Wednesday, October 21

குடிமகன் – விமர்சனம்

Loading

 

அன்பான் மனைவி, ஆசை மகனுடன் ஆனந்தமாக வாழபவர் ஜெயகுமார். மனைவியின் மடிமீது தலைவைத்தப்படி இருக்க, மகனும் வந்து அப்பாவின் மீது படுத்துக் கொள்ள, இந்த உலகத்தில் என்னைவிட அதிரஷ்டசாலி யாரும் இல்லை என்று சொல்கிறார் ஜெயகுமார். இப்படி இருந்த குடும்பம் எப்படி குடியால் நாசமானது என்பதுதான் குடிமகன் படத்தின் ஒரு வரிக் கதை.
வசிக்கும் கிராமத்தில் நடக்கும் நல்லது கெட்டது எதுவானாலும் கலந்து கொண்டு ஊருக்கே பிடித்த நல்லவனாக நடந்து கொள்கிறார் ஜெயகுமார். அந்த ஊர் அரசியல் பிரமுகர் மதுபானக்கடை ஒன்றை திறக்கிறார்.
குடிப்பழக்கம் உள்ள நண்பர்களின் தொடர்பால் ஜெயக்குமாருக்கும் அந்தப் பழக்கம் ஏற்படுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக குடிப்பழக்கத்துக்கு அடிமையாகும் ஜெயகுமார், ஒரு சந்தர்பத்தில் குடிப்பதற்காக மனைவியின் தாலியைத் திருடி கொண்டுபோய்விடுகிறார்.
இறுதியில் அவர் திருந்தி குடிப்பழக்கத்திலிருந்து மீண்டாரா இல்லையா என்பதுதான் மீதிக் கதை.
குடிப்பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு அதை விட முடியாமல் தவிக்கும் பாத்திரத்தில் நன்றாகவே நடித்திருக்கிறார் ஜெயகுமார். கணவனை அந்த கொடிய பழக்கத்திலிருந்து மீட்க முடியாமல்தவிக்கும் பாத்திரத்தை ஜெனிஃபர் மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்.
குடியை நிறுத்த ஜெயகுமார் அவராகவே போய் மருந்து வாங்கி சாப்பிடுவதும், அந்த சிகிச்சையில் இருக்குமபோதே மீண்டும் மது அருந்த ஆரம்பிப்பதும் மிகத் தவறான காட்சியமைப்புகள். டீ அடிக்ஷன் ட்ரீட்மெண்ட் என்பதில் ஆங்கில மருந்தாக இருந்தாலும் சரி நாட்டு மருந்தாக இருந்தாலும் சரி அந்த சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும்போதே மது அருந்தினால் மிகக் கடுமையான பின் விளைவுகள் ஏற்படும்.
தலைவலிக்கு அனாசின் சாப்பிடுவதுபோல் குடியை நிறுத்த மருந்து சாப்பிடுவதுபோல் படத்தில் காட்டியிருப்பதை கண்டிப்பாக தவிர்த்திருக்க வேண்டும்.
படத்தை தயாரித்து இயக்கியிருப்பவர் சத்தீஷ்வரன். மது அரக்கனால் குடும்பங்கள் எப்படி சீரழிந்து போகிறது என்ற நல்ல கருத்தை படத்தில் சொல்ல முன்வந்தற்காகவே ஒரு சபாஷ் போடலாம்.
விருதுக்கு போட்டி போடும் வகையில் ஒரு மிகச் சிறந்த படமாக உருவாக்கியிருக்க வேண்டிய கதைக் கருவை எடுத்துக்கொண்டு, அழுத்தமான காட்சியமைப்புகள் இல்லாத ஒரு சாதாரணப் படமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.