![]()
வேலூர் கோட்டை சிறை சாலையில் அடைக்கப்பட்ட விடுதலைப் புலிகள் 43 பேர், அங்கிருந்து சுரங்கம் தோண்டி தப்பிச் சென்ற சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கி இருக்கிறது இந்த ப்ரீடம் திரைப்படம்.
இலங்கையில் இருந்து அகதியாக வரும் நூற்றுக்கணக்கான நபர்களுடன் சசிகுமாரும் வருகிறார்.
கர்ப்பிணியாக இருக்கும் அவரது மனைவி லிசா மோல் ஜோஸ் ஏற்கனவே அகதிகள் முகாமில் இருக்கிறார்.
சென்னை ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்படுகிறார்.
இந்த கொலை சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக சசிகுமார் உட்பட 43 ஈழத் தமிழர்களை விசாரணை என்ற பெயரில் அதிகாரிகள் அடைத்துச் சென்று அடைத்து வைத்து சித்திரவதை செய்கின்றனர்.
போலீசாரின் கொடுமைகளை தாங்க முடியாத ஈழத் தமிழர்கள், ஒரு கட்டத்தில் சிறையில் இருந்து தப்பி செல்ல திட்டமிடுகின்றனர்.
கடுமையான பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் அந்த சிறையில் இருந்து ஈழத் தமிழர்கள் எவ்வாறு தப்பிக்க முயல்கிறார்கள் என்பதுதான் ப்ரீடம் படத்தின் கதை.
ராஜீவ் காந்தி கொலை சம்பவத்தை மையமாக வைத்து ஒளிப்பதிவாளர் ரவி யாதவ் தயாரிப்பில் ஆர்கே செல்வமணி இயக்கத்தில் உருவான படம் திரைக்கு வர முடியாமல் ஆண்டு கணக்கில் சிக்கித் தவித்ததும், பிறகு சென்சார் வெட்டுகளுக்குப் பிறகு சக்கையாக வெளிவந்து படுதோல்வி அடைந்ததும் நினைவுக்கு வருகிறது.
அந்தக் காலத்தில் அப்படி நடந்தது என்றால் இப்போது ராஜீவ் கொலை சம்மந்தமாக தொலைக்காட்சி தொடர் ஒன்றும் திரைப்படம் ஒன்றும் இப்போது வெளிவந்திருக்கிறது.
ஈழத் தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளை ரத்தமும் சதையுமாக அப்படியே நம் கண் முன் நிறுத்திக் காட்டி இருக்கிறார் இயக்குனர் சத்யா சிவா.
கர்ப்பிணி மனைவியை பிரியும் சசிகுமார், குழந்தை பிறந்து பல மாதங்களாகியும் அவர்களை பார்க்க முடியாமல் இருக்கும் வேதனையை தனது திறமையான நடிப்பில் அருமையாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
அவருக்கு ஈடு கொடுக்கும் வகையில் குழந்தையுடன் பரிதவிக்கும் காட்சிகளில் லிஜா மோல் ஜோஸ் நடிப்பு நம் நெஞ்சை தொடுகிறது.
முக்கிய பாத்திரத்தில் வரும் மு ராமசாமி, வக்கீலாக வரும் மாளவிகா அவினாஷ் மற்றும் போஸ் வெங்கட் ரமேஷ் கண்ணா ஆகியோரும் தங்கள் நடிப்பால் கவனம் ஈர்க்கின்றனர்.
போலீஸ் அதிகாரியாக வரும் சுதேவ் நாயரின் நடிப்பு பிரமாதம். கொடுங்கோலனை அப்படியே நம் கண் முன் கொண்டு வருகிறார்.
என் எஸ் உதயகுமாரின் ஒளிப்பதிவு படத்துக்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது.
ஜிப்ரானின் பின்னணி இசை ஈழத் தமிழர்களின் சோகத்தை அப்படியே பார்வையாளர்களுக்கு கடத்துகிறது.
ஃப்ரீடம் ஈழத் தமிழர்களின் கண்ணீர் கதை.
மதிப்பெண் 3/5


