![]()

இங்க நான்தான் கிங்கு _ விமர்சனம்
காமெடியனாக பல ஆண்டுகளாக நடித்து வந்த சந்தானம் சமீப காலமாக காமெடி ஹீரோவாக உயர்ந்துள்ளார். அந்த வரிசையில் வந்துள்ளது, இங்க நான்தான் கிங்கு.
யாருமற்ற அநாதையான சந்தானம், தனக்கு பெண் பார்க்கிறார். திருமணம் ஆக வேண்டும் என்றால் சொந்த வீடு வேண்டும் என நினைத்து, ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 25 லட்சத்துக்கு ( கடன் வாங்கி) வீடு ஒன்றை வாங்குகிறார். அந்த கடனை அடைக்கும் அளவுக்கு வசதியான குடும்பத்தில் பெண்ணை பார்த்து திருமணம் செய்ய நினைக்கிறார்.
அதற்கேற்றபடி, ஜமீன் குடும்பம் என புரோக்கர் சொல்லி அழைத்துச் செல்கிறார். திருமணமும் நடக்கிறது. அதன் பிறகுதான் அந்த ஜமீனுக்கு 10 கோடி ரூபாய் கடன் இருப்பது தெரிகிறது. ஆகவே (ஜமீன்) மனைவியுடன் அவரது அப்பா, அண்ணன் ஆகியோரையும் காப்பாற்ற வேண்டிய நிலை சந்தானத்துக்கு ஏற்படுகிறது.
இந்த நிலையில் சென்னையில் பல இடங்களில் குண்டு வைக்க திட்டமிடுகிறது பயங்கரவாத கும்பல். குறிப்பிட்ட பயங்கரவாதியை எதிர்பாராமல் கொன்று விடுகிறது சந்தானம் குடும்பம். ஆனால் அந்த தீவிரவாதி போலவே இருக்கும் தனது நண்பனைத்தான் கொன்றுவிட்டதாக சந்தானம் நினைக்கிறார்.
இந்த ஆள் மாறாட்டம் என்ன ஆனது, சந்தானத்தின் கடன் தீர்ந்ததா என்பதே கதை.
சந்தானம் வழக்கம்போலவே காமெடியில் அதகளம் செய்கிறார். பணக்கார பெண் என நினைத்து, கடன்கார குடும்பத்து பெண்ணை திருமணம் செய்துவிட்டு புலம்புவது, கொலைப் பழியில் இருந்து தப்பிக்க முயற்சிப்பது என சிறப்பாக நடித்து உள்ளார்.
தீவிரவாதி மற்றும் சந்தானத்தின் நண்பன் என டபுள் ரோலில் வரும் விவேக் பிரசன்னா அருமையாக நடித்து உள்ளார். அதுவும் பிணமாக நடித்து கவனம் ஈர்க்கிறார்.
தம்பி ராமையா, பால சரவணன், முனிஷ்காந்த் ஆகியோரின் காமெடியும் சிறப்பு.
டி. இமானின் இசையில் ‘குலுக்கு குலுக்கு’, ‘மாயோனே’ பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையும் படத்துக்கு பலம்.
மொத்தத்தில் குடும்பத்துடன் ரசித்துப் பார்க்கலாம்.

