Thursday, October 29

லவ் மேரேஜ் _ விமர்சனம் 4/5

Loading

நடிகர்கள்: விக்ரம்பிரபு, சுஷ்மிதா, மீனாக்‌ஷி தினேஷ், ரமேஷ் திலக், கஜராஜ், அருள்தாஸ்

ஒளிப்பதிவு: மதன் கிறிஸ்டோபர்

இசை – ஷான் ரோல்டன்

படத்தொகுப்பு – பரத் விக்ரமன்

இயக்கம்: சண்முக ப்ரியன்

30 வயதைக் கடந்த பிறகும் திருமணம் ஆகாமல், பெண் தேடிக் கொண்டிருக்கும் விக்ரம் பிரபுவை உறவினர்களும் ஊர்க்காரர்களும் கிண்டல் செய்கின்றனர்.

சுற்றுவட்டாரப் பகுதியிலேயே எந்த பெண்ணும் அமையாததால் கோபிசெட்டிபாளையத்தில் ஒரு பெண்ணை பார்த்து நிச்சயம் செய்ய உறவினர்களுடன் புறப்படுகிறார் விக்ரம் பிரபு குடும்பத்தார்.

அழகு தேவதையாக இருக்கும் மணப்பெண் சுஷ்மிதாவை பார்த்ததும் விக்ரம் பிரபுவிற்கு மிகவும் பிடித்து விடுவதால் உடனே திருமணத்திற்கு ஓகே சொல்கிறார்.

நிச்சயதார்த்தம் முடிந்து ஊருக்கு புறப்படும் நேரத்தில் கோவிட் காரணமாக ஊரடங்கு போடப்படுகிறது.

எனவே மணப்பெண் வீட்டிலேயே விக்ரம் பிரபு குடும்பத்தினர் தங்கி ஆக  வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

எனவே வீட்டிலேயே திருமணத்தை எளிமையாக செய்து கொண்டு பின்னர் கோபிசெட்டிபாளையம் சென்று திருமண வரவேற்பை பெரிய அளவில் நடத்திக் கொள்ளலாம் என்று விக்ரம் பிரபு அப்பா திட்டமிடுகிறார்.

திருமணத்துக்கு முதல் நாள் இரவு மணப்பெண் சுஷ்மிதா ஓடிப் போய் விடுகிறார்.

ஏதோ ஒரு காரணத்தால் திருமணம் தள்ளிப் போகும் விக்ரம் பிரபுவுக்கு இந்தத் திருமணமும் கோவிட் காரணமாக தடைப்பட்டு விட்டது.

ஓடிப்போன மணப்பெண் என்ன ஆனார்?
இறுதியில் விக்ரம் பிரபுவுக்கு திருமணம் நடந்ததா?  யாருடன் நடந்தது? என்பதுதான் படத்தின் பிற்பகுதி.

‘லவ் மேரேஜ்’ படத்தில் ரசிக்க தகுந்த முதல் விஷயம் துவக்கத்திலிருந்து இறுதிவரை படத்தில் இழையோடும் மெலிதான நகைச்சுவைதான்.

திருமணத்துக்கு ஏங்கும் முரட்டு சிங்கிள் வேடத்தில் விக்ரம் பிரபு வெகு சிறப்பாகவே நடித்திருக்கிறார்.

வார்த்தைகளை அளந்து பேசும் நாயகி வேடத்தில் சுஷ்மிதாவும் அவரது வாயாடி தங்கை வேடத்தில் மீனாட்சியும் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து விக்ரம் பிரபுவுக்கு ஈடு கொடுக்கும் வகையில் நன்கு நடித்திருக்கின்றனர்.

மற்றும் விக்ரம் பிரபுவின் தந்தையாக வரும் கஜராஜ், மாமாவாக விரைப்பு காட்டும் அருள்தாஸ், மற்றும் நண்பனாக வரும் ரமேஷ் திலக் ஆகியோரும் தங்கள் அனுபவம் மிக்க நடிப்பால் காட்சிக்கு பலம் சேர்த்திருக்கின்றனர்.

‘அமைதிப்படை’ அமாவாசையின் வாரிசாக வரும் பௌர்ணமி சத்யராஜ் அரசியல்வாதியாக ஒரு காட்சியில் வந்தாலும் திரையரங்கையே கலகலப்பாக்கி விட்டு போய் விடுகிறார்.

திருமணம் தடைபட்டதால் சொந்த ஊருக்கு புறப்படும் விக்ரம் பிரபு குடும்பத்தாரை, சத்யராஜ் தடுத்து நிறுத்தி மணப்பெண் வீட்டிலேயே தங்க வைப்பது …. “சாரி கொஞ்சம் ஓவர்” ரக காட்சி என்றாலும் நகைச்சுவைப் படம்  என்பதால் இது போன்ற லாஜிக் மீறல்களை கண்டு கொள்ளத் தேவையில்லை.

காதலனுடன் ஓடிப் போவதற்கு முன் தன்னை மணக்க காத்திருக்கும் விக்ரம் பிரபுவை ஏமாற்றுகிறோமே குற்ற உணர்ச்சி கூட இல்லாமல் அவரது கன்னத்திலும் உதட்டிலும் முத்தம் கொடுக்கும் போது நாயகி சுஷ்மிதாவின் பாத்திரப்படைப்பு கேள்விக்குறியாகிறது.

ஷான் ரோல்டன் இசையில் உருவான பாடல்கள் மனதை வருடும் ரகம். பின்னணி இசையும் ரசிக்கும்படி அமைந்திருக்கிறது. பெரும்பாலான காட்சிகள் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் தான் நடக்கின்றன என்றாலும் படத்தை போர் அடிக்காத வகையில் சிறப்பாக கொண்டு சென்றதில் படத்தின் திரைக்கதைக்கு எவ்வளவு பங்கு உண்டோ, அவ்வளவு பங்கு படத்தின் ஒளிப்பதிவாளர் மதன் கிறிஸ்டோபருக்கும் உண்டு.

டிக்கட்டுக்கு செலவு செய்யும் பணம் வீண் இல்லை என்பதால் குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு சென்று ரசிக்கத்தக்க தரமான நகைச்சுவை படம் லவ் மேரேஜ்.

மதிப்பெண் 4/5