Sunday, October 25

க/பெ ரணசிங்கம் – விமர்சனம்

Loading

கரிச காட்டு மண்ணுக்காரி அரியநாச்சியின் கதை க/பெ. ரணசிங்கம் என்ற பெயரில் படமாகியிருக்கிறது.
இராமநாதபுரத்தில் பிறந்து வளர்ந்த ரணசிங்கம், விடிகிறது பொழுதும் அந்தி நேரமும் தன்னோட மனுச மக்களோட இருக்கணும்னு நினைக்கிற ஆளு. ஊரு மண்ணோடு பொழப்பு நடத்தி, பரம்பரை பரம்பரையாக நீரோட்டம் பாக்குற குடும்பத்துல பிறந்ததால இயற்கையாக நீரோட்டம் பார்க்குற திறமை வருது.

மண்ணோட நீரோட்டம் பாக்குற ரணசிங்கத்திற்கு , அரியநாச்சியின் நெஞ்சுக்குழியின் நீரோட்டம் தெரிஞ்சி போக, வறண்ட காட்டில் காதல் பூக்குது.

தண்ணியையும் காத்தையும் வச்சிதான் உலக அரசியல் இயங்க போகுதுன்னு நினைக்கிற ரணசிங்கம், தண்ணீருக்காக பொட்டல் காட்டில் தண்ணி வண்டி தள்ளுகிற பொம்பளைங்களை பார்த்து தவித்து போகிறார்.கம்மைக்கு தண்ணி கொண்டு வர ,நின்று போன நதி நீர் திட்டத்தை செயல்படுத்த மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துகிறார்.

மக்களுக்காக போராடும் ரணசிங்கத்தை,முதலில் வீட்டுல இருக்கிறவங்களை கவனி அதற்கு பிறகு ஊரு பிரச்சினை பாக்கலாம் என ஒரு சராசரி மனைவியாக வெளிநாடு போய் சம்பாதிக்க சொல்கிறார் அரியநாச்சி.

வெளி நாட்டிற்கு புருசனை வேலை செய்ய அனுப்பிய அரியநாச்சியார் , கணவனின் தாய், தந்தை, தங்கையை தன் ரத்த உறவாகவே கருதி வாழத் தொடங்குகிறாள். ஒற்றை ஆளாக குடும்பத்தை வழி நடத்தி கொண்டிருந்த அரியநாச்சியருக்கு உங்க புருசன் அமீரகத்திற்கு எதிராக போரட்டம் நடத்தியதால் துப்பாக்கிச் சூட்டில் இறந்து போனார் என்று செய்தி வருகிறது.

அவரது உடலை இந்தியாவிற்கு கொண்டு வருவதில் சிக்கல். ஐம்பாதியிரம் கொடுத்தால் நம்ம ஆளுங்க இறுதி காரியத்தை அமீரகத்திலேயே செய்வார்கள் என்று வேலைக்கு அனுப்பிய ஏஜண்ட் சொல்ல…

எத்தனை லட்சம் செலவு ஆனாலும் என் மாமன் உடம்பை இந்த மண்ணுக்கு கொண்டு வந்தே தீருவேன் என்று, புயலாகப் புறப்படுகிறாள் அரியநாச்சி.

ரணசிங்கம் கலவரத்தில் இறக்கவில்லை,விபத்தில் இறந்து போனார் என்று தெரியவருகிறது.இதை அவர் வேலை செய்த நிறுவனம் மூடி மறைக்க பார்க்கிறது.

நாட்கள் உருண்டு மாதங்களும் பத்தை தாண்டுகிறது ரணசிங்கம் உடம்பு வந்த பாடிலில்லை. ஒவ்வொரு அரசு அலுவலுகமும் ஏதோ ஒரு காரணம் காட்டி கதவை அடைக்கிறது.

