![]()
காளிதாஸ் 2 _ விமர்சனம்
ஒரு நல்ல சஸ்பென்ஸ் த்ரில்லர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக உருவாகி இருக்கும் படம் காளிதாஸ் 2.
500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கொண்ட சென்னையில் உள்ள மிகப் பெரிய அப்பார்ட்மெண்ட ஒன்றில், திடீரென ஒரு குழந்தை காணாமல் போகிறது.
இது குறித்து புலன் விசாரணை செய்து குழந்தையை கண்டுபிடிக்க காவல் ஆய்வாளர் பரத் வருகிறார்.
நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ள அந்தக் குடியிருப்புகளில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தி முடிப்பதே மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.
பிரபல வழக்கறிஞர் பிரகாஷ் ராஜின் உதவியாளர் அஜய் கார்த்திக் மீது காவல்துறையின் சந்தேகக் கண்கள் பாய்கின்றன.
காணாமல் போன குழந்தையின் சடலம் மீட்கப்பட, பிரச்சனையும் தீவிரம் அதிகரிக்கிறது.
துணை ஆணையர் பவானிஸ்ரீயும் சம்பவ இடத்துக்கு வந்து தன் பணியை துவக்குகிறார்.
இந்த சூழலில் இன்னொரு குழந்தையின் சடலமும் அதே அப்பார்ட்மெண்டில் கிடைக்கிறது.
இந்தக் கொலைகளை செய்தது யார்?
எதற்காக இந்த பிஞ்சு குழந்தைகள் கொல்லப்படுகின்றன என்பதை பார்வையாளனை இருக்கை நுனிக்கே இழுத்து வரச்செய்து, சஸ்பென்ஸ் முடிச்சை அழகாக அவிழ்க்கும் படம்தான் ‘காளிதாஸ் 2’.
காவல் ஆய்வாளர் காளிதாஸ் ஆக பரத் தன் கம்பீரமான நடிப்பால் அந்த பாத்திரத்திற்கே மெருகேற்றுகிறார்.
காவல் துணை ஆணையாளர் பவானிஸ்ரீ, தனக்கு கீழ் பணிபுரிபவர்களிடம் கம்பீரம் காட்டி வேலை வாங்கும்போதும், தனக்கு மேல் உள்ள அதிகாரி வழக்கிலிருந்து விலகச் சொல்லும்போது மறுக்க முடியாமல் தவிக்கும் காட்சிகளிலும் முத்திரை பதிக்கும் வகையில் நடித்திருக்கிறார்.
துவக்கத்தில் அப்பாவித்தனமான வக்கீல் உதவியாளராக வரும் அஜய் கார்த்திக், பின்னர் சூழ்நிலையால் குற்றவாளியாக்கப்படும்போதும் கவனம் ஈர்க்கும் விதத்தில் சிறப்பாகவே நடித்திருக்கிறார்.
சிறியதொரு வேடத்தில் வந்தாலும் அந்நாள் நாயகி சங்கீதாவுக்கு காளிதாஸ் நல்லதொரு கம் பேக் படம் என்றுதான் சொல்ல வேண்டும்.
பிரகாஷ் ராஜ் ஓரிரு காட்சிகளே வந்தாலும் தன் அனுபவ நடிப்பால் அந்தப் பாத்திரத்திற்கே வலு சேர்த்திருக்கிறார்.
காட்சிகளில் ஓர் அமானுஷ்ய தன்மை ஏற்பட சுரேஷ் பாலாவின் சிறப்பான ஒளிப்பதிவுதான் காரணம் என்று தாராளமாக சொல்லலாம்.
இவ்வகைப் படங்களுக்கு பின்னணி இசைதான் மிகவும் முக்கியம். இசையமைப்பாளர் சாம். சி.எஸ் பின்னணி என்றால் கேட்கவா வேண்டும்? மனிதர் வெளுத்து கட்டி விட்டார்.
ஒரு புலன் விசாரணையை அழகாகவும் ஆழமாகவும் காளிதாஸ் 2 படத்தில் காட்டியிருக்கும் இயக்குனர் ஸ்ரீசெந்தில் காவல்துறை அதிகாரிகளிடம் இருக்கும் ஈகோ கிளாஷ், மற்றும் மேல் அதிகாரியின் ஆணைக்கு கீழ்ப்பட வேண்டிய நிர்பந்தம் ஆகியவற்றை சொல்லி இருக்கும் விதமும் பாராட்டுக்குரியது.
சஸ்பென்ஸ் திரில்லர் வகை படங்களை ரசிக்கும் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் படம் காளிதாஸ் 2
மதிப்பெண் 4/5


