Monday, January 20

ப்ளூ ஸ்டார் _ விமர்சனம்

Loading

 

விமர்சனம்: ப்ளூ ஸ்டார்
Review: Blue Star
அரக்கோணத்துக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். அதே கிராமத்தின் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித். இருவருமே அவரவர் பகுதியின் கிரிக்கெட் டீமுக்கு கேப்டன்களாக இருக்கிறார்கள்.
சாதி மோதல் காரணமாக, ரஞ்சித்தின் ப்ளூ ஸ்டார் அணியும் ராஜேஷின் ஆல்பா அணியும் நேருக்கு நேர் மோதிக் கொள்வதில்லை.
இந்த நிலையில், ஊர்க்கோவில் திருவிழாவில் இரு அணியினரும் மோத தயாராகிறார்கள். போட்டியில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதற்காக ராஜேஷ் பிரபல கிரிக்கெட் கிளப்பில் விளையாடும் சிறந்த வீரர்களை அழைத்து வருகிறார். போட்டியில் ரஞ்சித்தின் ப்ளூஸ்டார் அணியினர் தோல்வி அடைகின்றனர்.
மகிழ்ச்சியில் இருக்கும் ராஜேஷ், தான் அழைத்து வந்த வீரர்களுக்கு கூறியபடி பணத்தைக் கொடுக்க அவர்களின் கிளப்புக்கு செல்கிறார். அங்கு, அவர் கடுமையாக அவமானப்படுத்தப்படுகிறார். அப்போது அவருக்காக காலனி பகுதியைச் சேர்ந்த கிரிக்கெட் ஆர்வலரும், ரஞ்சித்தும் களம் இறங்குகிறார்கள்.
இதையடுத்து இருவரும் இணைய… இருவரது அணிகளும் இணைகின்றன.
அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை.

போர் தொழில், சபாநாயகன் என முத்திரை பதிக்கும் வேடங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்து உள்ளார் அசோக் செல்வன். அந்த வரிசையில் ப்ளூ ஸ்டார் படமும் சேர்ந்திருக்கிறது.
அரக்கோணம் பகுதி இளைஞனை கண் முன் நிறுத்துகிறார். அதே போல ஒடுக்கப்பட்ட இனத்தின் ஆக்ரோச இளைஞனாகவே மாறி இருக்கிறார். அவரது உடல் மொழி, பேச்சு அத்தனையும் சிறப்பு.
ராவண கோட்டம் படத்துக்குப் பிறகு இன்னொருமொரு அதிரடி கதாபாத்திரத்தை ஏற்று இருக்கிறார் சாந்தனு. ஆதிக்க சாதியின இளைஞராக வருகிறார். அறியாமலேயே தனக்குள் ஊன்றி விதைக்கப்பட்ட ஆதிக்க உணர்வை இயல்பாக வெளிப்படுத்துகிறார். ஒரு கட்டத்தில், காலனியைச் சேர்ந்த இளைஞன் தனக்காக வந்து நிற்க… அவனும் மனதார இணைகிறார். சிறப்பாக நடித்து இருக்கிறார் சாந்தனு.

நாயகி, கீர்த்தி பாண்டியன் 90களின் டீன் ஏஜ் பெண்ணை கண்முன் நிறுத்துகிறார். காதலனுடன் செல்லச் சண்டை இடுவது, கிரிக்கெட் மீதான ஆர்வத்தை வெளிப்படுத்துவது என சிறப்பாக நடித்து உள்ளார்.
கொஞ்ச நேரமே வந்தாலும் ”புல்லட் பாபு” கதாப்பாத்திரம் கைத்தட்டல்களை அள்ளுகின்றது. தனக்கு கொடுக்கப்பட்டுள்ள குணச்சித்ர கதாப்பாத்திரத்தில் பகவதி பெருமாள் ஸ்கோர் செய்கின்றார்.
அசோக் செல்வன் அம்மாவாக நடித்துள்ள லிசி ஆண்டனியின் காட்சிகளுக்கும் தம்பியாக நடித்துள்ள பிரித்விராஜன் இடையே நடக்கும் சின்னச்சின்ன சண்டைக் காட்சிகளுக்கும் ரசிக்கவைக்கின்றன.

அதே போல ஒவ்வொருவரையுமே தேவையான அளவு நடிக்க வைத்து சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர்.

கோவிந்த் வசந்தாவின் ரயிலின் ஒலிகள் பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை படத்துக்கு பலம்.

படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை வரும் இயல்பான காட்சிகளும் வசனங்களும் ரசிக்கவைக்கின்றன.
ஊரும், சேரியும் மோதிக்கொள்ள வேண்டியதே இல்லை.. இணைந்து செயல்பட வேண்டும் என்பதை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார் அறிமுக இயக்குனரான ஜெயக்குமார்.

மதிப்பெண் 3.5/5