பால் மறக்காத புள்ளையா இடுப்பில் வைத்துக்கொண்டு,கட்டை பையை கையில் பிடித்துக்கொண்டு தமிழகத்தின் தலைநகருக்கு ஒந்த மனுசியாக கிளம்புகிறாள். தலைமை செயலகமும் கதவை மூடுகிறது.

ஆனாலும் அந்த ஆத்மா அடங்காமல்,இந்தியாவின் தலை எழுத்தை எழுதும் டெல்லிக்கு கிளம்புகிறாள்‌. வைரமுத்து இப்படி எழுதுகிறார்,

புன்னகையே புயலாய் மாறும் போது
சிறு பூங்கிளியே புயலாய் நீயும் மாறு..

அதிகாரத்தின் மீது அடியே நீயும் மோது
சிறு வேர் முட்டும் போது கரும் பாறை தாங்காது…

வேலு நாச்சியார் வம்சம் வீரம் போகுமா
துணிந்த நெருப்பு இது குனிந்து எரியுமா…..

ஒரு செய்தியாளரின் உதவியோடு அணை திறக்க வந்த பாரத பிரதமரை மறிக்கிறாள். பாரத பிரதமர் அமீரக்திற்கு அழைப்பு விடுக்க,பத்து மாதத்திற்கு முன்பு இறந்த உடம்பு அடுத்த flightல பறக்குது.

வைரமுத்து எழுதுகிறார்…

அருகம்புல்லும் நனையத்தானே அந்த மேகம் பேயுது..
அழுத சாதி மீளத்தானே அரசு உள்ளது ..

அழுத பிள்ளை பால் குடிக்குது.

உடம்பு இராமநாதபுரம் வருகிறது. அது வரை தேக்கி வச்சிருந்த துக்கத்தை அழுது தீர்க்கிறாள் அரியநாச்சியார்.
வழக்கத்தை மீறி சுடுகாட்டிற்கு போன அவளுக்கு மிகக் கடுமையான அதிர்ச்சி காத்திருக்கிறது.

பொட்டு,தாலி,வளையலை கழட்டு மறுத்து, அரசாங்க அதிகாரிகளிடம் உடம்பை பெற்றுக்கொண்டதாக கையெழுத்திட்டு தூக்கி எறிகிறாள்.

ரணசிங்கம் கட்டிய தாலியோட , அவனது போட்டா முன்பு விழுந்து,

“என்னை மன்னிச்சிடு மாமா” என்று கும்பிட்டு கதறுகிறாள்.

ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரம் கரிசல் காட்டை பெயர்த்து எடுத்து வந்து காட்டி இருக்கிறார்.சண்முகத்தின் வசனம் அரியநாச்சியார் கையில் கொடுக்கப்பட்ட கத்தி. படம் துவங்கிய சற்று நேரத்திலேயே விஜய் சேதுபதி இறந்து விடுவதுபோல் கதை அமைந்தாலும், படம் முழுக்க அவர் வருவது போன்ற காட்சிகளை அமைத்து படத்தை சிறப்பான முறையில் படத்தொகுப்பு செய்த எடிட்டர் டி.சிவா நந்தீஸ்வரன் பாராட்டுக்குரியவர். ஐஸ்வர்யா அரியநாச்சியாராகவே மாறி இருக்கின்றார் என்று தான் சொல்ல வேண்டும். சேலை கட்டுவதிலிருந்து நடை,அழுகை,சிரிப்பு,கோவம்,வசன உச்சரிப்பு என அனைத்திலும் அசத்தி இருக்கிறார். மொத்த படத்தையும் ஒத்த மனுசி அரியநாச்சியாராக அதிகாரத்திற்கு எதிராக வாள் வீசியிருக்கிறார் ஐஸ்வர்யா..

வெயிலுக்கு பிறந்து தண்ணீருக்காக ஏங்கும் ரணசிங்கமாக வாழ்ந்து இருக்கிறார் விஜய்சேதுபதி.
ம.சிலம்பரசன்