![]()

அந்தகன் _ விமர்சனம்
இந்தியில் வெளியான அந்தாதூன் படத்தில் தமிழ்ப் பதிப்புதான் அந்தகன். ஆனால் இதை ரீமேக் என்று சொல்ல முடியாத அளவுக்கு சிற்பபாக ரீமேட் செய்திருக்கிறார் இயக்குநர் தியாகராஜன்.
பிரசாந்த் ஒரு பியானோ கலைஞர். தன்னை பார்வையற்றவராக பிறர் நம்பினால், தனது இசைத் திறமைக்கு கூடுதல் மதிப்பு கிடைக்கும் என்று எண்ணுகிறார். ஆகவே பார்வையிழந்தவர் போல் நடிக்கிறார்.
இந்த நிலையில், ஒரு கொலையை “பார்த்து” விடுகிறார் பிரசாந்த். கொலையாளிகள், “இவர் பார்வையற்றவர்தானே” என்று விட்டுவிடுகிறார்கள். பிறகு சந்தேகம் ஏற்படவே, அவரை கொலை செய்ய திட்டமிடுகிறார்கள். ஒரு கட்டத்தில் அவரை நிஜமாகவே பார்வையற்றவராக ஆக்கிவிடுகிறார்கள்.
இந்த நிலையில், பிரசாந்தின் கிட்னியை எடுத்து விற்க “டாக்டர்” குழு ஒன்று திட்டமிடுகிறது. மறுபுறம், கொலைகாரர்கள் துரத்துகிறார்கள்.
பிரசாந்துக்கு என்ன ஆனது என்பதே சுவாரஸ்யமான மீதிக் கதை.
எப்போதும்போலவே, நடிப்பில் ரசிக்க வைக்கிறார் பிரசாந்த். கொலையை பார்த்து அதிர்ந்தாலும், பார்வையற்றவராக நடிக்க வேண்டிய சூழலில் மென்று விழுங்கி தவிக்கும் காட்சி ஒரு உதாரணம்.
ஆட்கள் இல்லாதபோது, இயல்பாக செயல்படுவது.. யாராவது வந்துவிட்டால் பார்வையற்றவராக நடிப்பது என வினாடிக்கு வினாடி அந்நியன் பாணியில் அசரவைக்கிறார்.
படத்தின் நிஜ ஹீரோயின் சிம்ரன்தான். (கள்ளக்) காதலனுடன் இருப்பதை கணவன் பார்த்ததும் அதிர்வது, கொலை விவகாரத்தில் துப்பு கொடுக்கும் எதிர்வீட்டு பெண்மணியை அதிரடியாய் கொல்வது என மிரள வைக்கிறார். அதே போல பிரசாந்த் கண்களை குருடாக்குவது, பிறகு அவருடன் நட்பு பாராட்டுவது… அடுத்து மீண்டும் கொலை செய்ய முயற்சிப்பது என விசுவரூபம் எடுத்து இருக்கிறார் சிம்ரன்.
வயதாகிவிட்டாலும், அந்தக்கால ஜாலி நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் கார்த்திக். அவரது முடிவுதான் பரிதாபத்தை வரவழைக்கிறது.
நாயகி பிரியா ஆனந்துக்கு அவ்வளவாக வாய்ப்பு இல்லை.
கே.எஸ்.ரவிக்குமார், ஊர்வசி, யோகிபாபு காமெடி கொஞ்சம் சிரிக்க வைக்கிறது.
சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் எடுபடவில்லை. பழைய பாடல்கள், அதன் இசை.. ரசிக்கவைக்கின்றன. ஆனால் பாடல்களே இல்லாவிட்டாலும் படம் ரசிக்கவைக்கும் என்பதே உண்மை.
ரவி யாதவ் ஒளிப்பதிவு படத்துக்கு மிகப் பெரிய பலம்.
மொத்தத்தில் அசத்தலான க்ரைம் த்ரில்லர், அந்தகன்.

