Wednesday, October 28

இராக்கதன் — திரைப்பட விமர்சனம்

Loading

மாடல் உலகின் இருண்ட பக்கத்தை இந்த அளவுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய படம் வந்தது இல்லை என்று தான் கூற வேண்டும்.

கிராமத்தில் வசிக்கும் விக்னேஷ் பாஸ்கருக்கு மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும் என்பதுதான் லட்சியம்.

அவரது நெருங்கிய நண்பர்கள் தினேஷ் கலைச்செல்வன் மற்றும் காயத்ரி ரெமோ.

மாடல் உலகின் முக்கிய புள்ளியான ரியாஸ் கான் மாடல் ஆவதற்கான பயிற்சி நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

அவர் மூலமே மாடலிங் துறையில் நுழைந்து சாதிக்க நினைக்கிறார் விக்னேஷ் பாஸ்கர்.

மாடலிங் பயிற்சி என்ற பெயரில் சில நிழலான காரியத்தை செய்து வருகிறார் ரியாஸ்கான். அதாவது மாடலிங் செய்வதற்கு பயிற்சி என்ற பெயரில், வசதி படைத்த பெண்களின் உடல் இச்சையை தீர்ப்பதுதான் ரியாஸ்கான் செய்யும் மறைமுக வேலை.

இந்த அநாகரீக செயல்கள் காரணமாக விக்னேஷ் பாஸ்கருக்கு சில பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

இந்த நிலையில் நண்பனை தேடிக் கொண்டு தினேஷ் கலைச்செல்வனும்  காயத்ரி ரமாவும் நகரத்துக்கு வருகின்றார்கள்.

அப்போது ஹோட்டல் அறை ஒன்றில் விக்னேஷ் பாஸ்கர் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். தினேஷ் செல்வன் மீது கொலை பழி விழுகிறது.

அவர் அதிலிருந்து விடுபட்டாரா விக்னேஷ் பாஸ்கரை கொன்றது யார் என்பதை விவரிக்கும் படம் தான் இராக்கதன்.

நண்பன் வேடத்தில் சிறப்பாக நடித்திருக்கும் தினேஷ் கலைச்செல்வன் தான் இந்த திரைப்படத்தை இயக்கியும் இருக்கிறார்.

மாடல் உலகில் ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்… குறிப்பாக அவர்களை பெண்களுக்கு இரையாக்கி விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது போன்றவற்றை துணிச்சலுடன் சொன்ன காரணத்திற்காகவே இயக்குனரை பாராட்டலாம். நாயகனாக நடிக்கும் விக்னேஷ் பாஸ்கர் விபச்சார கும்பலிடம் சிக்கிக் கொண்டு அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் காட்சியில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

அரவாணியின் உடல் மொழியை அப்படியே பிரதிபலிக்கும் ரியாஸ் கானின் நடிப்பு கவனம் இருக்கிறது.

நிழல்கள் ரவி சாம்ஸ் போன்றவர்கள் இருந்தாலும் அவர்களை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

மானஸ் பாபுவின் கேமராவும், பிரவீன் குமாரின் பின்னணி இசையும் சுமார் ரகம்தான்.

தமிழ் திரையுலகில் இதுவரை சொல்லாத பிரச்சனையை கதையாக கையில் எடுத்து படமாக்கியதற்காகவே படக்குழுவை பாராட்டலாம். வுத்தியாசமான முயற்சி என்பதற்காக வேண்டுமானால் இராக்கதன் படத்தை பார்க்கலாம்