Wednesday, October 21

ரத்னம் _ விமர்சனம்

Loading

ரத்னம் _ விமர்சனம்

சிறுவயதில் தாயை இழந்த சிறுவன் ரத்னம் (விஷால்) தன்னை பாதுகாத்து வளர்க்கும் பன்னீர் செல்வத்துக்காக (சமுத்திரகனி) கொலை ஒன்றை செய்துவிடுகிறார்.

இதன் காரணமாக கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்படுகிறார்.
தண்டனைக் காலம் முடிந்து அவர் வெளியே வரும்போது, பன்னீர்செல்வம் எம்எல்ஏ ஆகியிருக்கிறார். அவருடனேயே இருந்து அடிதடி, பிரச்சினைகளில் ஈடுபட்டு வருகிறார் ரத்னம். அதுவும் நேர்மையாக. அதாவது அவரே சொல்வது போல, ‘கொள்கைகாக கொலை செய்யும் ரவுடி’.

ஒருநாள் எதிர்பாராத விதமாக இளம்பெண் மல்லிகா (ப்ரியா பவானி சங்கர்)வை சந்திக்கும் ரத்னம் அவர் மீது அளவு கடந்த பாசத்தை செலுத்துகிறார். அந்த பெண்ணை கொல்ல வரும் வில்லன்களை அடித்து துவம்சம் செய்கிறார்.
மல்லிகா மீது அவர் அன்பு செலுத்துவது ஏன், மல்லிகாவுக்கு என்ன பிரச்சினை, அதை தீர்த்துவைத்தாரா என்பதே சுவாரஸ்யமான மீதிக்கதை.

முரட்டு அடியாள் கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருக்கிறார் விஷால். சண்டைக் காட்சிகளில் தூள் பறத்துகிறார். அதே நேரம் தாயை நினைத்து கலங்கும் காட்சிகளில் நெகிழ வைக்கிறார். மொத்தத்தில் சிறப்பான நடிப்பை அளித்து உள்ளார்.

நாயகி ப்ரியா பவானி சங்கரும் தேர்ந்த நடிப்பை அளித்துள்ளார். தனது தாத்தா தாக்கப்பட்டதும் அரிவாளைத் தூக்கும் காட்சியில் கவனம் ஈர்க்கிறார்.
சமுத்திரகனி, விஜயகாந்த், யோகிபாபு, கவுதம் வாசுதேவ் மேனன் என அனைவருக்கும் பொருத்தமான கதாபாத்திரங்கள். அவர்களும் பாத்திரம் அறிந்து தங்கள் பங்குக்கு சிறப்பாகவே நடித்துள்ளனர்.

‘தாமிரபரணி’, ‘பூஜை’ படங்களுக்குப் பிறகு ஹரி – விஷால் இணையும் மூன்றாவது படம் இது.
வெறும் மசாலா படமாக இல்லாமல், தாய்ப்பாசம், நிலப் பிரச்சினை, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் அரசு கல்லூரியில் இடம் கிடைக்காத சூழல் என பல விசயங்களை இணைத்து இருக்கிறார், ஹரி.
மேலும், ஓட்டுக்கு பணம் வாங்குவதை கிண்டல் செய்வது, மதுவுக்கு எதிரான வசனங்கள் என தற்கால சூழலையிம் பகடி செய்திருக்கிறார்.

பொதுவாக ஹரி படங்களில் சென்டிமென்ட் காட்சிகள் சிறப்பாக இருக்கும். அந்த வகையில் இப்படத்தில் தாய்ப்பாசத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார்.

அதே நேரம் அதிரடி காட்சிகளுக்கும் குறைவில்லை. விரலை வெட்டுவது, ரத்தம் தெறிப்பது என ரணகளம்தான்.

மொத்தத்தில் குடும்பத்தினர் அனைவருக்குமான டீரீட் அளித்துள்ளார்கள்.

முரளிசர்மாவின் வில்லத்தனமும் எடுபடுகிறது. மேலும் ஜெயபிரகாஷ், மொட்டை ராஜேந்திரன், ஹரிஷ் பேரடி உள்ளிட்டோரும் சிறப்பாக நடித்து உள்ளனர்.

தேவிஸ்ரீபிரசாத்தின் இசையில் பாடல்கள் சிறப்பு. குறிப்பாக ‘உயிரே என் உயிரே’ பாடல் ஈர்க்கிறது. அதிரடியான பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்க்கிறது.
சிங்கிள் ஷாட்டும், சண்டைக்காட்சி ஒன்றில் அருவாளுடன் கேமரா பயணிக்கும் இடமும் ஒளிப்பதிவாளர் சுகுமாரின் தனித்துவத்தை உணர்த்துகிறது.

ஆக்‌ஷன்பட ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையும் கவர்வான் இந்த ரத்னம்.

மதிப்பெண் 3.5/5