‘ஒரு நொடி’ விமர்சனம்
மணிவர்மன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஒரு நொடி’ திரைப்படம் இன்று (ஏப்ரல் 26 – வெள்ளிக் கிழமை) திரையரங்குகளில் வெளியாகிறது. மதுரை அழகர் மூவிஸ் மற்றும் ஒயிட் லேம்ப் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை தயாரிப்பாளர் தனஞ்செயன் வழங்குகிறார்.
தமன் குமார், எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ.கருப்பையா, ஸ்ரீரஞ்சனி, கருப்பு நம்பியார், தீபா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கே.ஜி.ரத்தீஷ் ஒளிப்பதிவு செய்ய, சஞ்சய் மாணிக்கம் இசையமைத்துள்ளார்.
ஒரு நொடியில் நடந்து முடிந்துவிடும் ஒரு நிகழ்வு, ஒட்டுமொத்த வாழ்க்கையையும் எப்படி புரட்டிப்போட்டு விடுகிறது என்பதை திகிலும், த்ரில்லுமாக அளித்து உள்ளனர்.
மதுரை அருகே, போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார் எம்.எஸ். பாஸ்கர். தனது மகளின் திருமணத்துக்காக கடன் வாங்கி, திரும்ப அடைக்க முடியாமல் திண்டாடுகிறார். ஒரு வழியாக பணத்தை புரட்டி திருப்பித் தரவிருக்கும் தருணத்தில் எட்டு லட்சம் ரூபாய் பணத்துடன் காணாமல் போகிறார்.
அந்த நேரத்தில் அதே பகுதியில் வசிக்கும் நிகிதா என்ற இளம் பெண் கொலை செய்யப்படுகிறார்.
இந்த இரண்டு வழக்குகளையும் இன்ஸ்பெக்டர் தமன்குமார் விசாரிக்க ஆரம்பிக்கிறார். குற்றவாளி அவரா இவரா என்கிற பெண்டுல ஆட்டம் தொடங்குகிறது…
இறுதியில் யாருமே யூகிக்காத வகையில், குற்றவாளி இவர்தான் என அடையாளம் கண்டு கைது செய்கிறார் இன்ஸ்பெக்டர்.
அந்த கிளைமாக்ஸ் நிச்சயமாக யாரும் எதிர்பாராததுதான். அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
போலீஸ் இன்ஸ்பெக்டராக தமன் குமார். மிடுக்கான நடை உடை, கனத்த குரல் என்று இன்ஸ்பெக்டராகவே வாழ்ந்திருக்கிறார்.
எம்.எஸ்.பாஸ்கர் வழக்கம்போல இயல்பான நடித்து உள்ளார். கடனை திரும்பத் தர முடியாமல் படும் அவமானம், நண்பருடன் ஜாலியான அரட்டை என முதிய குடும்பத் தலைவரை கண் முன் நிறுத்துகிறார்.
அவரது நண்பராக வரும் கஜராஜூம் இயல்பான நடிப்பை அளித்து உள்ளார்.
நிகிதா, அழகர், ஸ்ரீரஞ்சினி, அருண் கார்த்திக், கருப்பு நம்பியார் உள்ளிட்டோரும் அருமையாக நடித்து உள்ளனர்.
வேல ராமமூர்த்தி, பழ. கருப்பையா, தீபா ஷங்கர் ஆகியோர் எப்போதும்போல் கொஞ்சம் அதீத நடிப்பை அளித்து உள்ளனர் என்றாலும் ரசிக்க வைக்கின்றனர்.
சலூன் கடைக்காரராக நடித்து உள்ள விக்னேஷ் ஆதித்யாவும் இயல்பான நடிப்பு.
சஞ்சய் மாணிக்கத்தின் இசையில் பாடல்கள் சிறப்பு. பின்னணி இசையும் ஈர்க்கிறது.
ஜெகன் கவிராஜ், சிவசங்கர், உதயா ஆகியோரின் பாடல் வரிகள் ரசிக்க வைக்கின்றன.
கே.ஜி.ரத்தீஷ் ஒளிப்பதிவு, படத்துக்கு பலம் சேர்க்கிறது.
ஒலி வடிவமைப்பு மிகவும் பிரமாதம்.
குறிப்பாக காவல் நிலையத்தில் நடக்கும் விசாரணைக் காட்சியில், அடுத்த அறையில் நடக்கும் மற்றொரு விசாரணை நம் இருக்கைக்கு அருகே இருந்து கேட்பதுபோல் ஒலிப்பதிவு செய்யப்பட்டிருப்பது அபாரம். இந்த அனுபவத்துக்காகவே திரையரங்கில் பார்க்க வேண்டிய படம் ‘ஒரு நொடி’.
ஹீரோயிசம் இன்றி நிஜமான ஒரு க்ரைம் ஸ்டோரியை அளித்துள்ளனர்.
வன்முறை ஆபாசம் இன்றி அனைவரும் ரசிக்கும் படி படமாக்கி உள்ள அறிமுக இயக்குநர் பி.மணிவர்மனுக்கு பாராட்டுகள்.
மதிப்பெண் 3.5/5