சூப்பர் சிங்கர் ஜூனியருக்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த மாரி செல்வராஜ்!

0

Loading

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், மாமன்னன் பாடலால் நிகழ்ந்த அற்புதம் !!

தமிழில் இசை உலகில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். தற்போது கோலாகலமாக நடந்து வரும் ஜூனியர் சூப்பர் சிங்கர் 9 வது சீசன் நிகழ்ச்சியில், கடந்த வார நிகழ்ச்சியில் வெகு நெகிழ்வான தருணமாக, இளம் பாடகி ஹர்ஷினி நேத்ராவை, நேரில் பாராட்டி மகிழ்ந்தார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

சாதி மறுப்பு திருமண தம்பதியின் மகள் ஹர்ஷினி நேத்ரா, எளிமையான குடும்பத்தைச்சேர்ந்த சிறுமி ஆவார். விழுப்புரம் நகரைச் சேர்ந்த இவரின் தந்தை ஒரு சிறு கடை நடத்தி வருகிறார். தன் மகளின் பாடகி ஆசையை நிறைவேற்ற அந்த குடும்பமே உழைத்து வருகிறது. சமூகத்தில் பல இன்னல்களைத் தாண்டி, பல புறக்கணிப்புகளைத் தாண்டி, தங்கள் மகள் ஹர்ஷினி நேத்ராவை இசையில் ஊக்கப்படுத்தி வருகின்றனர் அந்த தம்பதி.

தற்போது நடந்து வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இளம் சிறுமி ஹர்ஷினி நேத்ரா அனைவரையும் கவர்ந்து வருகிறார். முன்னதாக மிமிக்ரி குரலில் பாடி ஆச்சரியப்படுத்தினார். தன் வாழ்வின் வலியைச் சொல்லும் பாடல்களைத் தேர்ந்தெடுத்துப் பாடி நடுவர்களைப் பிரமிக்க வைத்தார். முன்னதாக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த கர்ணன், பரியேறும் பெருமாள் படங்களிலிருந்து பாடல்களைப் பாடி அசத்தினார்.

ஹர்ஷினி நேத்ரா பாடிய பாடல்களின் வீடியோவை நடுவர் ஆண்டனி தாசன் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு அனுப்பியிருந்தார். ஹர்ஷினி நேத்ராவின் பாடல்களில் ஈர்க்கப்பட்ட மாரி செல்வராஜ் இந்த வார நிகழ்ச்சியில் சர்ப்ரைஸாக கலந்துகொண்டார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இந்த வாரம் டெடிகேசன் ரவுண்ட் நடைபெற்றது. இந்த ரவுண்டில் பாடகர்கள் தங்களுக்குப் பிடித்த எவருக்கு வேண்டுமானாலும் பாடல்களை டெடிகேட் செய்து பாடலாம். இந்த நிகழ்ச்சியில் தனது பெற்றோருக்கு டெடிகேட் செய்து, மாமன்னன் படத்திலிருந்து நடிகர் வடிவேலு பாடிய தன்தானத்தானா பாடலை பாடினார். ஹர்ஷினியின் பாடலை மேடையின் பின்னாலிருந்து மாரி செல்வராஜ் டிவியில் பார்த்தார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் நிகழ்ச்சிக்கு வந்திருப்பது, நடுவர்கள் உட்பட எவருக்கும் தெரியாது. ஹர்ஷினி நேத்ரா பாடி முடித்தவுடன் சர்ப்ரைஸாக மேடையேறிய இயக்குநர் மாரி செல்வராஜ் அவரை கட்டியணைத்துப் பாராட்டினார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியதாவது..
ஒரு திரைப்படத்தை உருவாக்கும் போது, நம் கருத்து அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்று தான் உருவாக்குகிறோம், உண்மையில் இன்றைய தலைமுறை அதைப் புரிந்து கொள்வதை நேரில் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த குடும்பம் என்ன வலி அனுபவித்திருக்கும், இந்த குழந்தை என்ன மனநிலையில் இருப்பாள் என்பது எனக்குத் தெரியும், நானும் மேடைக்காக ஏங்கியவன் இன்று இந்த குழந்தை தன் உழைப்பில், இந்த மேடையைப் பெற்றிருக்கிறாள் என்பது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. யாருக்கும் பயப்படாமல், எந்த தடை வந்தாலும் கவலைப்படாமல் முன்னேறிப்போக வேண்டும் என ஹர்ஷினிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர், ஜூனியர் என பிரிவுகளாக இளைஞர்களுக்கும், சிறு வயதினருக்குமாக நடைபெறுகிறது. தற்போது சிறுவர்களுக்கான ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 9 வது சீசன் கோலாகலமாக நடந்து வருகிறது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பல எளிமையானவர்களின் வாழ்வில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் இந்த ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் பல அற்புதமான நிகழ்வுகள் நடந்து வருகின

திறமையால் ஒளிரும் பலருக்கு ஒரு சிறப்பான மேடையாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி விளங்கி வருகிறது.

Share.

Comments are closed.