வீராயி மக்கள் _ விமர்சனம்
வேல ராமமூர்த்தியும், மாரிமுத்துவும் சகோதரர்கள். இருவருக்குள்ளும் ஈகோ – பகை. பேசிக்கொள்வது இல்லை. இந்த பகை, அடுத்த தலைமுறைக்கும் பரவுகிறது.
இந்த நிலையில், வேல.ராமமூர்த்தியின் மகன்களில் ஒருவரான (நாயகன்) சுரேஷ் நந்தா. இரண்டு குடும்பங்களுக்குள் நிலவும் பகையை முடித்துவைக்க முயல்கிறார். இந்த முயற்சியில் அவருக்கு வெற்றி கிடைத்ததா இல்லையா என்பதே வீராயி மக்கள் திரைப்படம்.
வேல ராமமூர்த்தி தனது வழக்கமான பாணியில் செயற்கைத்தனமான ஆத்திர நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவரது தம்பியாக வரும் (மறைந்த) மாரிமுத்து வழக்கம்போல, இயல்பாக தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தி கவர்கிறார்.
படத்தின் நாயகன் என்றாலும், அடக்கிவாசித்திருக்கிறார் சுரேஷ் நந்தா. பிரிந்து கிடக்கும் குடும்பங்களை ஒன்று சேர்க்க அவர் எடுக்கும் முயற்சிகள் ரசிக்க வைக்கின்றன. காதல், மோதல் காட்சிகளிலும் நிறைவான நடிப்பை அளித்துள்ளார்.
நாயகி நந்தனாவுக்கு அவ்வளவாக வாய்ப்பு இல்லை. ஆனாலும் கிடைத்த வாய்ப்பில் ஸ்கோர் செய்கிறார்.
தீபா சங்கர், ரமா உள்ளிட்ட எல்லோருமே சிறப்பாக நநடித்து உள்ளனர்.
இசை, தீபன் சக்கரவர்த்தி. ‘செங்கொடி ஊருக்கு..’, ‘நெஞ்சுக்குள்ள…’ உள்ளிட்ட பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையும் சிறப்பு. எம்.சீனிவாசனின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம்.
சொந்த பந்தங்கள்தான் உண்மையான பலம் என்பதை உணர்வுபூர்வாக காட்சிப் படுத்தி இருக்கும் இயக்குநர் நாகராஜ் கருப்பையா பாராட்டுக்குரியவர்.