Monday, April 20

தேசிய தலைவர்_ விமர்சனம்

Loading

தேசிய தலைவர்_ விமர்சனம்

பொதுவாக வாழ்க்கை வரலாறு படங்கள் உருவாக்கப்படுவது தமிழில் குறைவுதான்.

அப்படி குறைவாக உருவாக்கப்பட்டாலும் மிகுந்த ஆராய்ச்சிக்கு பிறகு நேர்த்தியாகவே இப்படங்கள் உருவாக்கப்படுகின்றன.

அந்த வகையில் சமீபத்தில் வெளியான படம் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவான தேசிய தலைவர்.

தேசியமும் தெய்வீகமும் தனது இரண்டு கண்கள் என்று கூறிய முத்துராமலிங்கத் தேவர் அதன்படியே தன் வாழ்க்கையும் அமைத்துக் கொண்டவர்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் சுபாஷ் சந்திர போஸ் அவர்களை பின்பற்றி அவருடன் இணைந்து பணியாற்றியதில் தொடங்கி, தனது சொத்துக்களை மக்களுக்கு பகிர்ந்து அளித்ததுவரை அவரது சாதனைகள் அனைத்தும் சிறப்பான வகையில் படத்தில் இடம்பெற்று இருக்கின்றன.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வேடத்தில் ஜே எம் பஷீர் வெகு சிறப்பாகவே நடித்திருக்கிறார்.
திருநீறு பூசிய முகத்துடன் அவருடைய சாந்தமான தோற்றமும் உடல் மொழியும் அப்படியே தேவரை நம் கண் முன் கொண்டு வருகின்றன.

காமராஜர், சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்ட மற்ற தலைவர்கள் வேடத்திற்கும் உருவத்தோற்றத்தில் ஒற்றுமை உள்ளவர்களை தேடிப்பிடித்து நடிக்க வைத்திருப்பதுடன், தானும் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார் இயக்குனர் ஆர் அரவிந்தராஜ்.

ஊமை விழிகள் உழவன் மகன் போன்ற வணிக ரீதியான படங்களை கொடுத்த இயக்குனர் அரவிந்தராஜ் வாழ்க்கை வரலாறு படத்திலும் தன் முத்திரையை பதிக்கத் தவறவில்லை.

இளையராஜாவின் இசையில் உருவான பாடல்களும் பின்னணி  இசையும் படத்துக்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கின்றன.

கலை இயக்குனர் சண்முகத்துடன் கைகோர்த்து ஒளிப்பதிவாளர் அகிலன் அந்தக் காலத்தில் நடந்த காட்சிகளை அப்படியே நம் கண் முன் கொண்டு வந்திருக்கிறார்.

இவ்வகை வாழ்க்கை வரலாறு படங்கள் விபரண பட பாணியில் அமைந்திருப்பதால் விறுவிறுப்பு சற்று குறைவாக இருக்க வாய்ப்புண்டு என்றாலும், படத்தொகுப்பாளர் வெங்கட்ரமணன் தன் சீரிய பணியால் காட்சிகளை சிறப்பாக தொகுத்தளித்து படத்தின் வேகத்தை இயன்ற அளவு கூட்டி இருக்கிறார்.

முத்துராமலிங்கத் தேவர் வாழ்க்கை  குறித்து அறிந்து கொள்வதற்காக இன்றைய இ(ளை)ணைய தலைமுறை கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் தேசிய தலைவர்.