![]()
பிரேக் ஃபாஸ்ட் _ விமர்சனம்
இன்றைய இ(ணை)ளைய தலைமுறை, சமூக வலைதளத்தில் ஒருவருக்கொருவர் அறிமுகமான அடுத்த கணமே காதலைப் பகிர்ந்து, அடுத்த நாளே கல்யாணம் என்று மின்னல் வேகத்தில் முடிவெடுத்து, அதைவிட வேகத்தில் பிரிவை நோக்கியும் பயணிப்பது ஏன் என்ற கேள்விக்கு விடை காணத் துடிக்கிறது இந்த ‘பிரேக்ஃபாஸ்ட்’.
பல்லாயிரம் கோடிக்கு அதிபதி தொழிலதிபரின் மகளான நாயகி ரோஸ்மின், சரியான வேலையின்றி கஷ்டப்படும் கிராமத்து இளைஞன் ராணவுக்குத் தன் நிறுவனத்திலேயே வேலை கொடுத்து, காதலித்து, அப்பாவின் எதிர்ப்பையும் மீறி கரம் பிடிக்கிறார்.
ஆனால், காதலர்களாக இருந்தபோது இருந்த அந்தப் பிணைப்பும் மகிழ்ச்சியும் கல்யாணத்திற்குப் பிறகு மாயமாகி, மோதலும் வெறுப்புமாக வாழ்க்கை தொடர்கிறது.
விவாகரத்து என்பது இன்றைய காலத்தில் மிகச் சுலபமான ஒன்றாக மாறிவிட்டாலும், அந்த முடிவால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் நிலைமைதான் பெரும் பரிதாபம் என்பதை இயக்குநர் ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா அழுத்தமாகச் சொல்ல முயன்றிருக்கிறார்.
பிக்பாஸ் புகழ் ராணவ், முதல் படம் என்று சொல்ல முடியாத அளவிற்குத் தன் தகுதிக்கு மீறிய பெண்ணைக் காதலித்து உற்சாகத்தில் மிதப்பது, பின் வசதியான வாழ்க்கையில் மனைவியின் பணத்திமிரால் பாதிக்கும் கணவன் எனப் பல்வேறு மனப்போராட்டங்களை நேர்த்தியாகப் பிரதிபலித்திருக்கிறார்.
அறிமுக நாயகி ரோஸ்மின், பணக்காரத் திமிரையும் மற்றவர்களை மதிக்காத செயலையும் தன் நடிப்பில் மிரட்டலாகக் காட்டி கவனம் ஈர்க்கிறார்.
அத்தோடு நில்லாமல், எப்போதும் மனைவி என்பவள் இப்படித்தான் இருப்பார்களோ என ஆண்களுக்கு ஒருவித அச்சத்தை மூட்டும் அளவுக்குப் பாத்திரத்தோடு பொருந்திப் போகிறார். சம்பத் ராஜ் நாயகியின் அப்பாவாகவும், கஸ்தூரி கணவன் மனைவிக்கு கவுன்சிலிங் கொடுக்கும் மருத்துவராகவும், அர்ச்சனா நாயகனின் அம்மாவாகவும் தங்கள் அனுபவ நடிப்பால் படத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றனர்.
கிரித்திக் மோகன் – அமிதா ரங்கநாத் ஜோடி இளமைத் துள்ளலோடு திரைக்கதையில் பயணித்திருக்கிறார்கள். எம்.வி.பன்னீர்செல்வத்தின் ஒளிப்பதிவு கண்களுக்குக் குளிர்ச்சியான விருந்து படைத்திருக்கிறது.
ஜி.வி.பிரகாஷின் இசையில் உருவான பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன.
எதை வேண்டுமானாலும் எடுக்கலாம், ரசிகர்கள் ரசிப்பார்கள் என்ற நினைப்பில் இன்றைய தலைமுறையின் ரசனையை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் கதையோட்டத்திற்காக காட்சிகளை அடுக்கியிருப்பது திரைக்கதையின் வேகத்தைச் சற்றே குறைக்கிறது.
நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய படத்தை ஒருவேளை இப்போது பார்க்கிறோமோ என்ற உணர்வைத் தருவதுபோல் பல காட்சிகள் அமைந்திருப்பது படத்தின் மிகப்பெரிய பலவீனம்.
காதலையும் காதலர்களையும் இன்னும் ஆழமாக அலசியிருக்கலாம். இருந்தாலும், காதலர்களுக்கும் தம்பதிகளுக்கும் அறிவுரை சொல்லும் விதமாக அமைக்கப்பட்ட காட்சிகள் நிச்சயம் பார்வையாளர்களை யோசிக்க வைக்கும். மொத்தத்தில், இந்த ‘பிரேக்ஃபாஸ்ட்’ கசப்பான பிரிவு எண்ணத்தைப் பின்னுக்குத் தள்ளி, உறவுகளின் அவசியத்தை ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் ஒரு படைப்பு!


