Sunday, July 19

படைதலைவன் _ விமர்சனம்

Loading

படைதலைவன் _ விமர்சனம்

விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கும் படம் படை தலைவன்.

பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள சேத்துமடை பகுதியில் கஸ்தூரிராஜா தனது மகன் சண்முக பாண்டியன் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார்.

மணியன் என்ற கம்பீரமான யானை ஒன்றும் இவர்கள் குடும்பத்தில் ஒரு உறுப்பினர் போலவே வளர்ந்து வருகிறது.

கோடி கணக்கான ரூபாய் சம்பாதிப்பதற்காக யானை மணியனை வன காளிக்கு பலி கொடுக்க திட்டமிடுகிறான் வில்லன்.

இதற்காக பல சதி வேலைகளை செய்து யானையை காட்டுக்குள் கடத்திச் சென்று விடுகிறான் வில்லன்.

யானையைத் தேடிச் செல்லும் சண்முக பாண்டியன் மற்றும் அவரது நண்பர்கள் இருவரும் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன?

பலி கொடுக்கப்பட இருந்த யானை மணியனை எப்படி அவர்கள் காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் படைத்தலைவன் படத்தின் கதை.

சண்டை காட்சிகளில் அப்பா விஜயகாந்த் போலவே அதிரடி காட்டும் சண்முக பாண்டியன் சென்டிமென்ட் காட்சிகளிலும் குறை கூற முடியாத அளவுக்கு சிறப்பாகவே நடித்திருக்கிறார்.

படத்தில் தனக்கு ஜோடி இல்லை, டூயட் பாடல் இல்லை என்றாலும் துணிந்து தனது நடிப்பு திறனை மட்டுமே நம்பி படைத்தலைவன் படத்தில் நடித்திருக்கிறார் சண்முக பாண்டியன்.

இந்தத் துணிச்சலுக்காகவே அவரை வாழ்த்தி வரவேற்போம்.
ஏ ஐ தொழில் நுட்பத்தில் உருவான விஜயகாந்த் தோன்றும் காட்சி படத்தின் ஹைலைட் .
சிறப்பான தொழில்நுட்பத்தில் அருமையாக உருவாக்கப்பட்ட விஜயகாந்தின் தோற்றம் அமர்க்களமாக இருக்கிறது.

விஜயகாந்த் வரும் இந்தக் காட்சியில் திரையரங்கமே விசில் சத்தத்திலும் கைதட்டல்களிலும் அதிர்கிறது.

கடன் பட்டு அதை அடைக்க முடியாமல் நிற்கும் சண்முக பாண்டியனின் தந்தையாக இயக்குனர் கஸ்தூரிராஜா நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

மற்றும் முனீஷ்காந்த், அருள் தாஸ் ஆகியோரும் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து திறம்பட நடித்து படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறார்கள்.

படைத்தலைவன் படத்தில் பாராட்டப்பட வேண்டிய முதல் நபர் ஒளிப்பதிவாளர் எஸ் ஆர் சதீஷ்குமார்தான். இயற்கை வனப்பு மிகுந்த அடர்ந்த காடுகளையும் மலைகளையும் அட்டகாசமான கேமரா கோணங்களில் அற்புதமாக படமாக்கி படத்தை வேறு உயரத்திற்கு எடுத்துச் செல்கிறார் ஒளிப்பதிவாளர் சதீஷ்குமார். இளையராஜா இசையில் உருவான பாடல்கள் பரவாயில்லை ரகம் தான் என்றாலும் பின்னணி இசையில் ஜமாய்த்திருக்கிறார் ராஜா.
படத்தை இயக்கி இருப்பவர் யூ அன்பு.
புதைபொருள் ஆய்வில் கிடைத்ததை போல் இப்படி ஒரு அரதப்பழசான கதைதான் படத்தின் மைனஸ் பாயிண்ட். படம் துவங்கிய சில நிமிடங்களிலேயே முழு கதையையும் காட்சிகளையும் சாதாரண முன் வரிசை ரசிகன்கூட சொல்லி விடலாம். அந்த அளவுக்கு தான் இருக்கிறது இந்த திரைப்படத்தின் கதை.
அடுத்த படத்திலாவது கதை விஷயம் இன்னும் கவனம் செலுத்தி நல்ல கதையை தேர்வு செய்து நடிக்க வேண்டும் சண்முக பாண்டியன்.