Monday, December 2

பணி _ விமர்சனம்

Loading

பணி _ விமர்சனம்

கேரள மாநிலம் திருச்சூரில் தன் நெருங்கிய உறவினர்களுடன் மிகப்பெரிய தாதாவாக வலம் வருகிறார் ஜோஜூ ஜார்ஜ்.

மெக்கானிக்காக இருந்து கொண்டே,  நிழலான காரியங்களில் ஈடுபட்டு வரும் இரண்டு இளைஞர்கள் திட்டமிட்டு ஒரு கொலை செய்கின்றனர்.

கொலை செய்யச் சொன்னவரிடம் பேசிய பணத்தை வாங்குவதற்காக சூப்பர் மார்க்கெட் ஒன்றில் காத்திருக்கும் போது,  ஜோஜூ ஜார்ஜ் மனைவி அபிநயா அங்கே வருகிறார்.

அபிநயாவின் அழகில் மயங்கி அவரிடம் சில்மிஷத்தில் ஈடுபடுகின்றனர் இந்த இளைஞர்கள். இதை அறிந்த ஜோஜூ ஜார்ஜ் இளைஞர்கள் இருவரையும் சகட்டுமேனிக்கு அடித்து துவைத்து எடுக்கிறார்.

வெகுண்டு எழுந்த இளைஞர்கள் இருவரும் அபிநயாவின் வீட்டுக்கே சென்று அங்கு தனியாக இருக்கும் அவரை பாலியல் பலாத்காரம் செய்கின்றனர்.

தன் மனைவி மீது கை வைத்தவர்களை சும்மா விடுவாரா தாதா? வெறிகொண்டு அவர்கள் இருவரையும் தேடுகிறார். ஆனால் அவர்களோ இவரிடம் சிக்காமல் ஆடு புலி ஆட்டம் ஆடுகின்றனர்.

இறுதியில் வென்றது யார் இளைஞர்கள் இருவருமா? அல்லது நகரையே ஆட்டிப்படைக்கும் தாதாவா? 

படத்தின் சிறப்பம்சங்களில் முதலிடம் பெறுவது விறுவிறுப்பான திரைக்கதைதான். 

துவக்கத்திலிருந்து இறுதிவரை டெம்போ சற்றும் குறையாமல் பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே எழுத்து வருகிறது பணி திரைப்படம்.

பல படங்களில் நடிகராக முத்திரை பதித்த ஜோஜூ ஜார்ஜ் முதல்முறையாக இயக்கியிருக்கும் பணி படத்தின் மூலம் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கிறார் என்று தாராளமாக சொல்லலாம்.

படத்தின் துவக்கத்தில் வரும் காட்சியில், ஜவுளிக்கடை உரிமையாளர் ஒருவரை கன்னத்தில் அறைந்து பணத்தை வாங்கும் காட்சி ஒன்றே போதும்ஜோஜூ  ஜார்ஜ் பாத்திரத்தை விளக்குவதற்கு. அவருக்கு இப்படத்தில் அதிக வசனம் கூட கிடையாது உடல் மொழியிலேயே தான் ஏற்ற பாத்திரத்திற்கு கம்பீரம் சேர்த்து அசத்தலான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

சாம் சி எஸ் இசை மற்றும் விண்டோ ஜார்ஜ் ஒளிப்பதிவு இரண்டுமே  படத்துக்கு மிகப் பெரிய பலம். குறிப்பாக கார் துரத்தல் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் ஒளிப்பதிவாளர் திறமைக்கு சான்று.

படத்தின் கடைசி காட்சி இதுவரை எந்த படத்திலும் வராத மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி என்றால் மிகை இல்லை.

எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு வந்த உதயம் திரைப்படம் எப்படி இன்றளவும் பேசப்படுகிறதோ அதுபோல் ஜோஜி  ஜார்ஜின் கேங்ஸ்டர் வகையான பணி படமும் இன்னும் பல ஆண்டுகளுக்குப் பிறகும் பேசப்படும் என்பதில் ஐயமில்லை.

கேங்ஸ்டர் படத்தில் சென்டிமென்டையும் புகுத்தி இருப்பது ரசிக்க வைக்கிறது.

கண்டிப்பாக பார்க்க வேண்டிய படங்களின் பட்டியலில் இதை தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம்.

மதிப்பெண் 3.5/5