Tuesday, November 17

மதிமாறன் _ விமர்சனம்

Loading

உருவ கேலி செய்து தமிழில் நிறைய படங்கள் வருவதுண்டு.

ஆனால் குள்ளமாக இருப்பது குறை அல்ல… குள்ளமாக இருப்பவர்களும் எல்லோரையும் போல் சாதிக்க முடியும் என்பதை அழகாகவும் அருமையாகவும் விளக்கி இருக்கும் படம்தான் மதிமாறன்.

வெங்கட் செங்குட்டுவனும், இவானாவும் இரட்டையர்கள். இருவரும் ஒரே கல்லூரியில் படிக்கின்றனர்.

இவர்களது தந்தை எம்எஸ் பாஸ்கர் தபால்காரராக பணியாற்றி வருகிறார்.

பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு சென்று கல்லூரி பேராசிரியர் ஒருவரை மணந்து கொள்கிறார் இவானா.

இதனால் மனம் உடைந்த எம் எஸ் பாஸ்கர் தன் மனைவியுடன் தற்கொலை செய்து கொள்கிறார்.

அக்காவை தேடி சென்னை வரும் வெங்கட் தன்னுடன் படித்த தோழி இன்ஸ்பெக்டராக இருப்பதை அறிந்து அவரது உதவியை நாடுகிறார்.

இன்ஸ்பெக்டர் தோழி மூலமே அக்காவின் இருப்பிடத்தை கண்டுபிடிக்கிறார்.

சென்னையில் இளம் பெண்கள் பலர் கொலை செய்யப்படுவதை அறியும் வெங்கட் தானாகவே ஆர்வம் கொண்டு புலனாய்வுகளை மேற்கொள்கிறார்.

இதில் அதிகாரப்பூர்வமாக புலனாய்வு மேற்கொள்ளும் இன்ஸ்பெக்டருக்கும் வெங்கட்டுக்கும் உரசல் ஏற்படுகிறது.

வெங்கட் சந்திக்கும் அவமானங்கள் என்னென்ன …?அவரால் கொலையாளியை கண்டுபிடிக்க முடிந்ததா….? என்பது தான் நீதிக்கதை.

நல்லதொரு கதைக்கு சிறப்பான முறையில் திரைக்கதை அமைத்தால் அப்படம் எப்படி விறுவிறுப்பாக அமையும் என்பதற்கு சிறந்த உதாரணம் மதிமாறன்.

குள்ள உருவத்தில் வரும் வெங்கட் செங்குட்டுவன் அருமையாக நடித்திருக்கிறார்.

தனது உருவத்தை கேலி செய்யும் போது கோபத்தை வெளிப்படுத்தும் காட்சியிலும்,  தானும் மற்றவர்களைப் போல் சராசரி மனிதன்தான் என்பதை நிரூபிக்க முயலும் போதும் நடிப்பில் கவனம் ஈர்க்கிறார்.

இவானாவும் சிறப்பான நடிப்பின் மூலம் தன் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார்.

சமீபகாலமாக வரும் படங்களில் எம் எஸ் பாஸ்கருக்கு சிறப்பானதொரு வேடம் அமைந்து அதில் முத்திரை பதிக்கும் வகையில் நடிக்கிறார். இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கல்ல.

அக்கா இவானாவும் தம்பி வெங்கட்டும் ஒருவர் மீது மற்றொருவர் கொள்ளும் பாசம் மிகுந்த காட்சிகள் ஒரு கவிதையை போல் அழகாக மனதில் பதிகிறது.

கார்த்திக் ராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும் மீண்டும் அவர் ஒரு ரவுண்டு வருவார் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

பர்வேஸின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலமாக நிற்கிறது.

நல்லதொரு கதைக் கருவை தேர்வு செய்து, அதை சரியான கோணத்தில் படமாக்கிய அறிமுக இயக்குனர மந்த்ரா வீரபாண்டியன் நம்பிக்கை தருகிறார். கிளைமாக்ஸ் காட்சி அதிர்ச்சி அளிக்கும் எதிர்பாராத திருப்பம்.

சில படங்கள் மட்டுமே நல்லதொரு படத்தைப் பார்த்த மனத்திருப்தியை தரும்.மதிமாறன் அந்த வகை படமே.

மதிப்பெண் 3.5 /5