பஞ்சாயத்து தேர்தல்களில் பட்டியலின மக்கள் மட்டுமே போட்டியிட முடியும் என்று அரசாங்கமே ரிசர்வ் தொகுதி என ஒதுக்கி கொடுத்தாலும், பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிட முடியாமலும், போட்டியிட்டால் ஆதிக்க சக்திகளால் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதையும் அப்பட்டமாக விவரிக்கும் படம் நந்தன்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வணங்கான்குடியின் ஊராட்சி மன்ற தலைவராக ஆதிக்க ஜாதியை சேர்ந்த கோப்புலிங்கம் குடும்பமே பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த நிலையில் அரசாங்கம் திடீரென வணங்கான் குடி கிராமத்தை தனி தொகுதியாக அறிவித்து விடுகிறது.
இதன் காரணமாக கோப்புலிங்கம் தன் வீட்டில் வேலை செய்யும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அம்பேத்குமாரை தலைவர் பதவிக்கு போட்டியிட செய்கிறார்.
கோப்பு லிங்கத்தையே தெய்வமாக நினைத்து, அவரது வாக்கையே வேதவாக்காக நினைக்கும் அம்பேத்குமார் பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்றாலும் அவரால் எந்த பணியையும் செய்ய முடியாமல் ஆதிக்க சக்திகள் தடுக்கின்றன.
தலைவர் நாற்காலியில் கூட அவரால் அமர முடியவில்லை. சுதந்திர தினத்தன்று தேசீயக் கொடியை ஏற்ற முடியவில்லை. இந்தப் பிரச்சினைகளை அம்பேத்குமார் எப்படி எதிர்கொள்கிறார்? இறுதியில் என்ன நடக்கிறது என்பதுதான் நந்தன் படத்தின் கதை.
எப்போதும் வெற்றிலை மென்று கொண்டிருக்கும் வாயுடன், கைகட்டி வாய் பொத்தி எப்போதும் தரைமட்ட அளவுக்கு பணிவு காட்டும் அம்பேத்குமார் வேடத்தில் நெஞ்சில் நிறைகிறார் சசிகுமார்.
நடை உடை பாவனைகளிலேயே தனது ஆதிக்க சாதியை வெளிப்படுத்தும் கோப்புலிங்கம் வேடத்தில் இயக்குனர் சக்திவேல் பாலாஜி சக்திவேல் அமர்க்களமாக நடித்திருக்கிறார். படுத்துக்கொண்டே ஜெயித்தவர் என்றால் அது இயக்குனர் ஜி.எம். குமார்தான். கோப்பு லிங்கத்தின் தந்தை பாத்திரத்தில் மரணத்தின் வாசலில் நின்றாலும் சற்றும் குறையாத ஜாதித் திமிரை நன்றாகவே வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஆர்வி சரணின் ஒளிப்பதிவும் நெல்சன் ஆண்டனியின் எடிட்டிங்கும் படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கின்றன.
ஜிப்ரன் இசையில் உருவான பாடல்கள் சுமார் ரகம் என்றாலும் பின்னணி இசை படத்தை உயிர்ப்புடன் கொண்டு செல்ல உதவியிருக்கிறது.
படத்தின் இறுதிக் காட்சியில் நாயகன் எடுக்கும் அரசியல் ரீதியான முடிவு நம்பிக்கை நாற்றுக்களை விதைக்கிறது. பட்டியலின பஞ்சாயத்து தலைவர்கள் படும் அவஸ்தைகளை டாக்குமென்டரி பாணியில் படத்தின் முடிவில் காட்டி இருப்பதை பார்க்கும்போது, இன்னும் எத்தனை காலம்தான் இந்த கொடுமைகள் எல்லாம் நீடிக்குமோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.
தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் பஞ்சாயத்து தலைவர் ஆனாலும் இந்த வகை கொடுமைகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பது எல்லா மாநிலங்களும் நடக்கத்தான் செய்கிறது. எனவே இந்தப் படத்தையும் எல்லா மாநிலங்களிலும் திரையிடலாம். ஒரு வகையில் இதுவும் ஒரு பான் இந்தியா திரைப்படம்தான்.
கதை வசனம் எழுதி இயக்கிய இரா சரவணனுக்கு பாராட்டுக்கள்.
சிறந்த படத்துக்கான பல விருதுகளை பெறப்போகும் படம் நந்தன்.