Tuesday, November 17

பரமசிவன் பாத்திமா _ விமர்சனம்

Loading

 

பரமசிவன் பாத்திமா _ விமர்சனம்

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியில் உள்ள சுப்ரமணியபுரம் மற்றும் யாக்கோபுரம் என்ற இரண்டு கிராமங்களில் இரண்டு வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

யாக்கோபுரத்தில் நடந்த திருமணம் ஒன்றின் வரவேற்பு விழா முடிந்ததும் அன்று இரவே மணமகன் மர்மமான முறையில் மரணமடைந்து கிடக்கிறார்.

இதைப்போலவே சுப்பிரமணியபுரத்திலும் புது மாப்பிள்ளை ஒருவர் மரணமடைகிறார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் இசக்கி கார்வண்ணன் தலைமையில் போலீசார் விசாரணையை துவக்குகின்றனர்.

திருமண சமயத்தில் மணமகனை மட்டுமே குறிவைத்து கொலைகள் நடக்க காரணம் என்ன? இதன் பின்னணியில் இருக்கும் மரணம் என்ன என்பதுதான் பரமசிவன் பாத்திமா படத்தின் கதை.

காதலுக்கு எதிராக இருக்கும் ஜாதிகளை பற்றிய படங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கையில் இந்தப் படம் காதலுக்கு எதிராக நிற்கும் மதத்தை குறி வைக்கிறது.

வழக்கமான ‘டிபிக்கல் ஹீரோ’ வேடமாக இல்லாமல், காதலுக்கு எதிராக நிற்கும் மதவெறியர்களை எதிர்த்து போராடுவது, அதனால் பாதிக்கப்பட்டு மரணத்தை தழுவுவது என்று நடிப்பதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ள அருமையான வேடத்தை நிறைவாகவே செய்திருக்கிறார் நாயகன் விமல்.

கதாநாயகி சாயாதேவி எதிரிகளை பழிவாங்கும் காட்சிகளில் விமலுக்கு துணையாக நின்று, தன் கோபத்தை வெளிப்படுத்தும் காட்சிகளில் சோபிப்பதுடன், விமலுடனான காதல் காட்சிகளிலும் கவனம் ஈர்க்கிறார்.

மக்களை மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபடும் கிறிஸ்தவ பாதிரியாராக வரும் எம் எஸ் பாஸ்கர் நடிப்பில் நன்றாகவே ஸ்கோர் செய்கிறார்.

படத்தின் ஒளிப்பதிவாளர் சுகுமார் தான் நாயகியின் அண்ணன் வேடத்தில் முதல் முறையாக நடித்திருக்கிறார். நடித்த முதல் படத்திலேயே முத்திரை பதித்த சுகுமாருக்கு வாழ்த்துகள்.

அவரது மீசையும் அதை மிருதுவாக முறுக்கியபடி பேசும் உடல் மொழியும் மிரட்டலாக அமைந்திருக்கின்றன.

தீபன் சக்கரவர்த்தி இசையமைப்பில் உருவான பக்தி பாடல் ரசிக்க வைக்கிறது.

சிறுமலை பகுதியின் இயற்கை எழில் கொஞ்சம் அழகை அப்படியே தன் கேமராவில் அள்ளிக் கொண்டு வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுகுமார்.

மத வெறியர்களால் கொல்லப்பட்ட காதலர்கள் ஆவிகளாக வந்து பழிவாங்குகிறார்கள் என்பதெல்லாம் காதில் பூ வைக்கும் அல்ல… அல்ல… பூந்தோட்டத்தையே வைக்கும் கதை என்றாலும் அதை ரசிக்கும்படி திரையில் கொடுத்திருக்கிறார் இயக்குனர் இசக்கி கார்வண்ணன்.