படையாண்ட மாவீரா _ விமர்சனம்
மாவீரன் என்ற பட்டத்துடன் வாழ்ந்த காடுவெட்டி குருவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் படையாண்ட மாவீரா.
ஆதிக்க சக்திகளுக்கு எதிராக களத்தில் நின்று மக்களுக்காக போராடிய குரு பாத்திரத்தில் இயக்குனர் வ.கவுதமன் தோன்றி நடித்திருக்கிறார்.
காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் தீனா ஓர் ஏழைப் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததை அறியும் குரு, அதற்கு நியாயம் கேட்கச் சென்றபோது போலீஸ்காரர்களுடன் ஏற்பட்ட மோதலில் அவர்களை அடித்து துவம்சம் செய்து போலீஸ் நிலையத்தையே சூறையாடுகிறார்.
அதே சமயம் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏழை மக்களின் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து பொதுமக்களுடன் சேர்ந்து போராட்டத்திலும் இறங்குகிறார்.
முதலாளிகளும் போலீஸ் அதிகாரிகளும் சேர்ந்து குருவை தீர்த்து கட்டுவதற்கு முயற்சி செய்கின்றனர். இதன் முடிவு என்ன என்பதுதான் படையாண்ட மாவீரன் படத்தின் கதை.
அனல் கக்கும் கண்களுடன், கோபம் கொப்பளிக்க உணர்ச்சிகரமாக பேசி நடித்திருக்கும் கவுதமன், காடுவெட்டி குரு பாத்திரமாகவே இப்படத்தில் வாழ்ந்து காட்டி இருக்கிறார்.
லாரி நிறைய பணத்தை கொண்டு வந்து கொட்டத் தயாராக கார்ப்பரேட் முதலாளிகள் இருந்தாலும், அதற்கெல்லாம் மசியாமல் மக்கள் பக்கத்தில் நின்று நியாயம் கேட்பதிலாகட்டும், தன்னை கொலை செய்ய கூலிப்படையை ஏற்பாடு செய்திருக்கும் மதுசூதனராவ் வீட்டுக்கே சென்று தூங்குவதாகட்டும் மிரட்டலாக நடித்திருக்கிறார் கவுதமன்.
அவரது மனைவியாக வரும் பூஜிதா பொன்னடா, தந்தையாக வரும் சமுத்திர கனி, இளம் வயது கவுதமனாக வரும் தமிழ் கவுதமன் ஆகியோரும் கொடுத்த பாத்திரத்தை குறைவின்றி செய்திருக்கின்றனர்.
கவுதமனை ஈன்றெடுத்த வீரத்தாய் வேடத்தில் சரண்யா பொன்வண்ணன் வெளுத்து கட்டி இருக்கிறார்.
விதம் விதமான வில்லன் வேடங்களில் வந்த மன்சூர் அலிகான் இப்படத்தில் கவுதமனுக்கு உறுதுணையாக இருந்து உதவும் குணசித்திர வேடத்தில் கவனம் ஈர்க்கிறார்.
ஜிவி பிரகாஷ் இசையில் உருவான பாடல்களுக்கு வைரமுத்துவின் வார்த்தைகள் படத்துக்கு வலிமை சேர்க்கின்றன.
பின்னணி இசையை கையாண்ட சாம் சி எஸ் பங்கும் குறிப்பிடத்தக்கது.
கிராமத்து அழகை கோபி ஜெகதீஸ்வரன் கேமரா ரசிக்கத்தக்க வகையில் படமாக்கி இருக்கிறது.
மக்களுக்காக போராடுவது, கார்ப்பரேட் முதலாளிகளை எதிர்ப்பது ஆகிய காட்சிகளே திரும்பத் திரும்ப வருவது போல் படத்தின் திரைக்கதை அமைந்திருப்பதை சற்றே மாற்றி, விறுவிறுப்பான முறையில் திரைக்கதை அமைத்திருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.