![]()
மிராய் _ விமர்சனம்
நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஸ்ரேயா சரண், தனக்கு பிறக்கும் மகன் ஓர் இனத்தையே காக்க வேண்டிய பெரும் பொறுப்பில் இருப்பதை.
ஆனால் அவருக்குப் பிறந்து வளர்ந்து வாலிபனாக உலா வரும் தேஜா சஜ்ஜா சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபட்டு ஜாலியாக ஊரை சுற்றி வருகிறார்.
அவரை சந்திக்கும் ரித்திகா நாயக் இந்த உலகையே ஆள்வதற்கு ஆற்றலைத் தரும் ஒன்பது புனித நூல்களை தேடி ஒரு தீய சக்தி கொடூர பலத்துடன் இயங்குவதையும், அதை தடுக்க வேண்டிய பொறுப்பு இருப்பதையும் தேஜாவுக்கு சுட்டிக் காட்டுகிறார்.
இந்தக் கொடூர சக்தியை அடக்கி அழிப்பதற்கு ராமர் காலத்தில் இருந்த மிராய் என்ற ஆயுதத்தை கண்டுபிடித்து எடுக்க வேண்டும் என்றும், அப்போதுதான் ஒன்பது புனித நூல்களை தேடும் தீய சக்தியை அழிக்க இயலும் என்றும் கூறுகிறார்.
மிராய் ஆயுதத்தை தேடி தேஜா சஜ்ஜா மேற்கொள்ளும் பயணமும், அதை கண்டுபிடித்து எடுத்து வந்து தீய சக்தியை அழித்தொழிப்பதும்தான் மிராய் படத்தின் கதை.
ஹனு_மேன் படத்தின் மூலம் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட தேஜா சஜ்ஜா, பேண்டஸி கதை அம்சம் கொண்ட மிராய் படத்திலும் ரசிகர்களை வெகுவாகவே கவர்கிறார்.
படத்தின் நாயகன் பாத்திரம் உயர்ந்து நிற்க வேண்டுமானால் எதிர்மறையான வில்லன் வேடமும் பலம் பொருந்தியதாக இருக்க வேண்டும்.
கிட்டத்தட்ட நாயகனுக்கு இணையான எதிர்மறை பாத்திரத்தில் மனோஜ் மஞ்சு அசத்தலாக நடித்திருக்கிறார்.
இவர்கள் இருவருக்கும் நடக்கும் சண்டைக் காட்சிகளில் பொறி பறக்கின்றன.
இதிகாச காலத்து ராமாயணம், சரித்திர காலத்து சாம்ராட் அசோகர் என்று மிராய் கதை தொட்டுச் செல்வதெல்லாம் ரசிகர்களுக்கு விஷுவல் விருந்து.
படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஸ்பெஷல் எஃபெக்ட் காட்சிகளும், ஒளிப்பதிவும்தான்.
படத்தை எழுதி இயக்கிய கார்த்திக் கட்டம்னேனி தான் ஒளிப்பதிவு இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக தன்னைத் தாக்க வரும் ராட்சதப் பறவையை அடக்கி அதன் மீது ஏறி நாயகன் சவாரி செய்வது, பாதம் புதையும் அளவுக்கு இருக்கும் பனியில் நடந்து செல்வது, என்று பல காட்சிகளையும் சொல்லலாம்.
ஸ்ரீநாகேந்திரா தங்காலாவின் அரங்க அமைப்பு மற்றும் கௌரா ஹரியின் பின்னணி இசை ஆகியவை படத்துக்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கின்றன.
ஆங்கில படங்களுக்கு சவால் விடும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் மிராய் படத்தின் விஷுவல் விருந்து காட்சிகளுக்காகவே குழந்தைகளுடன் சென்று தாராளமாக கண்டு மகிழலாம்.
மதிப்பெண்3.5/5


