ஆலன் _ விமர்சனம்
சிறுவயதிலிருந்தே எழுதுவதில் ஆர்வமுள்ள சிறுவன் தியாகு விபத்து ஒன்றில் தன் குடும்பத்தில் உள்ள அனைவரையும் இழந்து, ஆன்மீகத்திலாவது நிம்மதி கிடைக்குமா என்று எதிர்பார்த்து காசிக்கு வந்து விடுகிறான்.
விபத்தில் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீள முடியாத தியாகுவுக்கு ஆன்மீகமும் அமைதி தரவில்லை.
தியாகுவிடம் உள்ள எழுத்துத் திறமையை அறிந்த அவரது ஆன்மீக குரு எழுதுவதற்கு தியாகுவை ஊக்கப்படுத்துகிறார்.
“நீ சாதாரண மனிதனாக வாழ்ந்து உன் எழுத்து திறமையை மக்களிடம் நிரூபித்து அமைதி தேடு…” என்று அறிவுரை கூறுகிறார்.
அதனை ஏற்றுக் கொண்டு தமிழ்நாட்டிற்கு வரும் தியாகு, ஜெர்மனி பெண்ணான மதுராவை சந்திக்கிறான். மதுராவுடன் ஏற்படும் நட்பு, பின்னர் காதலாக மலர்கிறது.
சில சமூக விரோதிகள் மதுராவை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிக்கின்றனர். அவர்களிடமிருந்து தப்பித்து ஓடும்போது கீழே விழுந்து மதுரை இறந்து விடுகிறாள்.
இதனால் மீண்டும் மனம் உடைந்த தியாகு சந்நியாச வாழ்க்கைக்கு செல்கிறான். இந்த முறையாவது தியாகுவுக்கு ஆன்மீகத்தில் அமைதி கிடைத்ததா?
அமைதியான முகமும் ஆர்ப்பாட்டம் இல்லாத உடல் மொழியும் கொண்ட நடிகர் வெற்றி, தியாகு பாத்திரத்தில் அச்சு அசலாக அப்படியே பொருந்துகிறார். தியாகு வேடத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் திறம்பட நடிக்கவும் செய்திருக்கிறார்.
ஆயினும் எப்போதும் வித்தியாசமான கதைகளையே தேர்ந்தெடுத்து நடிக்கும் வெற்றி இம்முறை இப்படி ஏன் ஒரு சாதாரண கதையில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்பதுதான் புரியவில்லை.
கொஞ்சும் மொழியில் தமிழ் பேசும் மதுரா என்ற ஜெர்மன் பெண் வேடத்தில் நடித்திருக்கும் ஜனனி தாமஸ் வெகுவாக ரசிக்க வைக்கிறார்.
சாதாரண கதை, சுவாரசியம் இல்லாத திரைக்கதை, லாஜிக் இல்லாத காட்சிகள் என்று அமைந்துவிட்ட ஆலன் திரைப்படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஒளிப்பதிவு தான்.
காசி, ராமேஸ்வரம் மற்றும் ரிஷிகேஷ் ஆகிய இடங்களுக்கு நம்மை ஆன்மீகப் பயணமே அழைத்துச் சென்றுவிட்டார் ஒளிப்பதிவாளர் வின்ஸ்டன் ஸ்டாலின்.
முழு படத்தையும் பொறுமையாக அமர்ந்து பார்ப்பதற்கு இவரது ஒளிப்பதிவு ஒரு முக்கிய காரணம்.
மனோஜ் கிருஷ்ணாவின் இசையும், காசி விஸ்வநாதனின் படத்தொகுப்பும் படத்துக்கு பலம் என்று தான் சொல்ல வேண்டும்.
காசி ராமேஸ்வரம் போக வேண்டும் என்று ஆசைப்பட்டும், போக இயலாதவர்கள் ஆலன் படத்தை ஒரு முறை பார்த்து விட்டு வரலாம்
மதிப்பெண் 2.5/5