Friday, October 2

அயோத்தி – திரைப்பட விமர்சனம்

Loading

அயோத்தி – திரைப்பட விமர்சனம்

மதம் ஓர் அபினி என்றான் மார்க்ஸ். அதை ஏன் விஷம் என்று சொல்லவில்லை. மதம் என்ற போதையில் மனிதன் சிக்குண்டால், ஆயுள் முழுக்க அதிலிருந்து மீள முடியாமல் மூழ்கிக் கிடக்க வேண்டியதுதான்.

தீவிர மதப்பற்று மிக்கவரான யஷ்பால் ஷர்மா male chauvinist pig என்பதற்கு சரியான இலக்கணமாகவும் இருக்கிறார். மனைவி மகள், மகனுடன் தீபாவளிக்கு புனித யாத்திரையாக ராமேஷ்வரம் வரத் திட்டமிடுகிறார்.

மதுரை வந்திறங்கி அங்கிருந்து காரில் ராமேஷ்வரம் செல்லும் வழியில் ஒட்டுனருடன் தேவையின்றி தகராறு செய்வதால் கார் விபத்துக்குள்ளாகிறது.

கார் ஓட்டுனரின் நண்பரான சசி குமார், நிலைமையை புரிந்து கொண்டு உதவ முன் வருகிறார்.

கடுமையாக காயமடைந்த யஷ்பால் மனைவி இறந்து விடுகிறார்.

விபத்து காரணமாக போலீஸ் கேஸாகி, போஸ்ட் மார்டம் செய்தாக வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

இறந்தவர் உடலை பிணக்கூறாய்வு செய்தால் அந்த ஆன்மா சொர்க்கத்துக்குப் போகாது என்று திடமாக நம்பும் யஷ்பால் ஷர்மா அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

தீபாவளி தினத்தன்று உள்ள நடைமுறை சிக்கல்களை எல்லாம் எதிர்கொண்டு, மொழி தெரியாத ஊரில் நிர்கதியாக நிற்கும் அந்த குடும்பத்திற்கு எப்படி எல்லாம் துணை நின்று விமானத்தில் பிரேதத்தை அனுப்ப சசி குமார் உதவுகிறார் என்பதுதான் அயோத்தி.

அளவெடுத்து தைத்த சட்டைபோல் அப்படியே அட்டகாசமாக பொருந்தும் அருமையான வேடம் சசிகுமாருக்கு. அவர் நடித்த முந்தைய படங்களின் இமேஜும் அயோத்தியில் அவர் ஏற்ற வேடத்துக்கு கை கொடுக்கிறது.

ஆணாதிக்க மனோபாவத்தில் ஊறித் திளைத்து, மனைவி மக்களை கொடுமையாக நடத்தும் குடும்பத் தலைவனாக வரும் யஷ்பால் ஷர்மா ஏற்ற பாத்திரத்திற்கு நியாயம் செய்து நிறைவாக நடித்திருக்கிறார்.

தந்தையின் கொடுமைகளை எதிர்கொண்டு, அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் மகள் பாத்திரத்தில் வரும் ப்ரீத்தி அஸ்ரானி பரிதாபத்தை கண்களிலும் உடல் மொழியிலும் அற்புதமாக வெளிப்படுத்தி நம் நெஞ்சில் நிறைகிறார்.

மனிதாபிமானம் கிஞ்சித்தும் இல்லாத கணவனுடன் இல்லறம் நடத்தும் மனைவியாக முத்திரை பதிக்கும் வகையில் நடித்து பார்வையாளர்களின் பரிதாபத்தை அள்ளுகிறார் அஞ்சு அஸ்ரானி.

படத்துக்கு மிகப் பெரிய பலமாக அமைந்திருப்பவை மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவும், என். ரகுந்தனின் இசையும்.

கனமான கதைக்கு கச்சிதமாக திரைக்கதை அமைத்து, முத்திரை பதிக்கும் வகையில் இயக்கி அறிமுகமாகயிருக்கும் மந்திர மூர்த்தி தமிழ்த் திரையுலக்கின் நம்பிக்கை நட்சத்திர இயக்குநர் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் என்றால் மிகையாகாது.

அயோத்தில் நடக்கும் படத்தின் துவக்க காட்சிகளில் யஷ்பால் ஷர்மா பாத்திரத்தை அழகாகவும் அழுத்தமாகவும் பார்வையாளர்களின் மனதில் பதிய வைத்து, கதையின் போக்குக்கு தயார் செய்து விடுகிறார் இயக்குநர் மந்திர மூர்த்தி.

புனித பயணத்தில் கட்டிக் கொள்ள பிடித்த புடவையுடன் புறப்படும் அஞ்சு அஸ்ரானியின் உடல், பிணமான பின் அதே புடவையில் சுற்றப்படுவதும், உடலை பேக் செய்வதற்கு முன் ராமேஸ்வர தீர்த்ததை சசிகுமார் பிரேதத்தின் உடலில் தெளிக்கச் செய்வதும் மனதைப் பிழியும் காட்சிகள்.

 படத்தின் இறுதிப் பகுதியில் சசிகுமார் தன் பெயரை சொல்லும் காட்சியில் இருக்கிறது அயோத்தியின் ஆத்மா.

கண்டிப்பாக பார்த்தாக வேண்டிய நல்ல படம் என்ற பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது அயோத்தி.

மதிப்பெண் 4.5/ 5