![]()

ஜோ – விமர்சனம்
காதலை புதிய கோணத்தில் சுவைபட சொல்லும் படம் ஜோ.
ரியோ, மாளவிகா மனோஜ், பாவ்யா ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்கியிருக்கிறார்.
கதாநாயகன் ஜோ வேடத்தில் முதிர்ச்சியான நடிப்பில் முத்திரை பதிக்கிறார் ரியோ ராஜ்.
அழுதுகொண்டிருக்கும் சக மாணவி மாளவிகாமீது அக்கறை கொண்டு அவரைப்பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் காட்டும் ஜோ பின்னர் அவரை காதலிக்கத் துவங்குகிறார் ரியோ.
ஆரம்பத்தில் இந்தக் காதலை ஏற்றுக் கொள்ள மாளவிகா தயங்கினாலும் பின்னர் அவரும் ரியாவை காதலிக் ஆரம்பிக்கிறார்.
ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்தாலும், ஈகோ பிரச்னை காரணமாக அடிக்கடி சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.
மாளவிகா சொன்னதற்கேற்ப திருமண விஷயமாக பேச அவரது வீட்டுக்கு ஜோ செல்லும்போது ஏற்படும் பிரச்சனையால் காதலர்கள் பிரிய நேர்கிறது.
காதல் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் இருக்கும் ஜோவுக்கு அவரது பெற்றோர்கள் பாவ்யாவை திருமணம் செய்து வைக்கிறார்கள்.
பெரிய தொழிலதிபரின் மகளான பாவ்யா ரியோவை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்.
பிறகு மனம் மாறி எவ்வாறு ரியோவை ஏற்றுக்கொள்கிறார் என்பது படத்தின் இரண்டாம் பாதி.
முதல் பாதி ஒரு வித காதல் கதையாகவும், இரண்டாம் பாதி வேறு ஒரு வகை காதல் கதையாகவும் படத்தில் விவரிக்கப்படுகிறது. இரண்டு காதல் கதைகளுமே நெஞ்சைத் தொடும் வகையில் இருப்பதே படத்தின் சிறப்பு.
நான் லீனியர் முறையில் சொல்லப்பட்டிருக்கும் ஜோ படத்தின் ஃளாஷ் பேக் காட்சிகள் அனைத்தும் மிக சிறப்பாக அமைந்திருக்கின்றன.
ஜோவாக நடிக்கும் ரியோவுக்கு ஈடுக்கொக்கும் வகையில் நாயகிகள் புதுமுகங்கள் மாளவிகா பாவ்யா இருவரும் மிக நன்றாக நடித்திருக்கிறார்கள்.
பல படங்களில் நாயகனின் நண்பர்கள் பாத்திரம் ஊறுகாய் போல் பயன்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் இந்தப் படத்தில் ஜோவின் நண்பர்கள் பாத்திரம் வலுமாக அமைக்கப்பட்டிருப்பதுடன் படத்தின் திருப்பத்திற்கே காரணமாகவும் அமைந்திருக்கிறது. நண்பர்கள் வேடத்தில் வரும் அனைவருமே குறை சொல்ல முடியாத அளவுக்கு நடித்திருக்கின்றனர்.
படத்திற்கு மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவாளர் ராகுல் கே ஜி விக்னேஷ். வெளிப்புறக் காட்சிகள் மற்றும் உட்புற காட்சிகள் இரண்டையும் மிக நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார்.
சித்து குமாரின் இசையில் உருவான பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன. பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்க்கும் வகையில் இருக்கின்றன.
ரியோவை பள்ளி மாணவனாகப் பார்ப்பது சிரிப்பை வரவழைக்கிறது.
பள்ளியில் தன்னுடன் படித்த மாணவனை வருடக்கணக்கில் பாவ்யா தேடிக்கொண்டிருப்பது நம்பும்படி இல்லை.
எத்தனையோ காதல் கதைகளை பார்த்து சலித்து விட்ட ரசிகர்களுக்கு, இளமை ததும்பும் காதல் கதையான ஜோ நிச்சயமாக புதிய அனுபவத்தைத் தரும்.
தாராளமாக பார்த்து ஜோராக ரசிக்கலாம் இந்த ஜோ திரைப்படத்தை.
மதிப்பெண் 3.5 /5

