![]()

ராஜபீமா விமர்சனம்
மனிதனுக்கும் யானைக்கும் உள்ள பாசப்பிணைப்பை விளக்கும் திரைப்படம் ராஜபீமா.
ஆரவ் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் ஆஷிமா நர்வால், ஓவியா, யாஷிகா ஆனந்த் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
காலில் காயம்பட்டு அவஸ்தைப்படும் ஒரு யானையை சிறுவனாக இருக்கும்போது ஆரவ் காப்பாற்றி முதலுதவி செய்கிறார். அப்போது முதல் அந்த யானை அவரிடம் பிரியமாக இருக்கிறது. செல்லப்பிராணியை வளர்ப்பது போல் அந்த யானையை தன் வீட்டில் வைத்து வளர்க்கிறார ஆரவ். ஆரவ்வின் தந்தையான நாசரும் தனது மற்றொரு மகனைப் போல் அந்த யானையிடம் பிரியமாக நடந்து கொள்கிறார்.
பீமா என்ற பெயரிடப்பட்ட அந்த யானை எல்லோருக்கும் பிடித்தமானதாகவே இருக்கிறது. யானைகளைக் கொன்று தந்தத்தை கடத்தும் கும்பலை ஆரவ் போலீசில் பிடித்துக் கொடுக்கிறார்.
இதன் காரணமாக கடத்தல் கும்பல் தலைவன் ஆரவ்வை பழிவாங்கத் துடிக்கிறான்.
பீமாவுக்கு மதம் பிடித்து விட்டது என்று பொய் புரளியை கிளப்பி விட்டு, அதிகாரிகள் மூலம் யானைகள் புத்துணர்வு முகாமுக்கு அனுப்பி விடுகிறான்.
தனது பீமாவை மீட்கதற்காக புத்துணர்வு முகாமுக்கு செல்லும் ஆரவ்விற்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.
அதிகாரிகளிடம் இருக்கும் ஆவணப்படி பீமா என்று வேறு ஒரு யானையை காட்டுகிறார்கள். ஆரவ் வளர்க்கும் செல்ல பீமா அந்த யானைகள் முகாமிலேயே இல்லை. உண்மையில் பீமா எங்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறது? எதற்காக கொண்டு செல்லப்பட்டு இருக்கிறது? என்பதையெல்லாம் விறுவிறுப்பான காட்சிகள் மூலம் விளக்குகிறது ராஜ பீமா. கதாநாயகன் வேடம் ஏற்றிருக்கும் ஆரவ்விற்கு அவரது உயரமும் உடல் மொழியும் சண்டை காட்சிகளில் வெகுவாகவே கை கொடுத்திருக்கிறது. அதுமட்டுமின்றி யானையிடம் உள்ள பாசப்பிணைப்பை வெளிப்படுத்தும் காட்சிகளில் அவரது நடிப்பு திறனும் பளிச்சிடுகிறது. சில உணர்ச்சிகரமான காட்சிகளில் நெகழ வைக்கிறார் ஆரவ். வேண்டுதல் நிறைவேற ஆட்டையோ கோழியையோ சாமிக்கு பலி கொடுப்பார்கள். ஆனால் அமைச்சர் வேடம் ஏற்றிருக்கும் கே எஸ் ரவிக்குமாரோ யானை பீமாவையே பலி கொடுக்க முயற்சி செய்கிறார். பல காட்சிகளில் தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையாக நடித்து படத்துக்கு கலகலப்பு பூட்டுகிறார் கே எஸ் ரவிக்குமார்.
சைமன் கே கிங் இசையில் உருவான பாடல்கள் சுமார் ரகம் என்றாலும் பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். எடுத்துக்கொண்ட கதைக்கு குறை சொல்ல முடியாதபடி நேர்த்தியான முறையில் திரைக்கதை அமைந்திருப்பதால் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் நரேஷ் சம்பத்.
குழந்தைகளையும் பெரியவர்களையும் ஒருசேர கவரும் வகையில் உருவாக்கப்பட்ட ராஜ பீமா திரைப்படத்தை அனைவரும் தாராளமாக ஒருமுறை கண்டு ரசிக்கலாம்.

