில் குளங்களுக்கு செல்லும் டிபிகல் அம்மாவாக படத்தின் முற்பகுதியில் வரும் நதியா பிற்பகுதியில் நடன விடுதிக்கு சென்று ஆட்டம் போடும் காட்சியில் வேறு வகை உடல் மொழியில் வித்தியாசம் காட்டி நடிப்பில் சோபிக்கிறார்.

ஒரே வீட்டில் வாழப்போகும் மாமியாரை திருமணத்திற்கு முன்பே  புரிந்து கொள்ள முயற்சிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்ற நிலைப்பாட்டில் இருக்கும் பாத்திரத்தை உணர்ந்து நதியாவுடன் போட்டி போடும் வகையில் சிறப்பாக நடித்திருக்கிறார் இவானா.

சிறிய பாத்திரங்களில் வந்தாலும் வெங்கட் பிரபு,  வினோதினி வைத்தியநாதன்,  தீபா சங்கர் ஆகியோர் நினைவில் நிற்கிறார்கள்.

துவக்கத்திலிருந்து இறுதிவரை சற்றும் தொய்வில்லாமல் படத்தை இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி.

படத்தின் இசையமைக்கும் பொறுப்பையும் இவரே ஏற்று இருக்கிறார். பாடல்களும் பின்னணி இசையும் கவனம் ஈர்க்கின்றன.

படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் விஸ்வஜித் ஒடுக்கத்தில் அவர்களின் ஒளிப்பதிவு. கோவா வெளிப்புற காட்சிகளை மிக அற்புதமாக படம் பிடித்து இருக்கிறது இவரது கேமரா

பழிவாங்கும் படலத்தையே படமாக பார்த்த கண்களுக்கும், அதீத மசாலா கதைகளை ஆர்வமாக ரசித்துப் பார்த்த மனங்களுக்கும் இந்தப் படம் சாதாரணமாக தெரிந்தால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

எளிமையான கதையை எதார்த்தமான காட்சிகளுடன் மிக அழகாக திரைப்படமாக்கி இருக்கிறார் இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி.

குடும்பத்துடன் பார்த்து மகிழத் தக்க தரமான படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் எல்ஜிஎம்

மதிப்பெண் 3.5/5